Published : 30 Aug 2023 09:00 PM
Last Updated : 30 Aug 2023 09:00 PM
சென்னை: ‘ஜவான்’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ஷாருக்கான் படக்குழுவினர் ஒவ்வொருவருக்கும் புகாழப் பெயர்களை சூட்டி அரங்கை அதிரவைத்தார்.
சென்னையில் நடைபெற்ற ‘ஜவான்’ இசை வெளியீட்டு நிகழ்வில் பேசிய ஷாருக்கான், “நான் என் வாழ்வில் ஒரு படத்துக்கான நிகழ்ச்சியை கூட தமிழ்நாட்டில் நடத்தியதில்லை. தமிழ்நாட்டில் இருந்து சிறந்த படங்கள் வெளியாகின்றன. ‘ஹே ராம்’ படத்தில் நான் தமிழில் பேசியிருந்தேன்.
விஜய் சேதுபதியிடமிருந்து நான் நிறைய கற்றுகொண்டேன். விஜய் சேதுபதி நீங்கள் என்னை பழிவாங்கலாம்; ஆனால் என்னை விரும்பும் பெண் ரசிகைகளை நீங்கள் எடுத்துகொள்ள முடியாது. அனிருத் என் மகனைப் போன்றவர். ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடலிலிருந்து அனிருத்தை கவனித்து வருகிறேன். ஒரு இந்தி, ஒரு தமிழ் பாடலுக்கு மட்டும் அனிருத்தை இசையமைக்க வைக்கலாமா என அட்லீ கேட்டார். ஏன் ஒரு பாடலுக்கு மட்டும், மொத்தப் படத்துக்கும் அவரே இசையமைக்கட்டுமே என்று சொன்னேன்.
நான் ஷோபி மாஸ்டரிடம் எனக்கு கடினமான ஸ்டெப்பை கொடுக்காதீர்கள் என்றேன். காரணம் நான் விஜய் மாதிரி நடனமாட மாட்டேன் என்றேன். என்னை நடனமாட வைத்துவிட்டார் ஷோபி மாஸ்டர்” என்றார். தொடர்ந்து படக்குழுவினருக்கு தமிழில் பட்டங்களை வழங்கி பேசிய ஷாருக்கான், “நான் தமிழில் அட்லீயை ‘மரண மாஸ்’ என்றுதான் வாழ்த்த முடியும். ‘கம்பீரமான’ முத்துராஜ், ‘விறுவிறுப்பான’ ரூபன், ‘அட்டகாசமான’ விஜய் சேதுபதி, ‘வித்தைக்காரன்’ அனிருத், ‘வசீகரமான’ நயன்தாரா” என பலருக்கும் பட்டப் பெயர் வைத்துப் பேசினார் ஷாருக்.
முன்னதாக பேசிய விஜய் சேதுபதி, “நான் சிறுவயதிலிருந்தே ஒரு சேட்டு பெண்ணை காதலித்தேன். அவர் ஷாருக்கானை விரும்புவதாக கூறிவிட்டார். அப்போதிலிருந்தே ஷாருக்கானை பழிவாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதற்கு இத்தனை நாட்கள் ஆகிவிட்டது. அவர் என்னை நல்ல நடிகர் என சொன்னபோது ஷாக் ஆகிவிட்டேன்” என கலகலப்பாக பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT