Published : 26 Dec 2017 05:44 PM
Last Updated : 26 Dec 2017 05:44 PM
'உள்குத்து' கதைக்களம் உருவானது எப்படி என்று இயக்குநர் கார்த்திக் ராஜு விளக்கம் அளித்திருக்கிறார்.
கார்த்திக் ராஜு இயக்கத்தில் தினேஷ், நந்திதா தாஸ், திலீப் சுப்பராயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'உள்குத்து'. ஜஸ்டின் இசையமைத்துள்ள இப்படத்தை விட்டல் தயாரித்திருக்கிறார். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இப்படம் டிசம்பர் 29-ம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் கதைக்களம் குறித்து கார்த்திக் ராஜு கூறியிருப்பதாவது:
என் வீட்டுக்கு பக்கத்தில் மீன் சந்தை ஒன்று உள்ளது. அங்கு மீன் விற்பனை நடைபெறும். அதன் அருகில் சின்ன பசங்க அந்த மீனை வெட்டி கிலோக்கு 20 ரூபாய் என சுத்தம் செய்து கொடுப்பார்கள். அதை ரொம்ப நாளாவே கவனித்தேன். மீன் சந்தையில் புதன், சனி, ஞாயிறு மட்டுமே வேலை இருக்கும். மற்ற நாள்களில் அந்த சிறுவர்கள் என்ன செய்வார்கள் என்று யோசித்தேன். அப்போது தோன்றியதுதான் இந்த கதை.
இது குறித்து மீன் விற்பர்களிடம் தகவல்களை சேகரித்தேன். அதுவும் மிக சுவாரஸ்யமாக இருந்தது. மீனவர்களுக்கு மீன் வாங்க கையில் காசு இருக்காது. காலையில் மீனவர்கள் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்குவார்கள். அவர்களுக்கு கடன் கொடுப்பவர்கள் ஒரு லட்சத்தில் பத்தாயிரம் ரூபாயை எடுத்துவிட்டு மீதமுள்ள 90,000 ரூபாய் பணத்தை மட்டுமே கையில் தருவார்கள். மாலையில் ஒரு லட்சம் ரூபாயாக மீனவர்கள் கடன் கொடுப்பவர்களிடம் கொடுக்க வேண்டும் என்ற விஷயத்தைக் கூறினார்கள்.
அவர்களிடம் மீன் விற்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் மீனை ஐஸ் பாக்ஸில் போட்டு விடுவோம். மறுநாள் விற்பனை செய்வோம் என்றார்கள். ஆனால் அன்று ஐந்தாயிரம் ரூபாய்க்கு மட்டும் விற்று இருந்தால் எங்கள் பாடு திண்டாட்டம்தான். அடி, உதை கூட சமயத்தில் விழும் எங்களால் எதுவுமே செய்ய முடியாது. ஏனென்றால் மீண்டும் அவர்களிடம்தான் எங்கள் தேவைக்கு பணம் வாங்க வேண்டியிருக்கும். அது கந்து வட்டியா இருக்குமோ என்று கூட எங்களுக்கு சொல்லத் தெரியவில்லை என்றார்கள்.
அதே போல் மீனை வெட்டும் பசங்களும் சில விஷயத்தைச் சொன்னார்கள். நான் மீன் வெட்டுகிறேன் ஒரு கிலோக்கு 20 ரூபாய் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு அதிகபட்சம் இரண்டு மணி நேரத்தில் இருபது முதல் இருபத்தைந்து கிலோ வரை மீனை வெட்டுவேன். அதன் பின் எந்த வேலையும் இல்லை என்றார்கள். நான் இந்த சின்ன பசங்களை மையப்படுத்தி ஒரு ரவுடித்தனத்தை உட்புகுத்தி கதை தயார் செய்தேன். இந்த சின்ன பசங்களுக்கு வேலை இல்லாத நேரத்தில் இவர்களை யாரவது தவறாகப் பயன்படுத்தினால் என்ன ஆகும் என்று கற்பனையில் ஒரு கதையை உருவாக்கினேன்.
அவர்கள் கூறியதும், என் கற்பனையில் வந்தது போல் அவர்களை சிலர் தவறான விஷயத்துக்காக பயன்படுத்துகிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டனர். அதை மையப்படுத்தியும் ஒருவன் தன் வீட்டில் உள்ளவர்களை விட நண்பனிடம் தான் அதிக விஷயங்களைப் பகிர்ந்து கொள்வான் என்ற விதத்தில் கிட்டதட்ட 25 வருட நட்பை மையப்படுத்தியும், ஒரு நண்பனுக்கு ஒரு பிரச்சினை என்றால் அவன் நண்பன் எப்படி அதை கையாளுவான் என்றும் இந்தக் கதையை அமைத்தேன்.
'உள்குத்து' என்பது உள்ளே ஒன்றை வைத்து வெளியே ஒன்றை செய்வது என்று அர்த்தம். இந்தக் கதையும் அதைச் சார்ந்து தான் இருக்கும். சினிமா துறையைச் சார்ந்த அசோக் என்பவர் சமீபத்தில் கந்துவட்டி பிரச்சினையால் இறந்துவிட்டார். அச்சம்பவம் எனக்கு மிகுந்த வருத்தத்தை தந்துள்ளது.
இந்தக் கதை ஒரு வருடத்திற்கு முன்னரே மேற்கொள்ளப்பட்டதால் தற்போதைய நிகழ்வுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ’திருடன் போலீஸ்’ படத்தின் படப்பிடிப்பின் போதே நான் , தினேஷ், பாலசரவணன் ஆகிய மூவரும் மீண்டும் இணைவதாக முடிவு செய்துவிட்டோம். அப்படித்தான் 'உள்குத்து' உருவானது.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT