Last Updated : 28 Dec, 2017 10:01 AM

 

Published : 28 Dec 2017 10:01 AM
Last Updated : 28 Dec 2017 10:01 AM

பதவி, பணம் இருப்பவர்களின் காலில் விழாதீர்கள்!-ரசிகர்களுக்கு ரஜினி அறிவுரை

மூன்றாவது நாளாக ரஜினிகாந்த், தன் ரசிகர்களை இன்று (வியாழக்கிழமை) சந்தித்தார்.

முதல் நாள் பேசும்போது, அரசியல் நிலைப்பாடு குறித்து 31ம் தேதி அறிவிக்கிறேன் என்றார். நேற்று 2வது நாளாக ரசிகர்களைச் சந்திக்கும் போது, குடும்பத்தையும் குழந்தைகளையும் நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். குழந்தைகள்தான் நம் சொத்து. இன்னும் நிறைய பேசவேண்டியிருக்கிறது என்று பேசினார்.

மூன்றாவது நாளாக, ரஜினிகாந்த் இன்று ரசிகர்களைச் சந்தித்தார். மிகுந்த உற்சாகத்துடன் ரசிகர்கள், அவரை வரவேற்றனர்.

அப்போது பேசிய ரஜினி, 'மதுரை, விருதுநகர் உள்ளிட்ட ஊர்களில் இருந்தெல்லாம் வந்திருக்கிறீர்கள். மதுரை என்றாலே வீரத்தின் அடையாளமாக இருக்கக் கூடிய ஊர். வீரம்தான் நினைவுக்கு வரும் எனக்கு.

இரவெல்லாம் கண்விழித்து, பயணம் செய்து, களைப்புடன் இருந்தாலும் எந்தச் சலிப்பும் இல்லாமல், உற்சாகத்துடன் இருக்கிறீர்கள். உங்கள் முகமே உங்களின் உற்சாகத்தைச் சொல்லுகிறது. உங்களைப் பார்க்கும் போது அந்த உற்சாகம் எனக்கும் வந்துவிட்டதாகவே நினைக்கிறேன்.

1976- 77ம் வருடம். முதன்முதலாக மதுரைக்கு வந்திருந்தேன். மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போனோம். அர்ச்சகர் வந்து என்ன நட்சத்திரம் என்று கேட்டார். அப்போதெல்லாம் கோத்திரம் தெரியாது. நட்சத்திரம் தெரியாது. அதையெல்லாம் பார்த்ததே இல்லை. அப்போது அருகில் இருந்த நடிகை சச்சும்மா (சச்சு), 'பெருமாளோட நட்சத்திரத்துக்கே அர்ச்சனை பண்ணிருங்க’ என்றார். அப்புறம், பல வருடங்கள் கழித்துதான் எனக்குத் தெரிந்தது, என் நட்சத்திரம் பெருமாளோட நட்சத்திரம் தான் என்று!

உங்களுக்கெல்லாம் கிடா வெட்டி, கறிச்சாப்பாடு போடவேண்டும் என்றுதான் ஆசை. ஆனால் ராகவேந்திரா மண்டபத்தில் வெஜிடேரியன் தான். இன்னொரு சந்தர்ப்பத்தில், வேறொரு இடத்தில் பார்ப்போம்.

உங்களுடைய உற்சாகத்தையும் உணர்வுகளையும் என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. நானும் உங்கள் வயதைக் கடந்து, சினிமா ரசிகனாய் இருந்து வந்தவன் தான். என் 16- 18 வயதில், கன்னட நடிகர் ராஜ்குமாரின் ரசிகன் நான். அவருடைய படத்தின் நூறாவது நாள் விழா நடந்தபோது, முண்டியடித்துப் போயிருந்தேன். அவரை முதல்தடவைப் பார்க்கும் போது, அவர் நடித்த படங்களெல்லாம் நினைவுக்கு வந்துகொண்டே இருந்தன. அவரைத் தொட்டுப் பார்க்க விரும்பினேன். தொட்டுப் பார்த்தேன்.

இந்த காலில் விழுவதெல்லாம் வேண்டாம். மூன்று பேருக்குத்தான் காலில் விழவேண்டும். கடவுள், அப்பா அம்மா, பெரியவர்கள். நம்மைப் படைத்த கடவுளின் காலில் விழவேண்டும். உடலையும் உயிரையும் கொடுத்து உணவூட்டி ஆளாக்கியவர்கள் அப்பாவும் அம்மாவும். அவர்களின் கால்களில் விழவேண்டும். அடுத்து பெரியவர்கள். இந்த வாழ்க்கை, பல பாதைகளைக் கொண்டது. துன்பம், சோகம், துக்கம் என பல பாதைகளைக் கடந்த பாதங்களைக் கொண்டவர்கள் பெரியவர்கள். ‘நீங்களும் இதேபோல் பல பாதைகளைக் கடப்பீர்கள். உங்கள் பாதங்களும் அப்படிக் கடக்கும். எனவே அந்தப் பாதங்களை, பாதங்களுக்கு உரிய பெரியவர்களை விழுந்து நமஸ்கரிக்க வேண்டும். மற்றபடி, பதவி, பணம், புகழ், அதிகாரம் இருப்பதற்காக யார் காலிலும் விழவேண்டும் என்று அவசியமே இல்லை.

உங்களையெல்லாம் பார்த்ததில் சந்தோஷம். அந்த உற்சாகத்துடனே நாமெல்லோரும் புகைப்படம் எடுத்துக் கொள்வோம்’ என்று பேசினார் ரஜினிகாந்த்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x