Published : 27 Aug 2023 05:43 AM
Last Updated : 27 Aug 2023 05:43 AM

இதயக் கமலம்: நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன்...

விதவிதமான இரட்டை வேட திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வந்திருக்கின்றன. அதில் தவிர்க்க முடியாத ஒன்று,‘இதயக் கமலம்’.

லண்டனில் படித்துக்கொண்டிருக்கும் பாஸ்கர்(ரவிச்சந்திரன்), தன் மனைவி கமலா, உடல் நிலைசரியில்லாமல் இருப்பதால் உடனடியாகத் திரும்புகிறார் அங்கிருந்து. அவரது கையிலேயே உயிரை விடுகிறார் கமலா. இந்நிலையில் கொள்ளை கோஷ்டியை விரட்டிப் பிடிக்கும் போலீஸார், ஒரு பெண்ணை கைது செய்கின்றனர். அவள், தான் பாஸ்கரின் மனைவி கமலா என்று கூற, அதிர்ச்சி அடைகிறார்கள் அனைவரும். பாஸ்கர் வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கும் அவள், அவர்களைப் பற்றி தெளிவாகச் சொல்கிறார். தனது மனைவி இறந்துவிட்டார், ‘இவர் யாரோ?’ என்கிறார் பாஸ்கர். விஷயம் நீதிமன்றம் செல்கிறது. இறுதியில் பாஸ்கர் கையில் உயிர்விட்டது விமலா என்றும் இவர் கமலா என்றும் தெரியவர, சுபம் .

ராஜா பரஞ்சாபே இயக்கி 1964-ல் வெளியான ‘பத்லாக்’ (Pathlaag) என்ற மராத்திப் படத்தை தழுவிஉருவான படம் இது. கே.ஆர்.விஜயா 2 வேடங்களில் நடித்த இந்தப் படத்தில் ரவிச்சந்திரன் ஹீரோ. ஷீலா, குமாரி ருக்மணி, டி.எஸ்.பாலையா, ஆர்.எஸ்.மனோகர், பாலாஜி, சகஸ்ரநாமம் உட்பட பலர் நடித்த இந்தப் படத்தை காந்த் இயக்கி இருந்தார். ஈஸ்ட்மென் கலரில் வெளியான இதன் திரைக்கதை, வசனம் ஆரூர்தாஸ்.

தான் பாஸ்கரின் மனைவிதான் என்பதை நிரூபிக்க கே.ஆர்.விஜயா நீதிமன்றத்தில் படும்பாடு, பிளாஷ்பேக், தனக்கும் கணவருக்கும் நடந்த உரையாடல்கள், காட்சிகள் என அங்கும் இங்கும் செல்லும் சஸ்பென்ஸ் த்ரில்லராக கொண்டு செல்லும் திரைக்கதைதான் படத்தின் பலம்.

கே.வி.மகாதேவன் இசையில் மொத்தப் பாடல்களையும் எழுதியிருந்தார் கண்ணதாசன். அனைத்தும் ஹிட். ஜானகியின் குரலில் ‘மேளத்தை மெள்ள தட்டு மாமா’, பி.சுசீலாவின் குரலில், ‘உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல..’, ‘மலர்கள் நனைந்தன...’, பி.பி.னிவாஸ், சுசீலா குரலில் ‘தோள் கண்டேன்’, ‘நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன்...’ உட்பட அனைத்துப் பாடல்களுமே வரவேற்பைப் பெற்றன. இதில் சில பாடல்களை இப்போது கேட்டாலும் சிலிர்க்கும்.

அருமையான இயக்கமும் தெளிவான திரைக்கதையும் கே.எஸ்.பிரசாத்தின் சுகமான ஒளிப்பதிவும் இனிமையான பாடல்களும் இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கின. இதில் கே.ஆர்.விஜயாவின் நடிப்பு அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. 1965-ம் ஆண்டு இதே நாளில் வெளியானது இந்தப் படம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x