Published : 08 Dec 2017 03:18 PM
Last Updated : 08 Dec 2017 03:18 PM
என்னுடைய அடுத்தகட்ட அரசியல் நகர்வை விரைவில் அறிவிப்பேன் என்று விஷால் தெரிவித்திருக்கிறார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் விஷாலின் வேட்புமனு பலதரப்பட்ட சர்ச்சைகளுக்குப் பிறகு நிராகரிக்கப்பட்டது. மேலும், இன்று (டிசம்பர் 8) காலை முதலே தினகரனுடன் விஷால் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானது. அதை வைத்து, தினகரனுக்கு விஷால் ஆதரவு தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இது தொடர்பாக விஷால் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நான் போட்டியிட மனு தாக்கல் செய்தது எனது சுயசிந்தனையின் உந்துதலால் எடுத்த முடிவே. ஆர்கே நகர் மக்களுக்கு மக்கள் பணியாற்றவே இந்த முடிவை எடுத்தேன். ஆனால் பவர் பாலிடிக்ஸ் என்னும் ஆதிக்க அரசியல் சக்திகளால் ஜனநாயகம் சிதைக்கப்பட்டு என் மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. எனக்கு நேர்ந்த அநீதிக்கு மக்கள் மன்றமே சாட்சி. ஆர்கே நகரில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டாலும், என்னுடைய மக்கள் பணிகளும் ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் போராட்டமும் தொடரும்.
நான் சிலரை ஆதரிப்பதாக செய்தி பரப்பப்படுகிறது. நான் யாரையும் ஆதரிப்பதாக இதுவரை சொல்லவில்லை. அப்படி ஒரு முடிவை எடுக்கவே இல்லை. எனது போராட்டத்தில் என்னுடன் துணை நின்ற எனது ரசிகர்கள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். அதேபோல் எனக்காகவும் நீதிக்காகவும் குரல் கொடுத்த அனைத்து தலைவர்களுக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
என்னுடைய அடுத்தகட்ட அரசியல் நகர்வை விரைவில் அறிவிப்பேன். ஆளுங்கட்சிக்கு ஒரு கோரிக்கை. ஆர்.கே.நகர் தேர்தல் உங்களுக்கு முக்கியம்தான். ஆனால் அதைவிட முக்கியம் கன்னியாகுமரியில் நடக்கும் குளச்சல் மீனவர்கள் போராட்டம். மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் முக்கியம். நியாயமான கோரிக்கைகளுடன் இரண்டு நாட்களாக போராடி வரும் மீனவர்களை உடனே சந்தித்து பேசி அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள். ஆர்கே நகர் மக்கள் கூட இதைத் தான் எதிர்பார்க்கிறார்கள். இது உங்களுக்கு நல்ல பெயரைத்தான் கொடுக்கும். மீனவர்கள் சார்பிலும் ஆர்கே நகர் தொகுதி மக்கள் சார்பிலும் இந்த கோரிக்கையை வைக்கிறேன்.
இவ்வாறு விஷால் தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT