Published : 09 Oct 2023 05:50 AM
Last Updated : 09 Oct 2023 05:50 AM
மதுரை அருகே நெடுஞ்சாலையில் காரில் பயணிப்பவர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி உயிரிழக்கின்றனர். அப்படி ஒரு விபத்தில் மீராவின் (த்ரிஷா)கணவரும் (சந்தோஷ் பிரதீப்) மகனும் உயிரிழக்கிறார்கள். விபத்து நடந்த இடத்தை மீரா பார்க்கும்போது, அந்த விபத்துகளில் மர்மம் இருப்பதை உணரும் அவர் துப்புத் துலக்குகிறார். வயதான காவலர் (எம்.எஸ்.பாஸ்கர்) ஒருவர்மீராவுக்கு உதவுகிறார். மறுபுறம் தனியார் கல்லூரி பேராசிரியர் மாயா (ஷபீர் கல்லரக்கல்), மாணவியின் காதலை ஏற்க மறுக்கிறார். இதனால் அந்த மாணவி, அவர் மீது பொய்யான பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்த, வேலை இழக்கும் மாயா பொருளாதார நெருக்கடிக்கும் அவமானத்துக்கும் உள்ளாகிறார். அவர் தந்தை (வேல ராமமூர்த்தி) தற்கொலை செய்துகொள்கிறார். மீராவின் கணவரும் மகனும் இன்னும் பலரும் உயிரிழந்த விபத்துகளின் பின்னணி என்ன? மீரா- மாயா கதைகளுக்கு என்ன தொடர்பு? என்பது மீதிக் கதை.
சாலை விபத்தால் பாதிக்கப்படும் பெண், துணிச்சலாகப் போராடி விபத்துகளின் பின்னால் உள்ள மர்மத்தைக் கண்டறிந்து குற்றவாளிகளைப் பழிவாங்குவது என்ற பரபரப்பான ஆக்ஷன் த்ரில்லர் களத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குநர் அருண் வசீகரன். ஆனால்அதற்கேற்ற திரைக்கதையை அமைப்பதில் கோட்டைவிட்டிருக்கிறார். இருவேறு கதைகளை மாறி மாறிக் காண்பித்து இறுதியில் இரண்டுக்குமான தொடர்பை ஏற்படுத்தும் உத்தி, திரைக்கதைக்கு சுவாரஸ்யம் சேர்ப்பதற்குப் பதிலாகத் தொய்வை ஏற்படுத்தி இருக்கிறது.
மீராவின் குடும்பப் பின்னணி சொல்லும் தொடக்கக் காட்சிகளை ரசிக்க முடிகிறது. பின் விபத்தால் மீராவின் வாழ்க்கை புரட்டிப்போடப்படுவதை சொல்லும் காட்சிகள் பதைபதைப்பை ஏற்படுத்துகின்றன. விபத்துக்குப் பின்னால் இருக்கும் மர்மங்கள் மீராவின் வழியாகச் சொல்லப்படும்போது திரைக்கதை சூடுபிடிக்கிறது. பிறகு ஜெட் வேகத்தில் பயணித்திருக்க வேண்டிய திரைக்கதை, தள்ளுவண்டியைப் போல் தடுமாறுகிறது.
குறிப்பாக மாயாவின் கதையில் வரும்காட்சிகளில் செயற்கைத்தனம். தன் மீதானகுற்றச்சாட்டு பொய்யானது என்று நிரூபிக்க எந்த முயற்சியும் எடுக்காமல் மாயா புலம்பிக்கொண்டே இருப்பதை ஏற்க முடியவில்லை. இறுதியில் விபத்துகளுக்குப் பின்னால் உள்ள மர்மம் விலகும்போது எந்த ஆச்சரியமும் ஏற்படுவதில்லை.
மகன் மீது உயிரையே வைத்திருக்கும் இளம் தாயாகத்தொடக்கக் காட்சிகளிலும் கணவனும் மகனும் திடீரென்று இறந்துவிட்டதால் அதிர்ச்சியில் உறைந்துபோகும் காட்சிகளிலும் ஆக்ரோஷமான ஆக்ஷனிலும் முதிர்ச்சியான நடிப்பைத் தந்துள்ளார் த்ரிஷா. பொய்க் குற்றச்சாட்டின் வேதனையை சுமப்பவராக ஷபீர் கல்லரக்கல் தேர்ந்த நடிப்பைத் தந்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, த்ரிஷாவின் தோழியாக வரும் மியா ஜார்ஜ், இவர்களுக்கு ஆதரவளிக்கும் திருநங்கை நேஹா கவனம் ஈர்க்கின்றனர். சாம் சி.எஸ் இசையில் சித் ராம் குரலில் ஒலிக்கும் ‘ஓ விதி’ பாடல் உருக்கமாக உள்ளது. பின்னணி இசை, சில இடங்களில் மிரட்டல், சில இடங்களில் இரைச்சல். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு நெடுஞ்சாலை விபத்துக் காட்சிகளின் தாக்கத்தைக் கூட்ட உதவியிருக்கிறது.
சாகசம் நிறைந்த பயணமாக இருந்திருக்க வேண்டிய ‘தி ரோட்’ திரைக்கதைக் கோளாறுகளால் மறக்க வேண்டிய பயணமாகிவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT