Published : 11 Oct 2023 03:38 PM
Last Updated : 11 Oct 2023 03:38 PM
சென்னை: விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி விஜய்யின் ‘வாரிசு’, அஜித்தின் ‘துணிவு’ ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின. இதில் அஜித்தின் ‘துணிவு’ படத்துக்கான அதிகாலைக் காட்சியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த ரசிகர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, இதுபோன்ற அசாம்பாவித சம்பவங்கள் நடைபெற கூடாது என்பதற்காக தமிழக அரசு சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்காமல் இ்ருந்தது.
தனுஷின் ‘வாத்தி’, சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’, ரஜினியின் ‘ஜெயிலர்’ என முன்னணி நட்சத்திரங்களின் எந்தப் படங்களின் சிறப்பு காட்சிகளும் அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே தற்போது விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் வரும் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், முந்தைய நாள் இரவு அதாவது 18-ம் தேதி இரவு ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சிகளை திரையிடலாமா என படக்குழு திட்டமிட்டு வந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், விஜய்யின் ‘லியோ’ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கீரின் ஸ்டூடியோஸ் சார்பில், ஆயுத பூஜை உள்ளிட்ட விடுமுறை நாட்களை முன்னிட்டு ‘லியோ’ படத்தை 19-ம் தேதி வெளியிட உள்ளோம். அதற்காக 19-ம் தேதி மட்டும் அதிகாலை 4 மணி மற்றும் 7 மணி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை அதிகாலை 7 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை அரசு கவனமாக பரீசிலனை செய்ததன் அடிப்படையில் ’லியோ’ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 19-ம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை (ஒரு நாளைக்கு 5 காட்சிகள்) சிறப்புக் காட்சிகள் திரையிடலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களின் பாதுகாப்பை திரையரங்குகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அதில் குறிப்பிடபட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT