Last Updated : 06 Oct, 2023 04:37 PM

 

Published : 06 Oct 2023 04:37 PM
Last Updated : 06 Oct 2023 04:37 PM

இறுகப்பற்று Review: கரங்களை மட்டுமல்ல... காதலையும்!

காதலில் இருந்த அன்பு, திருமண வாழ்க்கைக்குள் கசந்து கரையும்போது, அதற்கான பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அதனைக் களைந்து, மீண்டும் ஒருவரையொருவர் ‘இறுகப்பற்றி’க் கொள்ளச் சொல்கிறது படம்.

மூன்று தம்பதிகள். வெவ்வேறு வகையான சூழல்கள். தம்பதிகளிடையே இருக்கும் சிக்கல்கள்களை பேசித் தீர்த்து வைக்கும் ‘மேரேஜ் கவுன்சிலர்’ மித்ரா (ஷ்ரத்தா ஸ்ரீநாத்). இவரிடம் அர்ஜூன் (ஸ்ரீ) - திவ்யா (சாணியா ஐப்பன்) தம்பதியினர் தங்களுக்குள் இருந்த காதல் திருமணத்துக்குப் பிறகு கசந்துவிட்டதாக கூறி கவுன்சிலிங்குக்கு வருகின்றனர். அவர்களின் உறவுகளுக்குள் விழுந்த விரிசல் குறித்து புரிய வைக்கிறார் மித்ரா.இருப்பினும் அவர்களுக்குள் ஏற்படும் விவாதங்கள் விவகாரத்துக்கு ஈட்டுச் செல்கிறது.

குழந்தை பிறந்த பிறகு தன் மனைவி பவித்ராவின் (அபர்ணதி) உடல் எடையை கூடிவிட்டதால், அவரை வெறுக்கிறார் ரங்கேஷ் (விதார்த்). இதனால் விவாகரத்தும் கேட்கிறார். இந்த ஜோடியும் மித்ராவிடம் கவுன்சிலிங்குக்கு வருகின்றனர். மேற்கண்டவர்களின் உறவுகளில் நிலவும் சிக்கல்கள் தன் வாழ்விலும் வந்தவிடக் கூடாது என நினைத்து எச்சரிக்கையுடன் இருக்கும் மித்ரா தனது கணவன் மனோவிடம் (விக்ரம் பிரபு) சண்டை போடாமலேயே வாழ்கிறார். ஆனால், இவர்கள் வாழ்விலும் பிரச்சினைகள் எட்டிப் பார்க்க, இறுதியில் இந்த மூன்று ஜோடிகளின் முத்தாய்ப்பான இணைவு எப்படி நிகழ்கிறது என்பதை ஃபீல்குட்டாக சொல்ல முயல்கிறது ‘இறுகப்பற்று’.

‘எலி’ படத்தின் இயக்குநர் யுவராஜ் தயாளன் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கும் படம் இது. மூன்று தம்பதிகளின் மூலம் வெவ்வேறு வகையான சூழ்நிலைகளை அடிப்படையாக கொண்ட உறவுச் சிக்கல்களை பேசியிருக்கிறார். அது பெரும்பாலும் ஆண்கள் தரப்பிலிருந்தே வெளிப்படுவதால், அவர்கள் தங்களை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டிய தேவையை படம் வலியுறுத்துகிறது. பெண்களுக்கானவையும் இதில் அடங்கும். உதாரணமாக, பெண்களை மட்டம் தட்டுவது, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் உதாசினப்படுத்துவது, அங்கீகாரம் வழங்காமை, நேரம் செலவிடாமை என திருமணத்துக்குப் பிறகான ஆண்களின் மாற்றங்களை கவனப்படுத்தும் படம், எல்லாவற்றையும் தங்களுக்குள் பூட்டி மன அழுத்ததை அதிகரிக்காமல் அந்தந்த நேரங்களில் வெளிப்படுத்த பெண்களுக்கு அறிவுறுத்துகிறது.

‘அப்பப்போவே இந்த பிரச்சினையே பேசி சரிபண்ணிடுங்க’ என்ற தீர்வும், அதையொட்டி, ‘ஒண்ணா இருந்தா சந்தோஷமா இருக்கணும். சண்ட போட்டு ஏன் வாழணும்?’ என விவாகரத்தை நார்மலைஸ் செய்கிறது. விவகாரத்தை குற்றமல்ல என மணவிலக்குக்கு வழிவகுக்கும் இடங்கள் கவனம் கொள்ளத்தக்கவை.

ஒவ்வொரு ஜோடிகளுக்குள்ளும் ஒரு முரணை ஏற்படுத்தி, அதுக்கான தீர்வை நோக்கி நகர்த்தி, விவாகரத்துக்கு இடமளிக்கும் விவாதங்களாக மாற்றி.. இறுதியில் முரண் உடையும் தருணங்களை அழகாக்கி ஃபீல்குட்டாக முடித்திருப்பது முழுமையான உணர்வைத் தருகிறது. என்றாலும், அதீதமான உரையாடல்கள், ஒர்க்‌ஷாப் பாணியில் நம்மை அமர வைத்து பாடம் எடுப்பது, தியரியாக வாழ சொல்வது, நிமிடத்துக்கு ஒரு அழுகை, சோகத்தை பிழியும் மெலோ ட்ராமா, இரண்டாம் பாதியில் இழுக்கப்படும் வயலின்... ஆங்காங்கே சோர்வு. சொல்ல வருவதை காட்சிகளாக கடத்துவதற்கு பதிலாக வெறும் வசனங்களாக கடத்தும் இடங்கள் நெளியவைக்கின்றன.

தேவைக்கு அதிகமான நடிப்பை தவறியும் வெளிப்படுத்தாமல் குறிப்பிட்ட மீட்டரிலேயே நடித்திருக்கிறார் விக்ரம் பிரபு. பெரும்பாலும் ஃபார்மல் உடைகளில் காட்சியளிக்கும் அவர், வாழ்க்கையை ஃபார்முலா அடிப்படையில் அணுகுவதை வெறுக்கும் அவரின் முரண் கவனிக்க வைக்கிறது. சிரித்த முகத்துடன், சில நேரங்களில் குழப்பத்துடன், பிரிவின்போது உடைந்து போகும் இடங்களில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனித்து தெரிகிறார்.

தனது சிறுவயது கனவுகள் கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்கியதையும், இஎம்ஐ-யில் அடமானம் வைக்கப்பட்ட தனது ஆசைகள் குறித்து கலக்கத்துடன் விதார்த் பேசும் இடம் நம்மையும் சேர்த்தே கலங்கடிக்கிறது. தேர்ந்த நடிப்பில் முத்திரை பதிக்கிறார். பிரசவத்துக்குப் பிறகு உடல் எடையை கூடிய அப்பாவி பெண்ணாக அபர்ணதி, உறவை தக்க வைக்க நிகழ்த்தும் அக-வெளி போராட்டங்கள், ஆங்காங்கே செய்யும் சில ஒன்லைன் காமெடிகள், தனது நுட்பமான உடல்மொழி என தடம் பதிக்கிறார். விதார்த்தைக்கும் அவருக்குமான முரண் உடையும் இடம் முத்தாய்ப்பு. தன் கணவனுக்காக உடல் எடையை குறைக்க போராடும் அவரது கதாபாத்திரம் பருமன் கொண்ட பெண் பார்வையாளர்களிடம் தவறான குற்றவுணர்வை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.

‘மாநகரம்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படங்களில் பார்த்த நடிகர் ஸ்ரீ, நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கிறார். அதீத அன்பிருந்தாலும், தனது மனைவியை மட்டம் தட்டி அதன்மூலம் தன்னை மேலானவராக காட்டிக்கொள்ளும் கதாபாத்திரத்திலும், ஆக்ரோஷம், அழுகையில் அழுத்தம் சேர்க்கிறார்.

சானியா அய்யப்பன் க்ளோசப்பில் சில சமயங்களில் வாணிபோஜனை நினைவூட்டுகிறார். எதையும் வெளிப்படுத்தாமல் மனதுக்குள் அவர் நிகழ்த்தும் போராட்டங்களை முக பாவனைகளில் வெளிப்படுத்திய விதம் கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுக்கிறது. மனோபாலாவுக்கு டப்பிங் மாற்றப்பட்டிருந்தபோதிலும், அவரது காட்சிகள் சுவாரஸ்யம்.

ஜஸ்டின் பிரபாகர் இசையில் யுவன்குரலில் ‘பிரியாதிரு’ பாடல் இதம் சேர்க்கிறது. பின்னணி இசை சில இடங்களில் ரிபீட்டாவதாக தோன்றினாலும், இறுதியில் ஃபீல்குட் உணர்வை கொடுக்கத் தவறவில்லை. கோகுல் பினோய் ஒளிப்பதிவும், மணிகண்ட பாலாஜியின் ‘கட்’ஸும் கதைக்கு தேவையான பங்களிப்பை செலுத்துகின்றன.

துப்பாக்கி, தோட்டா, கொலை என வன்முறை படங்கள் வெளியாகி வரும் வெகுஜன திரையில் ஃபீல்குட் முயற்சியான இப்படம் காதலர்கள் மற்றும் திருமணமானவர்களின் கரங்களை அன்புடன் ‘இறுகப்பற்றி’க் கொள்ளச் சொல்கிறது.

ட்ரெய்லர் வீடியோ:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x