Published : 30 Aug 2023 05:30 AM
Last Updated : 30 Aug 2023 05:30 AM

ஹேமமாலினி அறிமுகமான ‘இது சத்தியம்’

சில திரைப்படங்களை விட அதன் பாடல்கள் என்றும் மறக்காமல் இருக்கும். இதற்குப் பல திரைப்பாடல்களை உதாரணமாகச் சொல்ல முடியும். அப்படியொரு பாடல்தான் பி.சுசீலா குரலில் வந்த ‘சரவண பொய்கையில் நீராடி..’. இந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம், ‘இது சத்தியம்’. அசோகன் ஹீரோவாக நடித்திருந்த இந்தப் படத்தின் கதையை, ரா.கி. ரங்கராஜன் எழுதியிருந்தார். குழுதம் இதழில் அவர் எழுதிய தொடர்தான் இது. மா.லட்சுமணன் திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார்.

கே.சங்கர் இயக்கிய இந்தப் படத்தில் கே.சந்திரகாந்தா கதாநாயகியாக நடித்தார். அதற்கு முன் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், இந்தப் படத்தில் கதாநாயகியாக உயர்ந்தார். டி.எஸ்.பாலையா, டி.எஸ்.துரைராஜ், நாகையா, கண்ணாம்பா, மனோரமா உட்பட பலர் நடித்திருந்தனர். வழக்கமாக அந்தக் காலகட்டங்களில் அம்மா வேடங்களில் நடித்து வந்த கண்ணாம்பா, இதில் பணக்காரப் பாட்டியாக நடித்தார்.

ஜி.என்.வேலுமணியின் சரவணா பிலிம்ஸ் இதைத் தயாரித்திருந்தது. இந்தப் படத்தில் இடம்பெறும் ‘சிங்காரத் தேருக்கு...’ என்ற பாடலுக்கு ஆடியிருந்தார் ஹேமமாலினி. பாலிவுட்டில் கனவுகன்னியாக வலம் வந்த ஹேமமாலினியின் முதல் திரை அறிமுகம் இந்தப் படம்தான். அப்போது அவருக்கு வயது 15. விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில், கவிஞர் கண்ணதாசன் எல்லா பாடல்களையும் எழுதி இருந்தார். ‘மனம் கனிவான அந்தக் கன்னியை...’, ‘காதலிலே பற்று வைத்தாள்’, ‘குங்குமப் பொட்டு குலுங்குதடி’, ’சத்தியம் இது சத்தியம்’ ஆகிய பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. 1963-ம் ஆண்டு இதே நாளில் வெளியான இந்தப் படத்துக்கு வயது 60.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x