Published : 05 Dec 2017 02:48 PM
Last Updated : 05 Dec 2017 02:48 PM
வீண் விளம்பரங்கள் தேடுவதைத் தவிர்த்து ஆரோக்கியமான மனோபாவத்துக்கு மாற வேண்டும் என்று இயக்குநர் சேரனுக்கு விஷால் பதிலளித்திருக்கிறார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்திருக்கிறார் விஷால். அவருடைய இந்த முடிவால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து அவர் விலக வேண்டும் என்று இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
மேலும், விஷால் பதிவி விலகக் கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருவது மட்டுமன்றி, பல்வேறு குற்றச்சாட்டுகளையும் விடுத்திருக்கிறார்.
சேரனின் குற்றச்சாட்டு தொடர்பாக விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இயக்குநர் சேரன் மீது நான் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். ஆனால் சமீபகாலமாக அவர் செய்யும் தரக்குறைவான விளம்பரங்கள் அவர் மீது பரிதாபத்தைத்தான் ஏற்படுத்துகின்றன. என் மீது தவறு இருந்து அதை சுட்டிக்காடினால் திருத்திக்கொள்வேன். ஆனால், சேரன் சொல்வது அடிப்படையிலேயே பொய்யான குற்றச்சாட்டு.
ஒரு சங்கத்தின் பொறுப்பில் இருப்பவர் தேர்தலில் நிற்கக்கூடாது என்று எந்த சட்டவிதியும் இல்லை. இது எனது தனிப்பட்ட முடிவு. சேரனின் வாதத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது. நான் தேர்தலில் போட்டியிடுவதாலேயே அரசாங்கம் தயாரிப்பாளர் சங்கத்தைப் பழி வாங்கும் என்பது ஜனநாயகத்துக்கே எதிரான குற்றச்சாட்டாகத்தான் பார்க்கிறேன். சேரனின் வாதம் இன்றைய மற்றும் முன்னாள் அரசுகளையும், முன்னாள் சங்க நிர்வாகிகளையும் கொச்சைப்படுத்துவது போல் இருக்கிறது.
எப்போதுமே உரிமைகள் என்பவை கெஞ்சிக் கேட்டு பெற வேண்டியவை அல்ல. அவை குரல் எழுப்பிப் பெற வேண்டியவை என்று நம்புகிறவன் நான். அதன்படிதான் செயல்படுகிறேன். ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதும் மக்களின் சார்பில் அவர்களுக்காக குரல் எழுப்பத்தான்.
என்னுடைய நண்பர்களையும், சட்ட நிபுணர்களையும் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவை எடுத்தேன். எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திக்கத் தயாராக இருக்கிறேன். அதை விடுத்து கீழ்த்தரமான விமர்சனங்களை வைத்து மிரட்டி காரியம் சாதிக்கவோ, விளம்பரம் தேடவோ முயற்சிக்கும் எந்த ஒரு செயலையும் சங்கத்தில் அனுமதிக்கவே முடியாது. இனிமேலாவது சேரன் திருந்தி வீண் விளம்பரங்கள் தேடுவதை விட்டுவிட்டு ஆரோக்கியமான மனோபாவத்துக்கு மாற வேண்டும்.
சேரனின் செயல்கள் தொடர்ந்தால் சங்க விதிகளின்படி அவர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT