Published : 22 Dec 2017 02:14 PM
Last Updated : 22 Dec 2017 02:14 PM
நண்பன் காதலுக்கும், தன் காதலுக்கும் சேர்ந்து போராடும் நாயகனின் கதையே ‘சக்க போடு போடு ராஜா’.
எதிர்ப்பை மீறி நண்பன் சேதுவின் காதலை சேர்த்து வைக்கப் போராடுகிறார் சந்தானம். சேதுவின் காதலி பாப்ரி கோஷ் மிகப் பெரிய ரவுடி சம்பத்தின் தங்கை என்பதால் ரிஸ்க் அதிகமாகிறது. ஆனாலும், முயற்சியைக் கைவிடாமல் சேதுவுக்கும் பாப்ரி கோஷுக்கும் திருமணம் செய்து வைத்து ரயிலேற்றி அனுப்பி விடுகிறார் சந்தானம். அதனால் தனக்கு வரும் ஆபத்தை உணர்ந்து சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு இடம் பெயர்கிறார். அப்போது யதார்த்தமாக வைபவியை சந்தித்ததும் காதலில் விழுகிறார் சந்தானம். நண்பனின் திருமணத்தால் வரும் பிரச்சினைகள், ஒரு கும்பலால் காதலிக்கு வரும் ஆபத்து, காதலியின் அண்ணனால் தனக்கு வரும் ஆபத்து என எல்லாவற்றையும் சந்தானம் எப்படி எதிர்கொள்கிறார், காதலியின் அண்ணன்களை சமாளித்தாரா, காதலியைக் கரம் பிடித்தாரா என்பது மீதிக் கதை.
சந்தானத்துக்கு ஏற்ற கதையைப் படமாகக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சேதுராமன். தோற்றம், ஸ்டைல், நடனம் என வேற மாதிரியாக இருக்கிறார் சந்தானம். நான்காவது படத்தின் நாயகன் என்பதற்கான உழைப்பு படத்தில் தெரிகிறது. சில கஷ்டமான நடன அசைவுகளில் கவனிக்க வைக்கிறார். ரோபோ ஷங்கரைக் கலாய்ப்பது, விவேக்கிடம் பேசுவது, சம்பத்தை நம்ப வைப்பது என புத்திசாலித்தனமான அணுகுமுறைகளை கச்சிதமாக செய்கிறார். ஆனால், அவரது தோற்றத்துக்கு உடல் மொழி ஒத்துழைக்கவில்லை. இதனால் சந்தானத்தின் ஒட்டுமொத்த எனர்ஜியும் எடுபடாமல் போகிறது. சந்தானத்திடம் இருந்த நகைச்சுவைத் தன்மையையும் அவர் பெரிதாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
வைபவி படம் முழுக்க வருகிறார். ஆனால், அவருக்கு எந்த முக்கியத்துவமும் தரப்படவில்லை. 'நான் சத்யா தங்கச்சி' என சத்தம் போடுவதும், காதலில் விழுந்த பிறகு 'சான்டா' என உருகுவதுமே வேலையாக இருக்கிறது. விடிவி கணேஷ், ராஜ்குமார், டேனியல், சஞ்சனா சிங், மயில்சாமி ஆகியோர் சரியான கதாபாத்திர தேர்வுகள்.
சம்பத்தும், விவேக்கும் படத்தில் வீணடிக்கப்பட்டு இருக்கிறார்கள். அண்ணா என்று சொன்னாலே உணர்வுவயப்பட்டு தங்கைக்காக எதையும் செய்யத் துடிப்பவராக சம்பத் பாத்திரம் பக்குவமில்லாமல் வார்க்கப்பட்டிருக்கிறது. அதில் பாசமோ, உண்மையோ துளியும் இல்லை. படத்தின் தொடக்கத்தில் வரும் டைட்டில் கார்டில் மட்டும் விவேக்குக்கு முதலிடம் தந்திருக்கிறார்கள்.
சரத் லோகிதஸ்வாவும், நாராயண் லக்கியும் தங்களின் வழக்கமான வேலையை செய்துவிட்டுப் போகிறார்கள். பவர் ஸ்டார் சீனிவாசன் காமெடி செய்கிறேன் என்று வசனங்களை உதிர்த்துவிட்டுச் செல்கிறார். ஆனால், வசன உச்சரிப்பில் மட்டும் தேர்ந்திருக்கிறார்.
அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவும், சிம்புவின் இசையும் ஓகே ரகம். காதல் தேவதை, கலக்கு மச்சான் பாடல் வரிகள் ரசிக்க வைக்கின்றன.
''தெரிஞ்சவங்க லவ்வுக்கு ஹெல்ப் பண்ணா, நம்ம லவ்வுக்கு தேவதை மாதிரி ஒரு பொண்ணு கிடைப்பான்னு எனக்குத் தெரிஞ்சவர் ஒருத்தர் சொல்லியிருக்காரு'', ''பஞ்ச் டயலாக் பேசிட்டு அடிக்கிறது எல்லாம் பழைய ஸ்டைலு, பஞ்ச் டயலாக் பேசுறவனை அடிக்குறதுதான் புது ஸ்டைலு'', ''போனவாரம் கூட ஓட ஓட ஒருத்தனை வெட்டுனேன், ஓடும்போது முடி வெட்றது ரொம்ப கஷ்டமாச்சே எப்படி வெட்டுன'' போன்ற வசனங்கள் சந்தானத்துக்கே உரிய ஸ்டைலில் தெம்பூட்டுகின்றன.
படத்தில் சந்தானம் யார்? அவர் பின்புலம் என்ன? என்பது தெளிவாகச் சொல்லப்படவில்லை. வைபவ் சாண்டில்யாவின் இன்னொரு அண்ணன் யார் என்ற ட்விஸ்ட் எடுபடுகிறது. ஆனால், அவ்வளவு பெரிய நபர் ஒரு இளைஞனைத் தேடிக் கண்டுபிடிக்க சிரமப்படுவது நம்பும்படியாக இல்லை. அந்தத் தேடல் படலம் சுவாரஸ்யமாகவும் இல்லை.
விவேக் உடனான சம்பத் காட்சிகளில் பழைய டெக்னிக் பயன்படுத்தப்பட்டிருப்பதால் சோர்வூட்டுகிறது. விவேக் என்ன சொல்லியும் நம்பாமல் இருக்கும் சம்பத் அதற்குப் பிறகு உடனே எப்படி நம்புகிறார், வில்லன்கள் பக்கம் காரை நிறுத்தி வைபவியைக் காப்பாற்ற ஓடிவரும் சந்தானம் ஏன் திடீரென்று எதிர்ப்பக்கம் வந்து நிற்கிறார், அதற்குப் பிறகு ஏன் காப்பாற்றப் போராடுகின்றார் என்பதில் லாஜில் மீறல்கள் தென்படுகின்றன. காரை விட்டுவிட்டு நாயகியின் கைபிடித்து ஓடி மறைவதெல்லாம் எந்தக் காலத்து முறை என்றே தெரியவில்லை.
குடும்பத்தினரின் சம்மதத்தோடு காதலியைத் திருமணம் செய்ய வேண்டும் என்ற நாயகனின் எண்ணம் பாராட்டுக்குரியது. அதற்காக காதலி குடும்பத்துக்கு நேர்ந்த முன் பின் நடந்த வருத்த வடுக்களை நீக்கி, மகிழ்ச்சியை வரவழைப்பதும் ஆரோக்கியமானது. ஆனால், பாசம் கொண்ட நபர்கள் அரிவாள், துப்பாக்கி என்று சுற்றித் திரிந்தாலும் மூளையை உபயோகிக்காதவர்கள் என்று காட்சிப்படுத்துவதெல்லாம் நம்பும்படியாக இல்லை. முந்தைய தமிழ்ப் படங்களின் சாயல்களும் படத்தில் அதிகம் இருக்கின்றன. இவற்றை தவிர்த்துப் பார்த்தால் வழக்கமான கலகலப்புடன் கூடிய ஒரு காதல் படமாக 'சக்க போடு போடு ராஜா' இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT