Published : 31 Jul 2014 12:00 AM
Last Updated : 31 Jul 2014 12:00 AM
இன்றைய இளைஞர்களுக்கு பிடித்த முக்கியமான விஷயங்களில் ஒன்று பைக். இதையே மையமாக வைத்து ‘இரும்பு குதிரை’ படத்தை இயக்கி வருகிறார் அறிமுக இயக்குநரான யுவராஜ் போஸ். அதர்வாவை நாயகனாக வைத்து உருவாகிவரும் இப்படத்தின் டீஸரே கோடம்பாக்கத்தில் பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது. இந்நிலையில் யுவராஜ் போஸை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்.
‘இரும்பு குதிரை’ படம் ஏதாவது உண்மைச் சம்பவத்தைஅடிப்படையாகக் கொண்டதா?
இது பாண்டிச்சேரியில் நடந்த உண்மைக் கதை. பைக்கை உயிராக நினைத்து காதலிக்கும் இளைஞர்களின் கதை இது.பைக்கர்ஸ் கதைனு கூட இதைச் சொல்லலாம்.
‘பொல்லாதவன்’ படம்கூட இதே மாதிரியான கதைக்களம்தானே? அதற்கும் இந்தப் படத்துக்கும் என்ன வித்தியாசம்?
‘பொல்லாதவன்’ படத்தில் ஒரு இளைஞன் ஒரு பைக்கை மிகவும் ஆசைப்பட்டு வாங்குவான். ஆனால் இந்தக் கதையில் நாயகனுக்கு பைக்கின் மீது ஆரம்பத்தில் எந்த ஈடுபாடும் இருக்காது. போகப் போகத்தான் அவனுக்கு பைக் மீது காதல் வரும். அந்த வகையில் இந்த படமும் ‘பொல்லாதவன்’ படமும் வித்தியாசப்படும். இரண்டு படங்களின் கதைக்களங்களும் வேறு.
இந்தப் படத்தில் அதர்வாவை எப்படி பைக்கராக மாற்றினீர்கள்?
இந்தப் படத்தின் முதல் பாதியில் மிக இயல்பான இளைஞராக அவர் வருவார். ஆனால், பைக்கராக வரும் போது இருக்கவேண்டிய உடல் மொழிக்காக அவர் அதிகமாக உழைச்சுருக்கார். அதோடு இப்படத்தில் வரும் பைக் சண்டையைக் கற்றுக்கொள்ள அவர் இத்தாலியில் பதினெட்டு நாள் ஒரு பயிற்சி வகுப்புக்கு போனார். இந்த படத்தில் வரும் பைக் சண்டைகளில் திறமையான இளைஞர்களை கஷ்டப்பட்டு தேடிப்பிடித்து நடிக்க வைத்துள்ளோம்.
‘ஏழாம் அறிவு’ படத்தில் நடித்த ஜானியை இப்படத்தின் வில்லனாக்கி இருக்கிறீர்களே?
இந்தக் கதை பாண்டிச்சேரியில் நடக்கிறது. அங்கு வெளிநாட்டுக்காரர்கள் ரொம்ப அதிகம். இந்தக் கதைக்கு வில்லனாக நடிக்க ஒரு வெளிநாட்டுக்காரர் தேவைப்பட்டார். மக்களிடம் ஏற்கனவே அறிமுகம் ஆன ஒருவர் இந்த வேடத்தில் நடிதால் நன்றாக இருக்குமே என்று நினைத்துதான் அவரை இப்படத்தின் வில்லனாக்கியுள்ளோம்.
உங்களின் உதவி இயக்குநர் வாழ்க்கையைப் பற்றி சொல்லுங்கள்?
நான் இயக்குநர் அறிவழகனிடம் ‘ஈரம்’, ‘வல்லினம்’ ஆகிய படங்களில் வேலை பார்த்துள்ளேன். அவர் எனக்கு தொழில்நுட்ப ரீதியாக பல உதவிகளைச் செய்திருக்கிறார். ஒரு கதைக்கு என்ன தேவையோ என்ன செய்யவேண்டுமோ அதை மட்டும்தான் அறிவழகன் சார் செய்வார். அதைத் தாண்டி தேவையில்லாத விஷயங்களைச் செய்யமாட்டார். ‘சொல்ல வர்ற விஷயம் புதுசாக இருக்க வேண்டும், அப்படி செய்தால்தான் அதில் ஒரு திருப்தி இருக்கும்’ என்று அடிக்கடி சொல்லுவார். அதைப் பின்பற்றித்தான் நான் இந்தப் படத்தை இயக்குகிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT