Published : 03 Jan 2018 11:40 AM
Last Updated : 03 Jan 2018 11:40 AM
சிலரது தேவையற்ற தலையீடு எனது உழைப்பை வீணாக்கிவிட்டது என்று 'பலூன்' இயக்குநரின் ட்விட்டர் பதிவால் சர்ச்சையாகியுள்ளது.
சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, யோகி பாபு, ஜனனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பலூன்'. யுவன் இசையமைத்துள்ள இப்படம் டிசம்பர் 29-ம் தேதி வெளியானது. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்கள்.
இந்நிலையில் இயக்குநர் சினிஷ் தான் மகிழ்ச்சியில் இல்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவால் சர்ச்சை உருவாகியுள்ளது. 'பலூன்' இயக்குநர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
'பலூன்' வெற்றி... தொடர்பாக படத்தின் சில தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியில் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் சூழலில் நான் இல்லை.
சிலரது தேவையற்ற தலையீடு எனது உழைப்பை வீணாக்கிவிட்டது. திரைத்துறையின் தொழில் நடைமுறை தெரியாத சிலரால் எனது படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த தாமதத்தால் படத்தின் பட்ஜெட் அதிகரித்தது. இதனால் தயாரிப்பாளர்கள் சிலருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் ஏற்பட்ட பொருள் நஷ்டத்திற்கு யாரோ ஒருவரை மட்டும் பொறுப்பாளியாக்க முடியாது. இயக்குநர், நாயகர், நாயகி, துணை நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்கள், விநியோகஸ்தர், தயாரிப்பாளர் என இப்படத்தில் பணியாற்றியவர்கள் என யார் இந்த நஷ்டத்துக்கு காரணமாக இருந்தாலும் அவர்கள் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டும். திரைத்துறை என்பது கடின உழைப்பை செலுத்துவதற்குத் தயாராக உள்ளவர்களுக்கான களம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அமாவசை சத்யராஜ் போல் திரைத்துறைக்குள் நுழையும் சிலர் அதன்பின்னர் காட்டும் முகம் சகித்துக் கொள்ளமுடியாததாக உள்ளது. அண்மையில் தயாரிப்பாளர் ஒருவர் தனது இழப்பு குறித்து புலம்பித்தீர்த்தார். ஆனால்.. யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காது இருக்கவே நான் விரும்பிகிறேன்.
எனது நேர்மையை நான் மதிக்கிறேன். அதேவேளையில் இந்த நேர்மையால் எனது தொழில் பாதிக்கப்படும் என்றாலும் அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஒரு முதலீட்டாளராக எனது பணத்தை இழப்பதன் வேதனை எனக்குத் தெரியும். என்னிடம் எல்லாவற்றிற்கும் ஆதாரம் இருக்கிறது. தேவைப்பட்டால் அதை வெளியிடவும் நான் தயாராக இருக்கிறேன்.
இத்திரைப்படத்தின் நஷ்டத்துக்கு காரணமானவர்கள் தாமே முன்வந்து தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்ட வேண்டும். நன்றி!
இவ்வாறு இயக்குநர் சினிஷ் தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT