Published : 18 Dec 2017 02:03 PM
Last Updated : 18 Dec 2017 02:03 PM
யாராவது காயப்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறோம் என்று 'அருவி' தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்திருக்கிறார்.
அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் அதிதி பாலன், லெனின் பாரதி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அருவி'. விமர்சகர்கள் மத்தியில் படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இப்படம் குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், "#அருவி - இது அன்பை, மனிதத்தை பறைசாற்றும் நோக்கில் மட்டுமே எடுக்கப்பட்ட படம். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல. இருந்தும், யாராவது காயப்பட்டிருந்தால் எங்கள் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக 'அருவி' படத்தின் பெரும்பாலான காட்சிகள் 'சொல்வதெல்லாம் உண்மை' போன்றதொரு நிகழ்ச்சியில் நடப்பது போன்று அமைத்திருப்பார் இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன்.
'அருவி' படத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில், அப்படம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் "பல மாதங்களுக்கு முன் தணிக்கை ஆன போது இந்தப் படம் பற்றி தெரிந்து கொண்டேன். படம் பார்த்தவர்கள், இது அற்புதமான படம். தயவு செய்து எதுவும் எதிர்வினை கூற வேண்டாம் என்றார்கள். நல்ல இயக்குநர், நிகழ்ச்சி பின்னணியில் நல்ல படத்தை எடுத்துள்ளார். பெண்ணிய படம் எடுத்திருந்தாலும், அடக்குமுறைக்கு, அநீதிக்கு ஆளான பெண்களுக்கான தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நிகழ்ச்சியை அவர் கிண்டல் செய்துள்ளார்" என்று தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலளிக்கும் விதமாக தான் இந்த ட்வீட்டை 'அருவி' தயாரிப்பாளர் வெளியிட்டிருப்பதாகத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT