Published : 08 Dec 2017 02:51 PM
Last Updated : 08 Dec 2017 02:51 PM
மீனவ மக்களின் உணர்வுபூர்வமான உரிமைப் போராட்டத்துக்கு தமிழக மக்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்திருக்கிறார்.
ஒக்கி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி, கன்னியாகுமரி மீனவ கிராமங்களைச் சேர்ந்த 8,000-க்கும் மேற்பட்டோர் குழித்துறை ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், திருவனந்தபுரம் - நாகர்கோவில் வழித்தடத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் நேற்று ரத்து செய்யப்பட்டன. போராட்டம் நேற்றிரவு 9 மணிக்குப் பிறகும் நீடித்தது.
இந்நிலையில் இப்போராட்டத்துக்கு ஜி.வி.பிரகாஷ் தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
தன் கணவனை நித்தம் நினைத்து ரத்தம் உறைந்த என் அக்கா தங்கையின் விழி நீர் துடைக்க என் மீனவ மறத்தமிழர் மக்கள் மூழ்கி சாவும் முன் காப்பற்ற என் இரு கை கைகூப்பி வேண்டுகிறேன். கன்னியாகுமரி மீனவ மக்களின் உணர்வுபூர்வமான உரிமைப் போராட்டத்துக்கு தமிழக மக்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும். கை கொடுப்போம் நம் மீனவர் சமுதாயத்திற்கு.
கன்னியாகுமாரி மீனவர்களை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும் என்று சென்னை மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு மெரினா கடற்கரையில் போராட்டம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் சேப்பாக்கத்தில் அவர்களது போரட்டத்தை தொடருமாறு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT