Last Updated : 04 Sep, 2023 05:02 PM

4  

Published : 04 Sep 2023 05:02 PM
Last Updated : 04 Sep 2023 05:02 PM

“சாதிய பார்வைக்குள் சினிமா சிக்கியிருப்பதே பெருங்கவலை” - எடிட்டர் பி.லெனின் சிறப்புப் பேட்டி

எடிட்டர் பி.லெனின் | கோப்புப் படம்: ஆர்.அசோக்

பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.பீம்சிங்கின் மகன் லெனின். இசை மற்றும் திரைப்படங்களின் மீது எப்போதும் தீராத ஈர்ப்புடையவர். 76 வயதான இவர், மகேந்திரனின் உதிரிப்பூக்கள் (1979), நாயகன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் மலையாள, இந்தி திரைப்படங்களில் எடிட்டராகப் பணிபுரிந்தவர். தனது 16-வது வயதில் திரைத் துறைக்குள் நுழைந்த இவர், 1983-இல் ‘எத்தனை கோணம் எத்தனை பார்வை’ மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவரது குறும்படமான ‘நாக்-அவுட்’ (1992) விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. அது கெய்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குறும்படத்துக்கான இஸ்லாமிய விமர்சகர்கள் விருதையும் பெற்றது.

சமீபத்தில், 69-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் 2021-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களுக்கு அறிவிக்கப்பட்டன. அதில் பி.லெனின் இயக்கிய ஆவணப் படமான ‘சிற்பிகளின் சிற்பங்கள்’ சிறந்த கல்வி திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இயக்குநர் பி.லெனினை நேரில் சந்தித்துப் பேசினேன். ‘இன்றைய சினிமாவின் நிலை’ என்றதுமே அவர் சரளமாக பேசத் தொடங்கிவிட்டார்.

“நாம் எடுக்கும் சினிமாவின் தாக்கம் சமூகத்துக்குள் எந்த ஒரு எதிர் விளைவுகளையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பது நமது முடிவான நோக்கமாக இருக்க வேண்டும் என்பது எனது திட்டவட்டமான எண்ணம். இந்த சமூகத்தில் பிரதிபலிக்கும் நல்லது கெட்டதுக்குமான அத்தனை விஷயங்களிலும் சினிமாவின் தாக்கம், சாயல் இருக்கிறது. அதன் பிரதிபலிப்பு இல்லையென்று யாராலும் மறுக்க முடியாது.

நாம் இப்போதெல்லாம் சினிமாவைக் கலையாகப் பார்க்க வேண்டும் என்று சாக்குப்போக்காகக் கூறிகொண்டே, இயக்குநர்கள் அவரவர் கோணங்களுக்கு உரித்தான பார்வையில் திரைப்படத்தை வன்முறையாகவோ, ஒரே சாதிக்குள்ளே நடக்கும் பிரச்சினை என்றாகவோ, இரு எதிரெதிர் சாதிகளின் காட்சி அமைப்பாகவோ, நடந்தது, நடக்கப்போவது என்று எப்படியோ சொல்லிக் கொண்டு படங்களை எடுத்துவிடுகிறார்கள். ஆனால், அந்தப் படங்களின் தாக்கமானது நிச்சயம் தரப்பு, எதிர்தரப்பினரிடையே இருக்கும். தொடரும் அப்படியான தாக்கமானது எந்தவிதத்திலும் சமூகங்களில் பகைமையை உருவாக்கிவிடக் கூடாது. இதை நாம் எப்போதும் மிகுந்த சிரத்தையுடன் கவனத்தில்கொள்ள வேண்டும்.

பொதுவாக, நிறைய பார்த்திருப்போம். சாதுவாக இருப்பவர்கள்கூட ஏன் சினிமாவில் சண்டைக் காட்சிகளில் மட்டும் அடி, அப்படித்தான் போட்டு அடி, அவனை விடாதே என்று உணர்ச்சிவசப்பட்டு கத்துகிறார்கள். அழுகை காட்சிகளில் எத்தனை பேர் தாரைத்தாரையாக கண்ணீர் விடுகிறார்கள். அவர்களின் ஊடே இந்த உணர்வுகள் எப்படி ஊடுருவுகிறது.

சினிமாக்களில் சண்டைக் காட்சிகளில் கதாநாயகன் அடிக்கும்போது, டிஷ்யூம் டிஷ்யூம் என்பது போன்ற மிகையான ஒலிகள் ஏன் எழுப்பப்படுகின்றது. நிஜத்தில் எங்கேயாவது யாராவது ஒருவரை முகத்திலோ உடம்பிலோ கை முஷ்டியை மடக்கிக் கொண்டு குத்தும்போது டிஷ்யூம் என்று சத்தம் கேட்கிறதா? மொத் என்றுதான் கேட்கும். அதுகூட அவ்வளவு சத்தம் இருக்குமா என்பது சந்தேகம்தான். அப்படியிருக்கையில் ஏன் இந்தக் காட்சி அமைப்பு திரைத்துறையில் மிகைப்படுத்தப்படுகிறது. ஏனென்றால், அது மனிதனின் உணர்வுகளிடையே பயணிக்கத்தான். அந்த வன்முறையை ஊடுருவ வைக்கத்தான். ஏன் எதற்காக ஒருவரை அந்த வன்முறைக்குள் நாம் இழுத்துக்கொண்டு செல்ல வேண்டும். இதனால், யாருக்கு என்ன லாபம். பாதிப்பு நிச்சயம் என்கிறபோது சினிமாதானே என்று நாம் கடந்து செல்ல முடியாது அல்லவா.

ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு செல்லும் ரசிகன், திரையில் என்ன வன்முறையை கண்டுகளித்தானோ, ஆர்ப்பரித்தானோ அதே மனநிலையோட வீட்டுக்குத் திரும்புவான். இதனை ஏதாவது ஒருவகையில், தன் அன்றாட வாழ்வின் நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்த முயற்சிப்பான். தன்னையறியாமல் அந்த ஹீரோயிசத்துக்கான வன்முறைக்குள், நிஜத்துக்கும் நிழலுக்குமான வித்தியாசத்தை கண்டறியக்கூடிய தன்மையற்று தன்னை முன்னிருத்தி சோதனை செய்வான். அதில் பாதிப்பு எதுவானாலும் முழுவதும் அது அவனை மட்டும்தான் சேரும். அந்த தாக்கத்தின் பாதிப்பு என்பது அவனை எதுவரை தொடரும் என்பதினை வரையறுத்துக் கூற முடியாது. அவன் வாழும் வாழ்வியல் சூழலைப் பொறுத்து நீட்சித் தன்மை இருக்கும்.

மேலும், அந்த வன்முறை காட்சியானது ஏற்படுத்தும் உணர்வு தாக்கமானது சம்பந்தப்பட்டவர்களை தாக்கும் வரை காற்றில் பயணித்துக்கொண்டே அதிர்வுகளாகக் காத்திருக்கும். இப்படித்தான் பழிக்குப் பழி கொலை நிகழ்வுகளில் நடக்கிறது. அந்த அதிர்வுகள் அடுத்த தலைமுறை வரை கூட தன்னைக் கடத்த காத்திருக்கும். காத்திருக்கும் அந்த அதிர்வினை நிச்சயம் யாரோ ஒருவர் உள்வாங்கும் வரை அது காத்திருக்கும். அத்தகைய வெறுப்பினை, தாக்கத்தினை யாருக்காக நாம் உருவாக்குகிறோம். யாரை நோக்கி அந்தக் கோபத்தினை தூண்டுகிறோம். செலுத்துகிறோம் என்பது பெரும் விவாதத்துக்கு உரியது.

மொத்தத்தில் ஒருவனின் வாழ்க்கை இங்கு கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. இதனால்தான் சொல்கிறேன். இந்த நவீனக் காலத்தில் நமக்கு கிடைத்திருக்கும் அற்புதமான திரை டெக்னாலஜியின் வளர்ச்சியை எந்தளவு நல்ல விதத்துக்காக பயன்படுத்த வேண்டும் என்பதில் திரைத்துறையினர் கூடுதல் கவனம் கொள்ளவேண்டும் என்பது என்னுடைய எண்ணம். அது வளரும் தலைமுறையினரைப் பண்படுத்தி, மெதுமெதுவாக ஓர் அழகான சமூகத்தை உருவாக்கும் பயணம் என்பது திண்ணம்.

என்னுடைய 56 ஆண்டுகளுக்கு மேலான சினிமா துறையில் இதுவரைக்கும் இல்லாததை இப்போது பார்க்கிறேன். இன்றைக்கு சாதி ரீதியிலான பார்வைக்குள் சினிமா சிக்கிக் கொண்டிருப்பது என்பது பெரும் கஷ்டத்தை தருகிறது. அன்றைய காலங்களில் சினிமாவை முழுமையான கலையாக மட்டுமே பார்த்தார்கள். எனக்கு, உனக்கு என்றெல்லாம் எதையும் காரணம் காட்டி தனித்தனியாகப் பிரித்து வைத்துக்கொள்ளவில்லை.

இன்று எத்தனை நல்ல விஷயமாக எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் நல்ல கருத்துகள் சொல்லப்பட்டிருந்தாலும், அதனை ஏதோ ஒரு விதத்தில் மொத்தமாக சாதி என்கிற ஒரே மையப்புள்ளியை பிரதானமாக வைத்துக்கொண்டு சங்கமித்து உருவாக்கப்படும் படத்தின் மொத்தப் பார்வையும் விசாலமற்று, தனது மையப்புள்ளி எதுவோ அதனை மட்டுமே மையமாக பயணித்து ஒரு குறுகிய நோக்கத்தின் எல்லைக்குள் சென்று குவிந்து விடுகிறது. இது அபாயம். இந்த நோக்கம் இங்கு வருகிறபோதே கலையானது குறுகி காணாமல்போய் விடும். இதனை இன்றைய தலைமுறையினர் உணர்ந்து தெளிவாக தவிர்க்க வேண்டியவற்றை திடத்துடன் தவிர்த்து நல்வழியில் சினிமா உலகைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.”

விருது வாங்கிய `சிற்பிகளின் சிற்பங்கள்` பற்றி...

“சாதாரணமான, ஏழ்மையான நிலையில் வளர்ந்து, இன்று பெரும் ஜவுளிக்கடை நிறுவனத்தைச் சேர்ந்தவர் டி.கே.சந்திரன். ஒருநாள் அவர் என்னை அழைத்து நான் சிறுவயதில் படித்த காலத்தில் நன்றாக பாடம் நடத்தி என்னை சிறந்த ஆளாக்கிய ஆசிரியர் பற்றி ஒரு டாக்குமென்டரி பண்ண வேண்டும் என்றார். அப்பொழுது எனக்குத் தோன்றியது என்னவென்றால், அந்த ஓர் ஆசிரியருடன் நின்றுவிடாமல், இவருக்கு கிடைத்த ஆசிரியர் போல ஒவ்வொருவருக்கும் ஓர் ஆசிரியர் நிச்சயம் ஒவ்வொருவரின் வாழ்விலும் இருப்பார்கள். அவர்களையெல்லாம் நேரில் சந்தித்து ஒரு சிறப்பான ஆவணமாக நாம் இதைப் பண்ண வேண்டும் என்கிற வகையில் தொடங்கியதுதான் இந்த ‘சிற்பிகளின் சிற்பங்கள்’ பயணம்.

அதன்பிறகு மதுரை, பொள்ளாச்சி போன்ற பல மாவட்டங்களில் சிறந்த ஆசிரியர்களைத் தேடித் தேடி ஆவணப்படுத்த தொடங்கினேன். இதில் என்னைக் கவர்ந்த ஆச்சரியங்கள் ஏராளமானது இருக்கின்றது. பொள்ளாச்சிக்கு அருகிலான ஒரு ஊரில் ஆசிரியர் ஒருவர் அங்கேயே பிறந்து, வளர்ந்து, அங்கே உள்ள பள்ளியிலேயே பயின்று, அதே பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி, தலைமை ஆசிரியராக உயர்ந்து ரிட்டயர்டும் ஆகி அதே ஊரிலேயே இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இது எவ்வளவு அழகான விஷயம்.

சமீபத்தில்கூட வாட்ஸ்அப்பில் நான் கண்டு நெகிழ்ந்த ஒரு வீடியோவையும் இந்த ஆவணப்படம் உருவாக ஒரு காரணம் என்று சொல்லுவேன். கேரளாவில் 35 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் சிலர் ஒன்றுகூடி நின்றுகொண்டு தங்களின் வயதான ஆசிரியை நேரில் சந்தித்து மகிழ்கிறார்கள். பிறகு ஆசிரியையிடம் ஒரு பிரம்பைக் கொடுத்து, ஒவ்வொருவரும் கையை நீட்டிக் கொண்டு தங்களை அடிக்கச் சொல்கிறார்கள். அந்த ஆசிரியை வேண்டாம் என்று சிரித்துக்கொண்டே மறுக்கிறார். இவர்கள் விடுவதாக இல்லை என்றான பிறகு, ஆசிரியை முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சியுடன் தன் மாணவர்களை பொய்யாக, வலிக்காமல் மெதுவாக அடிக்கிறார். அடி வாங்கும் மாணவர்கள் எல்லாரும் அதனைக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

அந்த மாணவர்களில் இன்று எத்தனை பேர், ஒரு ஐஏஎஸ் அதிகாரியாகவோ, ராணுவ அதிகாரியாகவோ, அரசு அதிகாரியாகவோ இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் அந்த ஆசிரியையிடம் பிரம்பைக் கையில் கொடுத்து, விருப்பத்துடன் அடி வாங்குவதை எவ்வளவு உரிமையாகப் பார்க்க முடிகிறது. நீங்கள்தான் எங்களைச் செதுக்கி இருக்கிறீர்கள் என்பதை அவர்கள் சொல்லாமல் சொல்கிறார்கள். அது ஒரு வகை அன்பு. பரஸ்பர அன்பு. உங்களுக்கு இன்றும் எங்களை திருத்தி, வழிநடத்தும் உரிமை எப்போதும் இருக்கிறது என்பதைத்தான் அவர்கள் சொல்லாமல் சொல்லி நெகிழ வைத்திருக்கிறார்கள்.

இன்றும் இதுபோல் எத்தனையோ நல் ஆசிரியர்கள் வெளியே தெரியாமல் தங்களின் பணத்தைக் கொடுத்து எத்தனையோ ஏழை மாணவர்களைப் படிக்க வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதையெல்லாம் அடிப்படையாக வைத்து உருவானதுதான் ‘சிற்பிகளின் சிற்பங்கள்.’

பொதுவாக, ஆவணப்படங்களின் ஆவணப்படுத்துதலில் ஏழ்மை, அழுகை, கஷ்டங்கள் போன்றவைகள் தான் பிரதானமாகச் சொல்லப்படும். ஆனால், முழுமையான வாழ்க்கை என்பது அது மட்டும் இல்லையே என்பதை உணர்ந்ததால், இந்த ஆவணப்படத்தில் நேர்மறையாக அத்தனை மாணவர்களும் ஆசிரியர்களும் மகிழ்ச்சியை மட்டுமே வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு கஷ்டங்கள் என்று இல்லாமல் இல்லை.

இன்னும் ஒன்று சொல்கிறேன். நிச்சயம் ஆச்சர்யப்பட்டுப் போய்விடுவீர்கள். இந்த ஆவணப்படத்துக்காக மதுரை பக்கம் மேலூருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மாணவியை சந்திக்க வேண்டியிருந்தது. நேரில் பார்த்ததேன். அவ்வளவு ஏழ்மையில் இருக்கிறார். அவரிடம் சென்று அவரின் ஆசிரியரைப் பற்றி பேசியதுதான் தாமதம். அந்தளவு அவரைப் பற்றி பேசி மகிழ்கிறார். அந்த வீட்டில் ஒரு கழிப்பறை வசதி கூட இல்லை. அந்தப் பேட்டியில் ஒரு இடத்தில் கூட தன் ஏழ்மையைப் பற்றி ஒரு வார்த்தைகூட பகிர்ந்துகொள்ளவில்லை.

வீட்டில் கழிப்பறை இல்லாததைக்கூட என் அசிஸ்டென்ட் மூலமாகத்தான் தெரிந்துகொண்டேன். அதற்கும் ஒரு கதை இருக்கிறது என்றவர் மேலும் தொடர்கிறார், திடீரென என்னுடன் இருந்த அசிஸ்டென்ட் பையனைக் காணவில்லை. எங்கே அவர் என்று தேடிக் கொண்டிருக்கும்போதே தூரத்தில் சைக்கிளில் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அருகில் வந்து நின்றவர் சாரி சார் என்றபடி அந்த கவர்மென்ட் சைக்கிளை அவர்கள் வீட்டு சுவற்றில் சாய்த்து நிறுத்தி விட்டு வந்து என்னிடம் விவரித்தது இப்படித்தான்.

சார், அவசரமாக கழிப்பறைக்கு செல்ல வேண்டியதாகி விட்டது. வீட்டில் கழிப்பறை இருக்கிறதா என்று கேட்டு இல்லையென்றபின், ஊரெல்லாம் சென்று தேடிப் பார்த்தேன். எங்கும் இல்லை. அதன்பிறகு அந்த சகோதரியின் சைக்கிளை வாங்கி கொண்டு நான் கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தொலைவு தாண்டி இருக்கும் ஒரு குளத்திற்கு சென்று வருகிறேன் என்றவரிடம், சரி ஒரு ஆண் என்பதால் நீங்கள் இவ்வளவு தொலைவு செல்ல முடிந்தது. ஆனால், பெண்கள் என்றால், அவர்களின் நிலை என்ன என்பதை அவரிடம் கேள்வியினை மட்டுமே பதிலாக கொடுத்துவிட்டு, எனக்கு அதிர்ச்சியை மட்டும் சமாதானமாக வைத்துக்கொண்டேன்.

தற்போது அந்தப் பெண்ணை டி.கே.சந்திரன், தன்னுடைய பள்ளி ஆசிரியரின் வழிகாட்டுதலின்பேரில் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அந்தப் பெண்ணும் சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தொலைவு தினமும் சைக்கிள் மிதித்து சென்று, அங்குள்ள பஸ் நிலையத்தில் சைக்கிளை, சைக்கிள் ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு, அதன்பிறகு அங்கிருந்து பஸ் பிடித்து 10 கிலோமீட்டர் தாண்டி இருக்கும் கல்லூரி சென்று படித்து வந்து கொண்டிருக்கிறார். அந்த சிரமம் அவரை நிச்சயம் உயர்த்தும்.

இன்றைக்கு கல்விதான் எல்லாமுமாக இருக்கிறது. அதனைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் சாதி, மத பேதம் எதுவும் இல்லை. கிராமமோ நகரமோ குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டியது ‘படி’யப்பா படி. கல்வி மட்டும்தான் உயர்வு தாழ்வுகளை நீக்கும் வெளிச்சம்.

முக்கியமாக இதனை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். சென்னை கலைவாணர் அரங்கம் என்று பெயர் மாற்றத்திற்கு முன்னர், பாலர் அரங்கமாக செயல்பட்டுக் கொண்டு இருந்தது. முழுக்க முழுக்க சிறார்களுக்கான நிகழ்ச்சிகள் மட்டும் தான் நடைபெறும். அங்கு நடக்கும் நிகழ்ச்சிகள் அத்தனையும் அரசின் மூலம் இலவசமாக நடத்தப்படும். அந்த நேரங்களில் அங்கு எங்குப் பார்த்தாலும் சிறுவர்கள் பட்டாளங்கள் வரிசை கட்டிக்கொண்டு இருக்கும்.

தற்போதும் அதேபோல் தமிழக அரசு இந்த கலைவாணர் அரங்கத்தின் ஒரு பகுதியினை கட்டணமின்றி ஒதுக்கி, அன்று நடந்ததுபோல குழந்தைகளுக்கான திரைப்படங்களை திரையிட முன் வர வேண்டும். முக்கியமாக குழந்தைகளுக்கான படங்கள், குழந்தைகள் பற்றிய படங்கள், குழந்தைகள் இயக்கும் படங்களை அங்கு வெளிக்கொண்டு வந்து அங்கு திரையிட வேண்டும். இத்தகையப் படைப்புகளை உருவாக்குவதற்காக, சிறு மானியம் கொடுத்து ஒரு வாரியம் தமிழக அரசு அமைத்தால் குழந்தைகளுக்கான, சிறார்களுக்கான ஆவணப்படங்கள் அதிகம் எடுக்கப்படும். இதனை அரசுக்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோளாக முன் வைக்கிறேன்.”

இயக்குனாராகும்போது உங்கள் படங்களை நீங்களே எடிட்டிங் செய்வீர்களா?

“நிச்சயமாக இல்லை. நான் இயக்குனாராக இருக்கும்பட்சத்தில் அந்தப் பக்கமே போகமாட்டேன். முழுக்க எடிட்டிங் செய்தது ஒரு தம்பிதான். ஆனால், அவர் எடிட்டிங் செய்திருந்ததில் முடிவாக சில கரெக்ஷன்களை மட்டுமே நான் சொன்னேன். நன்றாக வந்திருந்தது. அதன்பிறகே இந்தப் படத்தை நான் தேசிய விருதுக்காக அனுப்பினேன். கல்வி சம்பந்தமான பிரிவில் அதனை எடுத்துக்கொண்டு தேசிய விருது கொடுத்திருக்கிறார்கள். மகிழ்ச்சி.”

உங்களின் இத்தனை ஆண்டுகால உழைப்பு பற்றி... மனநிறைவு இருக்கிறதா?

“உழைக்கும் உழைப்பில் கஷ்டப்படுத்தி விட்டார்களே, அவமரியாதை செய்து விட்டார்களே என்று நான் இன்றுவரையில் எதையும் பெரிதாக எடுத்துக்கொண்டதே இல்லை. அப்படி நினைத்தோம் என்றால் நாம் ஏதோ ஒரு இடத்தில் நின்றுவிடுவோம். அதுற்கடுத்து நாம் தொடர்ச்சியாகப் பயணிக்க வாய்ப்பில்லாமல் போய்விடும். அதனால் எதையும் பெரிதாக கருதுவதில்லை. என்னைப் பொறுத்த அளவில் உழைப்புதான் மகிழ்ச்சி, உழைப்பு தான் சொர்க்கம். எனக்கான பாதையில், எனக்கான ஓட்டத்தில் நான் ஓடிக்கொண்டே இருக்கிறேன்.

பெரிதாக நான் சம்பாதித்தது என்றும் எதுவும் இல்லை. நினைத்த நேரத்தில் சென்று திரைப்படம் பார்க்கிறேன். வீட்டுக்கு வருகிறேன். இதோ நான் தூங்க ஓர் அறை இருக்கிறது. ஒரு கட்டில் இருக்கிறது. அது இல்லையென்றாலும் கூட நான் சாதாரணமாக ஒரு பாயை விரித்து சந்தோஷமாக தூங்கிவிடுவேன். நினைத்த நேரத்தில் நண்பர்களைப் போய் பார்க்கிறேன். இதற்கு மேல் நான் காசு பணம் சேர்த்துவைத்து என்ன செய்யப் போகிறேன். பெரிதாக ஒன்றும் சேர்த்து வைக்கவில்லை. ஆனால் மிகுந்த மனநிறைவோடு வாழ்கிறேன்.

இன்னும் கூடுதலாக சொல்லப்போனால், சிறியவர், பெரியவர் என்கிற வேறுபாடின்றி என்னிடம் பழகுகிறவர்களிடம் மிகவும் எளிதாக ஒருவரிடம் சரணாகதி ஆகிவிடுவேன். சரணாகதி அடையும்போது அவர்களின் தனித்துவ திறமைகள் போன்றவற்றை நான் ஈகோ இன்றி கற்றுக்கொள்ள முடிகிறது என்பதால், அது எனக்கு அவரவர்களின் திறமையையும் ஆற்றலையும் நான் உள்வாங்கி கற்க முடிகிறது. இந்த கற்றல் எனக்கு அவர்களின் திறைமையின் பாதி பலத்தைக் கொடுத்து விடும். சரணாகதி அடைதலின் குருபாவம், சிஷ்ய பாவம் என்பதன் சாராம்சம் இதுதான். இந்த குணம் நம்மை வாலி ஆக்கிவிடும். ஈகோ களைந்த இந்த குணம் என்னுடையாக இருப்பதால் மிகப் பெரிய அளவில் நான் சந்தோஷமாக இருக்கிறேன்.”

வியந்த சினிமா கலைஞர்கள் பற்றி?

“சினிமாத் துறையில் ஒவ்வொரு கலைஞர்களும் ஒவ்வொரு விதத்தில் எனக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், நான் மிகவும் வியந்த கலைஞர்கள் என்றால், துணை நடிகர்கள்தான். நாளைய வாழ்வுக்கு எதுவும் இருக்காது. என்ன செய்யப்போகிறோம் என்று தெரியாது. ஆனாலும் எப்பேதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கு எல்லா நாளும் நடிக்க வாய்ப்பு இருக்குமா என்பது கேள்விக்குறி. ஆனாலும் அசராமல் ஒவ்வொரு நாளும் வளசரவாக்கத்தில் பிரசாத் ஸ்டூடியோ பக்கத்தில் வந்து நின்றுகொண்டு வரிசையாக அமர்ந்து காத்திருப்பார்கள். எப்படியும் ஒரு வாய்ப்பு வந்துவிடும் என்கிற ஒரு அபார நம்பிக்கை அன்று அவர்களுக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்துவிடும்.

நான் சின்ன வயதில், துணை நடிகராக இருந்த ஒருவரைப் பார்த்தேன். இரண்டாவது வரிசை மூன்றாவது வரிசையில் நின்று கொண்டிருப்பார். ஆனாலும் இப்போதும் அவரைப் பார்க்கிறேன். தற்போது அவருக்கு வயது 88-க்கு மேல் கூட இருக்கும் என்று நினைக்கிறேன். ஆசைப்பட்டு ஒருமுறை அவரிடம் பேசி விட்டேன். ஐயா, பல வருடங்களுக்கு முன்பே உங்களைப் பார்த்திருக்கிறேன். இப்போதும் இதே நடிப்பை நடித்து கொண்டிருக்கிறீர்களே என்றேன். ஆமாம் கூப்பிடுகிறார்கள். இப்போதைய வித்தியாசம்னா... அன்று 2-வது வரிசை... இன்று கடைசி வரிசை. வேலை அதே தான் என்றார் எந்தவித விரக்தியும் சலிப்புமின்றி. நான் என்ன சொல்ல வியப்பைத் தவிர. இதுல, சில நாட்கள் வேலை இல்லாமல் இருந்திருக்கிறேன். ஆனாலும் எனக்கு 6 பெண் குழந்தைகள். இந்த வேலை பார்த்தே நான் என் குழந்தைகளுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்துவிட்டேன் என்கிறார் சந்தோஷமாக.

ஐயா நீங்கள் என்ன ஆக வேண்டும் என்று நடிக்க வந்தீர்கள் என்றதுக்கு, நான் எல்லாரையும் அடிச்சு தூக்கிப்போட்டு, ஹீரோவாக ஆக வேண்டும் என்று நினைத்துதான் வந்தேன். இன்று 3 வது 4வது வரிசையில் நின்று துணை நடிகராக நின்று கொண்டிருக்கிறேன். ஆனாலும், ரொம்ப சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். சில நேரம் வேலை இருக்காது. சக தொழிலாளிகளிடம், நாளையாவது கட்டாயம் கூப்பிடுங்கப்பா என்பேன், அவர்களோ சரி பெருசு, இப்போ சாப்பிடுறியா வா... சரவணா பவன் போவோம்னு கூப்பிட்டுப்போய் அவர்களுக்கோ அன்றைய தினத்தில் கிடைத்த சொற்ப வருமானத்தில் என்னுடன் உணவருந்திப் போவார்கள். அதே மறுநாள் அதனை அவர்களுக்கு இவரும் செய்வாராம். இப்படியாகத்தான் இந்த உலகம் சுழல்கிறது. இதுக்கு மேல என்ன இருக்கு. இப்போ சொல்லுங்க இவர்களெல்லாம் எந்த அளவு வியப்புக்குரியவர்கள்.”

இன்றைய இளம்தலைமுறை எடிட்டிங்கில் சிறப்பாக்கிக் கொள்ள தங்களை எப்படி தயார்படுத்திக்கொள்ள வேண்டும்?

“வாசிப்பு. அது ஒன்று மட்டும்தான் அவர்களைத் தனித்து நிறுத்தும். நிறைய வாசிப்பு வேண்டும். அது நாவலோ, கவிதையோ, கதையோ எதுவாகினும் தொடர் வாசிப்பு வேண்டும். அது பிடிக்குதோ பிடிக்கவில்லையோ. இதில் எந்த காரணம்கொண்டும் சமரசம் செய்துகொள்ளக் கூடாது. இந்த வாசிப்பு திறமை பெருக பெருக எடிட்டிங் திறமை வந்து விடும். இந்த இடத்தில் இந்த ஆக்‌ஷன் வர வேண்டும் என்கிற உணர்வு நமக்குள்ளே தானாக வந்துவிட வேண்டும். ஒரு படத்தின் எடிட்டராக வேலை செய்யும்போது அந்தப் படத்தின் டைரக்டராகவே ஆகிவிடவேண்டும். அந்தப் படத்தின் நடிகராக மாறிவிட வேண்டும். அப்போதுதான் நாம் அந்த எடிட்டிங்கைச் சிறப்பான முறையில் செய்ய முடியும். நாம் இதுவரையில் படித்த, வாசித்த, பழகிய, உள்வாங்கிய மனித உணர்வுகளை அங்கே கொட்டி வெளிப்படுத்திக்கொள்ள தெரிய வேண்டும்.

அடுத்ததாக, முதல் நிலையிலேயே பெரிய அளவில் பெரிய படம் பண்ணுகிற எடிட்டரிடம்தான் சேர வேண்டும் என்கிற எண்ணத்தை முதலில் கைவிட வேண்டும். எந்தப் படம் கிடைக்குதோ அதற்கு எடிட்டிங் பண்ண வேண்டும். நிறைய சின்னச் சின்னப் படங்களால்தான் இன்று சினிமா துறையே இயங்கி கொண்டிருக்கிறது. எது கிடைத்தாலும் அதில் திறமையை முழுவதுமாக கொட்ட வேண்டும்.

ஒரு டான்ஸ் சீன், பைட் சீன்லலாம் அந்தந்த மாஸ்டர்ஸ் இல்லாமல் கட் பண்ண வேண்டிய திறமையை அவசியம் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு எடிட்டங்கிற்கும் சம்பந்தப்பட்டவர்கள் உடனிருக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தக் கூடாது. அப்படி கட் செய்ய நமக்கு எல்லாத்திலேயும் எல்லாமும் தெரிந்திருந்தால் தான் அத்தகைய ஒரு தைரியம் வரும். அந்த தைரியம் வர வேண்டும். அதற்கு சம்பந்தப்பட்டவர்களாக அவர்களின் துறை சார்ந்த திறமையாளர்களாகவே நாம் மாறி விட்டால் ஜெயிக்கலாம். வேலை செய்ய செய்ய அது நமக்கு கற்று கொடுத்து நம்மை ஆளாக்கி விடும்.

நாயகன் படத்தில் ஒரு வசனம் வரும்... முன்னெயெல்லாம் ஒரு காசு சம்பாதிப்பது அவ்வளவு சுலபம் இல்ல... நாங்க செத்து பிழைக்கணும்னு... அன்று அப்படி. இன்று அப்படி இல்லை. அதைத்தான் இன்றைய காலத்தில் சொல்கிறேன். இன்றைய தலைமுறையினர்களின் காலக் கட்டங்களில் டெக்னாலஜி வளர்ச்சி என்பது மிகப் பெரிய வரம். அதனைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.”

குறிப்பாக உங்களைப் பற்றி?

“எத்தனை மணிக்கு இரவில் உறங்கினாலும் தினமும் சரியாக அதிகாலை 4 மணிக்கு எழுந்து விடுவேன். பால் வாங்கி வந்து ஒரு டீ, சின்னதாக ஒரு உடற்பயிற்சி. அதற்குமேல் துணி துவைத்து, குளித்து, சமையல், நியூஸ் பேப்பர் வாசிப்பது என்று வைத்துக்கொண்டாலும் கூட... 7 மணிக்கு எல்லாம் என் அன்றாட வேலைகளை முடித்துவிடுவேன். தேவைப்பட்டால் கிடைக்கும் நேரங்களில் ஒரு புத்தக வாசிப்பு இருக்கும். எப்படிப் பார்த்தாலும் ஒரு நாளைக்கு எனக்கு அதிகபட்சம் 4 மணி நேரம் கிடைக்கிறது. பார்த்துக்கங்க இந்த 4 மணி நேரம் அதிகமாக கிடைத்திருப்பது எனக்கு எத்தனைப் பெரிய செல்வம்.

எங்கே சென்றாலும் அரை மணி நேரத்துக்கு முன்னதாக சென்று விடுவேன். நேரக்குறைவால் அரக்கப் பறக்க ஓட மாட்டேன். நம்மை நிதானமாக, பொறுமையாக வைத்துக்கொள்ள உதவுவது இந்த நேர நிர்ணயம்தான். அதனை நான் மிகவும் சரியாக தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்” என்கிறார் எடிட்டர் பி.லெனின்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x