Published : 12 Sep 2023 09:46 AM
Last Updated : 12 Sep 2023 09:46 AM
சென்னை: இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி விவகாரத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் துணை நிற்பதாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக யுவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஒரு பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியை நடத்துவது என்பது மிகவும் சிக்கலான ஒரு வேலை, அதில் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது, போக்குவரத்தை கையாள்வது என ஏராளமான விஷயங்கள் உள்ளன. ஒருங்கிணைப்பு குளறுபடிகள் காரணமாக, துரதிர்ஷ்டவசமான வகையில் அதிக கூட்ட நெரிசல் உள்ளிட்ட எதிர்பாராத பிரச்சினைகள் பெரிய இசை நிகழ்ச்சிகளின் போது நடக்கின்றன. நோக்கங்கள் நல்லதாக இருந்தாலும், சில விஷயங்கள் தவறாகி விடுகின்றன. இதனால் எங்கள் இசைக்கு அர்த்தம் கொடுக்கும் மக்களாகிய எங்கள் ரசிகர்களுக்கு கடுமையான அழுத்தம் ஏற்படுகிறது.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் தயாரிப்பாளர்களும் இந்த சம்பவத்தை கவனத்தில் கொள்ளவேண்டியது முக்கியம். இசையமைப்பாளர்களாக, நாங்கள் மேடையில் இருக்கும்போது எங்கள் ரசிகர்கள் பாதுகாப்பாக இருப்பதையும், அனைத்தும் சுமூகமாக நடப்பதையும் உறுதி செய்ய இந்த தயாரிப்பாளர்கள் மேல் நாங்கள் நம்பிக்கை வைக்கிறோம். ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது உண்மையில் மனதை கனக்கச் செய்கிறது. திட்டமிடல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட விஷயங்களில் தீவிரமாக பங்கெடுக்க நான் உட்பட அனைத்து கலைஞர்களுக்கும் இந்த சம்பவம் எச்சரிக்கை விடுக்கிறது.
ஒரு சக இசையமைப்பாளராக இந்த சூழலில், இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவங்களை கருத்தில் கொண்டு ஏ.ஆர்.ரஹ்மானுடன் நான் துணை நிற்கிறேன். குறிப்பாக இந்த இசை நிகழ்ச்சி, ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத இரவை கொடுக்கும் நோக்கில் நடத்தப்பட்டது.
பாடங்கள் கற்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்பட்டு, எதிர்கால நிகழ்ச்சிகள் ரசிகர்களுக்காகு, குறிப்பாக பெண்கள், குழந்தைகள், வயதானவர்களுக்கான மிகுந்த பாதுகாப்புடனும், கவனத்துடனும் நடப்பதை ஒருங்கிணைப்பாளர்கள் உறுதி செயார்கள் என்று நம்புவோம்.” இவ்வாறு யுவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
— Raja yuvan (@thisisysr) September 11, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT