Published : 06 Dec 2017 01:04 PM
Last Updated : 06 Dec 2017 01:04 PM
என்னைப் பற்றி மற்றவர்கள் பேசி வருவதெல்லாம் சர்ச்சையே அல்ல, அதுவொரு காமெடி விளையாட்டு என்று சிம்பு தெரிவித்திருக்கிறார்.
'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் பெரும் தோல்வியடைந்ததால், சிம்புவின் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் மைக்கேல் ராயப்பன் புகார் அளித்திருக்கிறார். மேலும், சிம்புவின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் தெரிவித்தார்.
இப்பிரச்சினைத் தொடர்பாக இன்று (டிசம்பர் 6) நடைபெறவுள்ள 'சக்க போடு போடு ராஜா' இசை வெளியீட்டு விழாவில் சிம்பு விரிவாக பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து சிம்புவிடம் கேட்ட போது:
'சக்க போடு போடு ராஜா' இசை வெளியீட்டு விழாவில் என் மீதான அனைத்து புகாருக்கும் பதிலளிக்க இருக்கிறேன். தனுஷிடம் கேட்டேன், அவரும் வருவதாக ஒப்புக் கொண்டார்.
என்னைப் பற்றி மற்றவர்கள் பேசி வருவதெல்லாம் சர்ச்சையே அல்ல, அதுவொரு காமெடி விளையாட்டு. ஒரே ஒரு விஷயம் மட்டும் கேட்கிறேன், படம் வெளியீட்டுக்கு முன்பு பேசாததைக் கூட விட்டுவிடலாம். ஆனால், படம் வெளியாகி ஒரு மாதம் கழித்து கூட பேசியிருக்கலாம். 6 மாதம் கழித்து பேசியிருக்கிறார்கள் என்றால் ஏதோ ஒரு உள்நோக்கம் இருப்பதாக நினைக்கிறேன்.
6 மாதம் கழித்துக்கூட தயாரிப்பாளர் சங்கத்திலோ, ஏதோ ஒரு இடத்திலோ பேசி முடிக்க வேண்டிய விஷயத்தை பத்திரிகையாளர்கள் முன்பு பேசுகிறார்கள். பாத்ரூமில் வைத்து டப்பிங் பேசினேன் என்று எல்லாம் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். யாருமே அப்படியொரு விஷயத்தை எழுதிக் கொடுக்க மாட்டார்கள். யாராவது பாத்ரூமில் வைத்து டப்பிங் செய்வார்களா?. யாருடைய தூண்டுதலின் பெயரில் இப்படி செயல்படுகிறார்கள் என்று படிப்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கு தெரியாதா என்ன?
படப்பிடிப்புக்கு தாமதமாக வருவார் என்றெல்லாம் கூறி மணி சார் படத்தில் நடிக்கவிடாமல் செய்கிறீர்களா செய்யுங்கள். அனைத்துக்குமே ஒரு பொறுமை இருக்கிறது. பணத்துக்காக அவர் என்ன வேண்டுமானாலும் சொல்வார் என்கிறார்கள். அது தான் பெரிய காமெடியே. சிலம்பரசன் ஏமாற்றி காசு வாங்கினான் என்பதை தமிழ்நாட்டிலுள்ள யாராவது நம்புவார்களா. படப்பிடிப்புக்கு தாமதமாக வருவார், நாயகியை மாற்றினார் என என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போங்கள். அதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. பாத்ரூமில் டப்பிங் என்ற விஷயத்தை என்னால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
மணி சார் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 20-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. யாராலும் அப்படத்தை தடுக்க முடியாது. மூன்று மாதத்தில் ஒட்டுமொத்த படத்தையும் முடித்துக் கொடுக்கவுள்ளேன்.
இவ்வாறு சிம்பு தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT