Published : 11 Oct 2023 12:30 AM
Last Updated : 11 Oct 2023 12:30 AM
சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றுக்கு நடனமாடிய நடன கலைஞர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை சிலர் வைத்திருந்தனர். இந்த நிலையில் அதனை மறுத்துள்ளது தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி). இது தொடர்பாக பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே. செல்வமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“லியோ திரைப்படத்தில் உறுப்பினர்கள் அல்லாத 1400 பேரை கொண்டு சென்னை பனையூரில் உள்ள ‘ஆதி ஸ்ரீராம்’ ஸ்டுடியோஸில் கடந்த ஜூன் மாதம் 6-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை 6 நாட்கள் பாடல் காட்சி படப்பிடிப்பு நடைபெற்றது. இவர்களுக்கு, உறுப்பினர் அல்லாதவர்களுக்கு என்ன ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் விவாதிக்கப்பட்ட போது ஊதியம் + பேட்டா கன்வேயன்ஸ் உட்பட ஒரு உறுப்பினருக்கு நாளொன்றுக்கு ரூ.1,750 வீதம் 6 நாட்களுக்கு ரூ.10,500/- ரூபாய் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, அனைத்து உறுப்பினர்களுக்கும் அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக 94,60,500/- ரூபாய் மொத்தம் செலுத்தப்பட்டது. அது மட்டுமின்றி இவர்களுக்கு ரிகர்சல் அளித்து ஒழுங்குப்படுத்தும் விதமாக சர்வீஸ் சார்ஜ் தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்திற்கு (TANTTNNIS) தனியாக வழங்கப்பட்டது.
தற்போது, ஒரு சிலர் தங்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என பேட்டியளித்ததை கண்டோம். இது தவறான செய்தியாகும். தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்தின் (TANTTNNIS) உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர வேண்டிய ஊதியம் முழுமையாக அவர்களது சங்கத்தில் செலுத்தப்பட்டுவிட்டது. அதேபோல் உறுப்பினர் அல்லாதவர்களுக்கு வங்கிக் கணக்கில் தலா ரூ.10,500 வீதம் (மொத்தம் 6 நாட்களுக்கு) வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே. செல்வமணி இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
லியோ: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள திரைப்படம் லியோ. இந்தப் படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தை சேவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. அடுத்த வாரம் இந்தப் படம் வெளியாக உள்ளது.
#Leo | லியோ திரைப்படத்தில் பணியாற்றியதற்கு ஊதியம் வழங்கவில்லை என்ற நடன கலைஞர்களின் (Non Members) புகாரை பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே. செல்வமணி மறுத்துள்ளார்
1,400 பேருக்கு தலா 1,750 வீதம் 6 நாட்களுக்கு மொத்தம் ₹94,60,500 வழங்கப்பட்டுள்ளது. pic.twitter.com/6NFDWRgnP3— Karthik Ravivarma (@Karthikravivarm) October 10, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT