Published : 04 Dec 2017 08:03 PM
Last Updated : 04 Dec 2017 08:03 PM
சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று யார் சொன்னது? என 'வேலைக்காரன்' இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மோகன் ராஜா கேள்வி எழுப்பினார்.
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபகத் பாசில், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வேலைக்காரன்'. ஆர்.டி.ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. 7 வேலைக்காரர்களை தேர்வு செய்து மேடைக்கு அழைத்து அவர்கள் முன்னிலையில் 'வேலைக்காரன்' படத்தின் இசை வெளியிடப்பட்டது.
'வேலைக்காரன்' இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மோகன் ராஜா பேசியதாவது:
எனக்கு எந்த பாராட்டு கிடைத்தாலும் அப்பா, அம்மாவுக்குதான் சேரும். இப்படத்துக்கு எந்த பாராட்டுகள் வந்தாலும் அது வேலைக்காரர்களுக்கு தான் போய் சேரும். உழைப்பை நம்பி வாழும் வேலைக்காரர்களுக்கு இந்தப் படம் சமர்ப்பணம்.
சொந்தக்காரர்கள், பரிந்துரை, பணம், சொத்து எதுவுமே இல்லாவிட்டாலும் பிழைப்பேன். என்னிடம் உழைப்பு இருக்கிறது என்று பிழைப்பவர்கள் நடுவில், அந்த உழைப்பு கூட என்னைக் காப்பாற்றவில்லை என்றால் எங்கடா போவேன் என்ற கேள்விக்கான பதில் தான் 'வேலைக்காரன்'. என் உழைப்புக்கான கூலி வந்தே ஆகவேண்டும், அதுவரைக்கும் விட மாட்டேன் என்று சொல்வான் 'வேலைக்காரன்'. முடிந்தவரை அதற்கான பதில்களைச் சொல்ல முயற்சி செய்திருக்கிறேன்.
எங்கள் மொத்த குழுவின் உழைப்புக்கு மரியாதை கொடுத்தது அனிருத்தின் இசை. அவரின் இசைதான் ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வரும் ஆயுதம். எங்கு போனாலும் "4 - 5 வருடம் ஆனாலும் பரவாயில்லை, தனி ஒருவன் மாதிரி படம் பண்ணுங்க" என எல்லோரும் சொல்கிறார்கள். அப்படி மீண்டும் ஒரு படம் பண்ண எனக்கு கிடைத்தவர் தயாரிப்பாளர் ராஜா. அவர் கொடுத்த தைரியம்தான் 'வேலைக்காரன்'.
மக்களின் சக்தி என்பது சிந்தனைக்கு அப்பாற்பட்டது. ஜல்லிக்கட்டு போராட்டம், வெள்ளம் போன்றவற்றை பற்றி எந்தவொரு இயக்குநருமே சிந்திக்க முடியாதது. வாழ்க்கையில் ஒடிக் கொண்டே இருக்கிறோம், பல தவறுகள் நடக்கும் போது கூட நின்று யோசிக்க முடியாமல் இருக்கிறோம். ஆனால், ஒடிக்கொண்டே இருக்கும் போது நின்று ஒருவன் யோசிக்கிறான். அது தான் 'வேலைக்காரன்'
சினிமாவை விட சிறந்த மீடியம் இந்த உலகத்தில் வேறு எதுவுமே கிடையாது. சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரக்கூடாது, சமூகத்தைப் பற்றி பேசக் கூடாது என்று யார் சொன்னது?. சினிமாக்காரனுக்கு மட்டும் தான் அதிக தகுதி உண்டு. இன்றைக்கு ஒட்டுமொத்த சமூகத்தில் 2 துறைக்குதான் அதிகமாகப் போகிறார்கள். அரசியல் மற்றும் சினிமா. உணர்வுகள் அதிகமாக இருப்பவர்கள் அனைவருமே இயக்குநர்களாக மாறி உட்கார்ந்திருக்கிறார்கள். மக்கள் உணர்வுகளை அதிகம் புரிந்தவர்கள் கலைஞர்கள்தான்.
நான் இயக்கிய நடிகர்களில் சிவகார்த்திகேயனுடன் வேலை செய்வது மிகவும் சவுகரியமாக இருந்தது. கூடிய விரைவில் இன்னுமொரு படத்திலும் இணைவோம்.
இவ்வாறு மோகன் ராஜா பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT