Published : 02 Sep 2023 04:58 AM
Last Updated : 02 Sep 2023 04:58 AM
ரஜினிகாந்த் சிறந்த நடிப்பை வழங்கிய படங்களில் ஒன்று, ‘புவனா ஒரு கேள்விக்குறி’. சம்பத் என்ற கதாபாத்திரமாக அவர் வாழ்ந்திருந்தார் என்பது இந்தப் படத்துக்கு அப்படியே பொருந்தும். வழக்கமாக ஹீரோவாக நடிக்கும் சிவகுமார் நெகட்டிவ் கேரக்டரிலும் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வந்த ரஜினி, நல்லவராகவும் நடித்த படம் இது. அதுவே இந்தப் படத்துக்குப் பலமான ஒன்றாக மாறிப்போனது.
மகரிஷியின் கதைக்கு பஞ்சு அருணாச்சலம் திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார். எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இந்தப் படத்தை எம்.ஏ.எம் பிலிம்ஸ் சார்பில் என்.எஸ்.மணி தயாரித்திருந்தார். சிவகுமார், ரஜினி, சுமித்ரா, ஜெயா, சுருளிராஜன், ஒய்.ஜி.மகேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
நாகர்கோவிலில் தெருவில் துணிவிற்பவர்கள், நண்பர்களான நாகராஜும் (சிவகுமார்) சம்பத்தும் (ரஜினிகாந்த்). நாகராஜ், பெண்கள்விஷயத்தில் கொஞ்சம் அப்படி இப்படி. இருவரும் துணி கொள்முதலுக்காக சென்னைக்கு ரயிலேறுகிறார்கள். உடன் பயணிக்கும் முத்து (ஒய்.ஜி.மகேந்திரன்) திடீரென இறந்துவிட, அவர் சூட்கேஸில், ஏகப்பட்ட பணம். சிவகுமார், அதை அபகரித்துக் கொள்வார். ரஜினிக்கு அதில் விருப்பமில்லை. முத்துவின் சகோதரி புவனா வுக்கு (சுமித்ரா)இவர்கள் மீது சந்தேகம். விவரம் கேட்க வரும் அவரை மயக்கி, காதல் வலையில் விழவைப்பார் நாகராஜ்.
புவனா தாய்மை அடைய, வழக்கம் போல அவரை கழற்றிவிட திட்டம் போடுவார். தான் துணிவாங்கி வியாபாரம் செய்யும் முதலாளி, தன் மகள் மனோகரியை (ஜெயா), நாகராஜுக்கு திருமணம் செய்துவைத்து துணிக்கடை வைத்துக்கொடுப்பார். திருமணமாகாமல் புவனாவுக்கு ஆண் குழந்தைப் பிறக்கும். அவருக்கு துணையாகச் சம்பத் இருப்பார். வெளியுலகிற்கு இவர்கள் கணவன் மனைவி போல் வாழ்வார்கள். வீட்டுக்குள் தனித்தனியாக வசிப்பார்கள். திருமணமாகி சில வருடங்களாகியும் நாகராஜுக்கு குழந்தை இல்லை. அதற்கு வாய்ப்பில்லை என்று தெரிய வரும்.
இதனால் தன் மகனையே தத்தெடுத்து வளர்க்கலாம் என்று நாகராஜ் கேட்க, புவனாவும் சம்பத்தும் மறுத்துவிடுகிறார்கள். இப்போது குழந்தை, நோயால் உயிருக்குப் போராடும். நள்ளிரவில் குறிப்பிட்ட மருந்து வேண்டும் என்பார் மருத்துவர். அது நாகராஜ் கடையில் இருக்கும். ஆனால், அவர் குழந்தையைத் தனக்கு தந்துவிடச் சொல்லி விலை பேசுவார். அப்போது வேறொரு இடத்தில் இருந்து மருந்து வாங்கி வந்து குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவார் சம்பத். இப்போது தனது தவறை உணர்ந்து திருந்துவார் சிவகுமார். பின்னர், நெஞ்சுவலியால் சம்பத் உயிர் துறக்க, அவரை கணவனாக ஏற்று வெள்ளைப் புடவையுடன் வாழ்வாள் புவனா.
இளையராஜா இசையில் பஞ்சு அருணாச்சலம் எழுதிய 'விழியிலே மலர்ந்தது’, ‘பூந்தென்றலே’,‘ராஜா என்பார் மந்திரி என்பார்’ஆகிய மூன்று பாடல்களும் ஹிட்.
அப்போது ரஜினிக்கு தமிழ் உச்சரிப்பு சரியாக இருக்காது, வாத்தியார் லட்சுமி நாராயணன் என்பவர் அவருக்கு வசனங்களைச் சொல்லிக்கொடுத்தார். முதல் படப்பிடிப்பில் வசனங்களைப் பார்த்து ரஜினி பயந்துவிட்டார். ‘பாலசந்தர் சார் படத்துல மொத்த வசனமும் குறைவாதான் இருக்கு. நீங்க ஒரு காட்சிக்கே இவ்வளவு வசனம் கொடுக்குறீங்க. எனக்கு அது கஷ்டம்’ என்றார் ரஜினி. பிறகு ‘நீங்க நாலு நாலு வரியாஉங்க ஸ்டைல்ல பேசுங்க, ஒரே ஷாட்டில் எடுக்காம பிரிச்சு எடுக்குறோம்’ என்றார் இயக்குநர் முத்துராமன். ’ பிறகு ஒப்புக்கொண்டார் ரஜினி.
ரஜினி நடிப்பில் 25 திரைப்படங்களை இயக்கி இருக்கிற எஸ்.பி.முத்துராமனும் ரஜினியும் இணைந்த முதல் திரைப்படம் இது. 1977-ம் ஆண்டு இதே நாளில்தான் வெளியானது இந்தப் படம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT