Published : 04 Sep 2023 04:47 PM
Last Updated : 04 Sep 2023 04:47 PM
சென்னை: “லியோ படத்தில் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. ஆனால் நான் ஒரே நேரத்தில் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பவன் என்பதால் என்னால் ‘லியோ’ படத்துக்காக கால்சீட் ஒதுக்க முடியவில்லை” என நடிகர் விஷால் பேசியுள்ளார்.
சென்னையில் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் விஷால், “இயக்குநர் ஆதிக்கின் நிஜமான சினிமா பயணம் வரும் செப்டம்பர் 15-ல் இருந்து தான் துவங்கப் போகிறது. இதற்கு முன் அவர் பண்ணியது எல்லாம் சினிமாவில் நிலைத்து நிற்க நடத்திய போராட்டம் மட்டுமே.
விருதுகளில் எனக்கு எப்போதும் உடன்பாடு இருந்தது இல்லை. எனக்கு விருது கொடுத்தால் கூட அதை பெரிதாக நினைக்க மாட்டேன். நடுவர் குழு என பத்து பேர் படம் பார்த்து கருத்து சொல்கிறார்கள் என்றால் அது அவர்கள் கருத்து மட்டும்தான். ஒட்டுமொத்த மக்களின் கருத்தல்ல. நான் இந்த 19 வருடமாக திரையுலகில் இருக்கிறேன் என்றால் இதுதான் எனக்கு கிடைத்த விருது. நல்ல நடிகர் யார் என்பதை ரசிகர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
‘லியோ’ படத்தில் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. ஆனால் நான் ஒரே நேரத்தில் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பவன் என்பதால் என்னால் ‘லியோ’ படத்துக்காக கால்சீட் ஒதுக்க முடியவில்லை. அப்போது லோகேஷிடம், ‘ நீ அதிர்ஷ்டக்காரன். உனக்கு மீண்டும் நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பயன்படுத்திக் கொள். நானும் அடுத்ததாக விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க தயாராகி வருகிறேன்’ என்றேன்.
அரசியலுக்கு நேரடியாக வந்து தான் நல்லது செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதேசமயம் மக்களிடம் சென்று நியாயமாக கோரிக்கை வைத்து தேர்தலிலும் போட்டியிடலாம். ஆனால் அதை நான் விரும்பவில்லை. அதற்காக தேர்தல் குறித்து பயமும் இல்லை. 2006-ல் நான் நடிக்க வந்த புதிதில் நடிகர் ராதாரவி ஒருநாள் என்னை அழைத்து நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்துவிடு என பணம் கட்டி சேர வைத்தார். ஆனால் பின்னாளில் அவரையே நடிகர் சங்க தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்டு அவருடைய நாற்காலியிலேயே அமர்வேன் என்று அப்போது நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை” என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT