Last Updated : 22 Dec, 2017 01:38 PM

 

Published : 22 Dec 2017 01:38 PM
Last Updated : 22 Dec 2017 01:38 PM

கொஞ்ச நாள் கழித்து வெளியிடுங்கள்: தமிழ் ராக்கர்ஸிற்கு வேலைக்காரன் இயக்குநர் வேண்டுகோள்

கொஞ்ச நாள் கழித்து தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியிடுங்கள் என்று 'வேலைக்காரன்' இயக்குநர் மோகன் ராஜா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, சதீஷ், ரோபோ சங்கர், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'வேலைக்காரன்'. ஆர்.டி.ராஜா தயாரித்துள்ள படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இப்படம் குறித்து இயக்குநர் மோகன் ராஜா கூறியிருப்பதாவது:

சிவகார்த்திகேயன் இல்லையென்றால் இப்படமே நடந்திருக்காது. படத்தில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. வீம்புக்கு நடிகர்களை நடிக்க வைக்காமல் அனைவருக்குமே நல்ல கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறேன். அனிருத் சின்ன பையன், ஆனால் பெரிய திறமையாளர். நயன்தாரா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம். அவர் ஒரு படத்தில் இருந்தாலே அது மிகவும் கவனிக்கத்தக்க படமாக தான் இருக்கும், அந்த அளவுக்கு பக்குவமான நடிகையாகி இருக்கிறார்.

1989ல் 'ஒரு தொட்டில் சபதம்' படத்திலிருந்து சினிமாவில் இருக்கிறேன். நிறைய பேரிடம் ஆலோசித்து தான் படங்களை எடுத்து வருகிறேன். 14 உதவி இயக்குனர்கள், 2 ஆராய்ச்சி குழுக்கள், எழுத்தாளர்கள் சுபா ஆகியோருடன் நிறைய விவாதித்து அவர்களின் கருத்துகளையும் ஏற்றுக் கொண்டு தான் உருவாக்கியிருக்கிறேன். இப்படத்தில் சமூகத்தில் கேட்க நினைத்த கேள்விகளை கேட்டிருக்கிறேன். 20 வருடங்களாக என் மனதுக்குள் இருந்த கேள்விகளை கேட்க, தகுதியை வளர்த்துக் கொண்டேன். 'தனி ஒருவன்' ஒரு அடையாளத்தை கொடுத்தது. இப்படத்தில் மக்கள் கேட்க நினைத்த கேள்விகளையும் சேர்த்து கேட்டிருக்கிறேன்.

பெரிய படங்களிலும் கருத்து சொல்ல முடியும், அதற்கான பெரிய மார்க்கெட்டை உருவாக்க முடியும் என்பதை இப்படத்தில் முயற்சி செய்திருக்கிறோம். சினிமா தரும் பொழுதுபோக்கை விட செய்தி தொலைக்காட்சி தரும் சமூக பிரச்சினைகள், அரசியல் அவலங்கள் போன்ற பொழுதுபோக்கு தான் இப்போது அதிகம். என்னை நம்பி கொடுத்த இவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணத்துக்காக மட்டுமே படம் இயக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. படத்தில் தவற்றை யாரும் விரும்பி பண்ணுவதில்லை. ஜெயிப்பதற்காக தான் பண்றோம், நன்மை ஜெயிக்கும் என்று நிரூபித்தால் நன்மையை விரும்பி பண்ணுவாங்க என்று ஒரு வசனம் இருக்கிறது. அது தான் உண்மை.

ஒரு நல்ல படம் வெளிவருவதில் நிறைய தடைகள் இருக்கின்றன. தயாரிப்பாளர், நாயகன் ஆகியோரை திருப்திப்படுத்த படங்கள் படம் எடுத்து, ஒரு மேடை அமைத்த பிறகு தான் நாம் நினைத்ததை எடுக்க முடியும். வேலைக்காரர்கள், முதலாளித்துவம் பற்றிய குறைகளை இந்த படத்தில் சொல்லியிருக்கிறேன். இந்த சமூகத்தில் உழைப்புக்கான ஊதியம் பெரும்பாலானோருக்கு கிடைப்பதில்லை. அதையும் சினிமா மூலம் சொல்ல முயற்சித்திருகிறேன். கேள்வி கேட்டு புரட்சி செய்த காலம் முடிந்து விட்டது, பதில் சொல்லி புரட்சி செய்ய வேண்டிய காலம் இது. இந்த படத்துக்கு பிறகு அது நடக்கும். சமூகத்தை பற்றி பேசும் படங்கள் நேர்மறையாக மட்டும் தான் சொல்ல வேண்டும்

புது படம் வந்தால் ஒரு வாரம் தியேட்டரில் ஓடுகிறது. ஆனால், 'வேலைக்காரன்' இன்னும் ஒரு வாரம் சேர்த்து 2 வாரம் திரையரங்குகளில் ஓடும் என்று எதிர்பார்க்கிறேன். அதன் பிறகு தான் அடுத்தடுத்த படங்கள் வந்துவிடுகிறது. அதோடு இல்லாமல், தமிழ் ராக்கர்ஸ் இணையம் வேறு இருக்கிறது. இவர்கள் தான் பெரிய பிரச்சனையாக இருக்கிறார்கள். அவர்களும் மிகச்சிறந்த வேலைக்காரர்கள், மூளைக்காரர்கள். ஒவ்வொரு படத்திற்கும் தூங்காமல் வேலை பார்ப்பார்கள். உழைப்பை அவர்கள் மதிப்பதாக இருந்தால் 'வேலைக்காரன்' படத்தை கொஞ்ச நாள் கழித்து தமிழ் ராக்கர்ஸில் வெளியிடலாம்

இவ்வாறு மோகன் ராஜா தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x