Published : 09 Sep 2023 05:15 AM
Last Updated : 09 Sep 2023 05:15 AM

திரை விமர்சனம்: தமிழ்க்குடிமகன்

கிராமத்தில் யார் இறந்தாலும் இறுதிச்சடங்குகளைச் செய்பவர் சின்னச்சாமி (சேரன்). செய்யும் தொழிலால் அவமரியாதைக்கு உள்ளாகும் அவர், அந்தத் தொழிலை விட்டுவிட்டு, பால் வியாபாரம் செய்து பிழைப்பு நடத்துகிறார். இந்நிலையில் ஊர் பெரியவர் சுடலையின் (லால்) தந்தை பேச்சிமுத்து (மு.ராமசாமி) இறந்துவிட, இறுதிச்சடங்கு செய்ய சின்னச்சாமியை அழைக்கிறார்கள். அவர் மறுக்க, மொத்த ஊரும் அவருக்கு எதிராகத் திரும்பி மிரட்டுகிறது. ஒரு கட்டத்தில் ஊரைவிட்டுச் செல்லும் சின்னச்சாமி, ‘நாதியற்ற என்னை சாதியற்றவனா மாத்துங்க’என்று வழக்குத் தொடுக்கிறார். நீதிமன்றம் என்ன தீர்ப்பு சொல்கிறது என்பதுதான் ‘தமிழ்க்குடிமகன்’கதை.

தாங்கள் விரும்பும் தொழிலை யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொன்னாலும் கிராமங்களில் சில தொழில்களைக் குறிப்பிட்ட சமூகத்தினர்தான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்தக் கட்டுப்பாடுகளுக்கு எதிராகவும் சாதியத்துக்கு எதிராகவும் அழுத்தமான கருத்தை முன் வைக்கிறது ‘தமிழ்க்குடிமகன்’. இதற்கு முன் சாதி பற்றி வெளியானத் திரைப்படங்கள், தங்களின் வலிகளை மட்டுமே பேசியிருக்கின்றன. அதிலிருந்து வேறுபடுகிறது இந்தப் படம்.

இப்படியொரு கதையைச் சொல்லி அதற்கொரு தீர்வும் சொன்னதற்காகவே இயக்குநர் இசக்கி கார்வண்ணனைப் பாராட்டலாம். மனிதனின் தேவை உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் என்றபோது எங்கிருந்து வந்தது சாதி என்று கேள்வி கேட்கும் படம், ஓர் உண்மைச் சம்பவத்தை நேரில் பார்ப்பதுபோல நகர்கிறது.

படத்தில் பொழுதுபோக்கு விஷயங்கள் குறைவாக இருப்பதால் முழுமையான திரை அனுபவத்தைத் தரத் தவறுகிறது. முதல் பாதி படம் அங்கங்குச் சென்று குழப்பினாலும் இரண்டாம் பாதியில்தான் கதைக்குள் முழுமையாக உள் நுழைய முடிகிறது.

தலைமுறை தலைமுறையாக, செய்கிற வேலையைச் சுட்டிக்காட்டி தாழ்த்துகிற சமூகத்தில், தலைநிமிர்ந்து நிற்கப் போராடும் சின்னச்சாமியாக சேரன். ஊர்க்காரர்களின் அவமானத்தால் கூனிக் குறுகி நிற்கும்போதும், சுயமரியாதை குறையும்போது தனக்கானக் குரலை உயர்த்தும்போதும் கவனிக்க வைக்கிறார் சேரன்.

ஊர் பெரிய மனிதராகவும் சாதி வெறிபிடித்தவராகவும் லால், ஒரு தெற்கத்தி மனிதரை கண்முன் நிறுத்துகிறார். அவர் மச்சானாக வரும் அருள்தாஸ் தனது அடாவடியை முகத்திலேயே காட்டிவிடுகிறார்.

சேரனின் மனைவியாக வரும் பிரியங்கா, தங்கையாக வரும் தீப்ஷிகா, அவரைக் காதலிக்கும் பெரிய வீட்டு பிள்ளை துருவா, சின்னச்சாமிக்கு ஆதரவாக நிற்கும் காந்தி பெரியார் வேல ராமமூர்த்தி, போலீஸ் அதிகாரி சுரேஷ் காமாட்சி, வழக்கறிஞர்களாக வரும் எஸ்.ஏ.சந்திரசேகர், ரவிமரியா, நீதிபதி ராஜேஷ் உட்பட அனைவரும் தேவையான நடிப்பை வழங்கி இருக்கின்றனர்.

சாம் சிஎஸ்-சின் பின்னணி இசை படத்துக்குப் பெரும் பலம் தந்திருக்கிறது. ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு தென்மாவட்ட கிராமத்தை கண் முன் கொண்டுவருகிறது. திரைக்கதையை இன்னும் தெளிவாகவும் அழுத்தமாகவும் கையாண்டிருக்கலாம் என்றஎண்ணம் வருவதையும் தவிர்க்க முடியவில்லை. ஆனாலும் பேசிய விஷயங்களுக்காக இந்தத் தமிழ்க்குடிமகன் வரவேற்கப்பட வேண்டியவன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x