Published : 13 Oct 2023 09:10 PM
Last Updated : 13 Oct 2023 09:10 PM
சென்னை: விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் திரையிடுவது தொடர்பாக, தமிழக அரசாணையில் விதித்த கட்டுப்பாடுகளை மீறும் திரையரங்குகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான செய்தி குறிப்பு: ‘லியோ’ (LEO) திரைப்படம் திரையரங்குகளில் திரையிடுவது தொடர்பாக, தமிழக அரசு இன்று (13.10.2023) சில கட்டுப்பாடுகளுடன் அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, வருகிற 19.10.2023 முதல் 24.10.2023 வரை திரையரங்குகளில் சிறப்பு காட்சி உட்பட தினசரி 5 காட்சிகள் ‘லியோ’ திரைப்படத்தை திரையிடவும், காலை 09.00 மணிக்கு தொடங்கி அதிகாலை 01.30 மணிக்குள் 5 காட்சிகளை முடிக்க வேண்டும் எனவும் ஆணைகள் வெளியிட்டுள்ளது.
மேலும், லியோ திரைப்படத்தை திரையிடும் திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்படம் காண வரும் பொதுமக்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் போக்குவரத்து சீராக செல்ல ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும், அதிக கட்டணத்துக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யக்கூடாது எனவும், கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. மேலும், இந்த அரசு ஆணை தொடர்பாக கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது எனவும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களும் கண்காணிக்க வேண்டும் எனவும் அரசு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் வருகிற 19.10.2023 முதல் 24.10.203 வரையில் ‘லியோ’ திரைப்படம் திரையிடப்படும் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அரசு வகுத்துள்ள கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் எனவும், திரையரங்கிற்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடங்கள் சிறந்த முறையில் அமைத்திட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசு அனுமதி அளித்துள்ள காலை 09.00 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 01.30 மணிக்குள் திரைப்படத்தை முடித்துக் கொள்ள வேண்டும் எனவும், அதிக கட்டணத்துக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதற்காக, சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அரசு விதித்த மேற்கூறிய கட்டுப்பாடுகளை மீறி செயல்படும் திரையரங்குகள், அதன் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். மேலும், திரையரங்குகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT