Published : 27 Sep 2023 03:55 PM
Last Updated : 27 Sep 2023 03:55 PM
குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் குறித்து கடந்த ஆண்டு ‘கார்கி’ என்ற அழுத்தமான படைப்பு வெளியாகி கவனம் பெற்ற நிலையில், தற்போது அதே போன்றதொரு கதைக்களத்துடன் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் குறித்து முகத்தில் அறைந்தாற் போல் பேசும் படைப்பாக வெளியாகியிருக்கிறது ‘சித்தா’.
மதுரையை சுற்றியுள்ள சிறுநகரங்களில் ஒன்றில் தன் அண்ணி மற்றும் அண்ணன் மகளுடன் வசிக்கிறார் ஈஸ்வரன் (சித்தார்த்). சிறு வயதிலேயே அண்ணனை இழந்ததால் குடும்ப பாரத்தை சுமக்கும் பொறுப்பை ஏற்று அண்ணியையும் (அஞ்சலி நாயர்), அவரது மகள் சுந்தரியையும் (சஹஷ்ரா ஶ்ரீ) பார்த்துக் கொள்கிறார். தான் வேலை செய்யும் அரசு அலுவலகத்தில் சுகாதாரப் பணியாளராக வரும் தன் பள்ளிகால காதலியான சக்தியுடன் (நிமிஷா சஜயன்) மீண்டும் உறவை புதுப்பிக்கும் அவருக்கு, தன் அண்ணன் மகளின் பள்ளி தோழி பொன்னியின் (ஆபியா தஸ்னீம்) வழியாக பெரிய சிக்கல் வருகிறது.
சிறுமியான பொன்னியை யாரோ ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துவிட, சிறுவயது முதலே அவரிடம் பாசமாக இருக்கும் சித்தார்த்தின் மீது அந்தப் பழி விழுந்துவிடுகிறது. அந்தப் பழியிலிருந்து மீண்டும் வரும் நேரத்தில், தன் அண்ணன் மகள் சுந்தரிக்கு நடக்கும் சில துர்நிகழ்வுகள் அவரை நிலைகுலையச் செய்கின்றன. அதன் பிறகு நடக்கும் சம்பவங்களே ‘சித்தா’ படத்தின் திரைக்கதை.
’பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’ என வெவ்வேறு பாணியிலான திரைப்படங்களைக் கொடுத்த எஸ்.யு.அருண் குமார் இந்த முறை மிக அடர்த்தியான, அழுத்தமான ஒரு படைப்புடன் வந்துள்ளார். தொடங்கும்போது ஒரு ‘ஃபீல் குட்’ படத்துக்கு உண்டான அத்தனை அம்சங்களுடனும் படம் தொடங்குகிறது. முதல் காட்சியிலேயே அண்ணன் மகள் சுந்தரி மீது சித்தார்த் வைத்திருக்கும் பாசத்தை உணர்த்திவிடுகிறார் இயக்குநர். இதற்கென்று தனியாக வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகள் எதுவும் கிடையாது. அதே போல நிமிஷா - சித்தார்த், நண்பர்கள் - சித்தார் இடையிலான உறவுகளும் நேரத்தை வீணடிக்காமல் போகிறபோக்கில், அதே நேரம் பார்ப்பவர்கள் மனதில் ஆழமாக பதியும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது சிறப்பு.
எனினும் இந்த ஃபீல் குட் உணர்வுகள் படத்தில் வெறும் 20 நிமிடங்கள்தான். அதன்பிறகு திரைக்கதை வேறொரு அவதாரம் எடுத்து பயணிக்கிறது. பொன்னிக்கு ஏற்படும் கொடூரத்துக்குப் பிறகு வரும் ஒவ்வொரு காட்சியும் பதைபதைப்புடனே நகர்கின்றன. ஒருவழியாக சித்தார்த் மீதான பழி நீங்கி, நிம்மதி பெருமூச்சு விட எத்தனிக்கும்போது நாம் எதிர்பார்க்காத அடுத்த பதைபதைப்புக்குள் படம் நுழைந்து விடுகிறது. பல அடுக்குகளைக் கொண்ட திரைக்கதையை எந்தவித திணிப்புகளும் இன்றி நேர்த்தியாக சொன்ன விதத்தில் இயக்குநர் ஜெயிக்கிறார்.
இப்படம் தான் சொல்ல வந்த நோக்கத்தில் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் இப்படத்தின் நடிகர்கள் தேர்வு. நாயகனாக சித்தார்த். தன்னுடைய வழக்கமான பாணியை மூட்டை கட்டிவைத்து விட்டு, மிக மிக இயல்பான ஒரு நடுத்தர வர்க்க இளைஞனாக நடித்துள்ளார். குழந்தைகள் மீது இயல்பாகவே பாசம் கொண்ட அவர் மீது அப்படி ஒரு பழி விழும்போது பார்க்கும் நாமே பதறித்தான் போகிறோம். தன் மீது விழுந்த பழியைத் தொடர்ந்து கழிவறையில் அழும் காட்சியிலும், தன் அண்ணன் மகளின தண்ணீர் பாட்டிலை கையில் வைத்துக் கொண்டு ரோட்டில் அழும் காட்சியிலும் இதயத்தை நொறுக்கி விடுகிறார்.
படத்தில் குறிப்பிட்டு பாராட்டப்பட வேண்டியவர்கள் குழந்தை நட்சத்திரங்களான சஹஷ்ரா ஶ்ரீ மற்றும் ஆபியா தஸ்னீம் இருவரும். சிறுவயதில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களுக்குப் பிறகு குழந்தைத்தன்மையை தொலைக்கும் பிஞ்சுகளை கண்முன் கொண்டுவந்து நம்மை கலங்க வைக்கின்றனர்.
இவர்கள் தவிர, நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர், சித்தார்த்தின் நண்பர்களாக வருபவர்கள், பெண் போலீஸாக வருபவர் என ஒரே ஒரு காட்சியில் துணை கதாபாத்திரங்கள் கூட அவ்வளவு இயல்பான நடிப்பை வழங்கி வியக்க வைக்கின்றனர். திபு நினன் தாமஸின் பாடல்கள் மற்றும் விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும், பாலாஜியின் ஒளிப்பதிவும் கதையோட்டத்துக்கு பலம் சேர்க்கின்றன.
இடைவேளைக்கு முன்பு சுந்தரி காணாமல் போகும் காட்சியும், இரண்டாம் பாதியில் வரும் ஷேர் ஆட்டோ காட்சியில் பதற்றத்தின் உச்சிக்கே நம்மை கொண்டு சென்றுவிடுகின்றன. ஷேர் ஆட்டோ காட்சியில் சுந்தரியை காப்பாற்றும் பெண்மணி ஒரே காட்சியில் வந்தாலும் அரங்கம் அதிரும் கைதட்டலை பெறுகிறார்.
க்ளைமாக்ஸுக்கு முன்னால் வரும் காட்சிகளில் என்ன செய்வது என்று தெரியாமல் திரைக்கதை திணறுவது அப்பட்டமாகத் தெரிகிறது. அதுவரை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தி வந்த உணர்வுரீதியான தாக்கங்களும், பதற்றத்துடன் அப்படியே அமுக்கப்பட்டது போன்ற உணர்வு எழுவதை தவிர்க்க முடியவில்லை. எனினும், இந்தச் சிறு குறைகளைத் தாண்டி சமூகத்தின் மிக முக்கிய ஒரு பிரச்சினையை எந்தவித நெளிவு சுளிவும் இன்றி நேரடியாக ஓங்கி அடித்தது போல பேசியிருக்கும் ‘சித்தா’ தமிழ் சினிமாவின் மிக முக்கிய படம் என்பதில் ஐயமில்லை.
சித்தார்த்தின் முதிர்ச்சியான நடிப்பு, குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் குறித்த ஆழமான சமூகப் பார்வை, பார்வையாளர்களின் நெஞ்சில் தைக்கும்படியான அருண் குமாரின் கதை சொல்லல் முறைக்காக நிச்சயம் இப்படத்தை பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT