Published : 12 Dec 2017 07:02 PM
Last Updated : 12 Dec 2017 07:02 PM
தயாரிப்பாளர் சங்கப் பணத்தை கையாடல் செய்யவில்லை என நிரூபிக்கத் தயாரா என்று விஷாலுக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கத்தின் 10-வது பொதுக்குழு கூட்டம் பெரும் சலசலப்புடன் முடிவு பெற்றிருக்கிறது. அக்கூட்டத்தில் ராதாகிருஷ்ணன் அணியினர் எழுப்பிய கேள்விகள் அனைத்துமே சமூகவலைத்தளத்தில் வீடியோவாக வெளியானது. இதற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
இப்பிரச்சினை குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியிருப்பதாவது:
தயாரிப்பாளர் சங்கப் பணத்தை கையாடல் பண்ணியிருந்தால் நாங்கள் ஏன் பொதுக்குழுவை கூட்டப் போகிறோம்? என மீடியா முன்பு அன்று சமாளித்துப் பேசினார் விஷால். ஆனால் உண்மையில் சங்கப் பணமான 3 கோடியே 40 லட்சம் கையாடல் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை சங்கத்தில் பொறுப்பிற்கு வந்தவர்கள் யாரும் எஃப் டி யாகப் போடப்பட்ட 7 கோடியே 40 லட்சத்தில் பத்து வருடங்களாக கைவைத்ததில்லை. ஆனால் விஷாலும் இதையேதான் ராகவேந்திரா மண்டபத்தில் மீடியா முன்பு சொன்னார். எஃப் டி பணம் எந்தவிதத்திலும் எடுக்கப்படாது. அப்படியே இருக்கும் என்றார். அவர் சொன்னபடி நடந்திருந்தால் நேற்று அரையாண்டு கணக்கை சமர்ப்பித்திருக்கலாமே?
ஏன் சமர்ப்பிக்கவில்லை நியாயமாரே? கணக்கு எங்கே எனக்கேட்டால் தேசியகீதம் பாடி கூட்டத்தை முடிக்கலாம்னு நேற்று தான் தெரிஞ்சிக்கிட்டோம். உண்மையானவர்கள் கணக்கு வழக்கை பிரதியெடுத்து ஒவ்வொருவர் கையிலும் கொடுத்திருந்தால் ஏன் இந்த சத்தம்? சங்கடங்கள் எல்லாம். உண்மை இருந்தால் தானே கொடுப்பதற்கு?
கூச்சல் போடுறாங்க.. திட்றாங்கன்னு வீடியோ எடுத்து அனுப்புறீங்க. உங்கள் வீட்டில் ஒரு லட்ச ரூபாய் காணாமல் போனால் லபோ திபோன்னு கத்தமாட்டீர்களா?. ஆனால் இங்கே வருடக்கணக்காக காப்பாற்றி வந்த 7.40 கோடியில் 3.40 கோடியை காணோம் என்றால் கூப்பிட்டு வைத்து கொஞ்சவா செய்வார்கள். திருடனாக இருந்தால் என்ன செய்வீர்கள்?. நடுத்தெருவில் கம்பத்தில் கட்டி வைத்து போறவர் வர்றவன் எல்லாம் அடிக்க மாட்டீர்கள். பதவி என்ற பெயரில் கொள்ளையடித்தவர்களை நாங்கள் எப்படி நடத்த வேண்டும் என எதிர்ப்பாக்கிறீர்கள் மக்களே.
3 கோடியே 40 லட்சத்தை கையாடல் பண்ணியிருக்காங்கன்னு நான் நிரூபிக்கிறேன். அவர் தான் எடுக்கவில்லை என்பதை மீடியா முன் நிரூபிக்கத் தயாரா?. அவர் தான் எடுக்கவில்லை என நிரூபித்தால் நான் சங்கத்தை விட்டு விலகத் தயார். விஷால் எடுத்திருந்தால் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்யத் தயாரா?. இது விஷாலுக்கு நான் விடும் நேரடி சவால். விஷால் தான் இந்த 3 கோடியே 40 லட்சத்தில் கை வைக்கவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும். இல்லையேல் பதவி விலக வேண்டும். விஷால் நிரூபிக்கத் தயாரா?
மேலும் பொதுக்குழு வீடியோ பொதுமக்கள் பார்வைக்கு ஏன் அனுப்பப்பட்டது? பொதுக்குழு விஷயங்கள் நமக்குள்ளேதானே வைத்திருக்க வேண்டும்? சங்கத்தின் பொதுக்குழு நடவடிக்கைகளை வீடியோவாக வெளியிட்டது தவறு என்பதையும் சங்க விதிகளின்டி சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சவாலை சந்திக்க விஷால் முன்வருவார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்..
இவ்வாறு சுரேஷ் காமாட்சி தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT