Published : 01 Dec 2017 08:21 PM
Last Updated : 01 Dec 2017 08:21 PM
சிம்புவால் நானும் பாதிக்கப்பட்டேன் என்று 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.
'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் பெரும் தோல்வியடைந்ததால், சிம்புவின் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் மைக்கேல் ராயப்பன் புகார் அளித்திருக்கிறார். மேலும், சிம்புவின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் தெரிவித்திருக்கிறார். (மைக்கேல் ராயப்பன் புகாரை முழுமையாக தெரிந்து கொள்ள). தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனின் குற்றச்சாட்டுக்கு சிம்புவும் பதில் அளித்திருக்கிறார்.(அதை முழுமையாக தெரிந்து கொள்ள)
இந்நிலையில், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இருவரும் பத்திரிகையாளர்களை சந்தித்து, தங்களுடைய நிலையை விளக்கினர்.
அச்சந்திப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசியதாவது:
எனக்கும் சிம்புவுக்கும் தனிப்பட்ட முறையில் எந்தவொரு பிரச்சினையுமே கிடையாது. பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். ஆனால், அவரோடு பணிபுரிவது என்பதுதான் கஷ்டம். 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் மொத்தம் 4 கதாபாத்திரங்கள். மூன்று கதாபாத்திரங்கள் வெளியிட்டுவிட்டு, 4-வது கதாபாத்திரத்தை சஸ்பென்ஸாக வைத்திருக்கலாம் என்பதுதான் திட்டம்.
'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படப்பிடிப்பின் முதல் நாளிலிருந்தே எங்களுடைய கட்டுப்பாட்டில் படம் இல்லை. "எனக்கு உன்னை விட அனுபவம் அதிகம், இப்படி செய்தால்தான் சரியாக வரும்" என்று அவர் கூறும் போது எதிர்த்துப் பேசினால், அந்த தருணத்தில் படப்பிடிப்பே நடக்காது.
'மதுரை மைக்கேல்' காட்சிகள் 20 நிமிடங்கள்தான், 'அஸ்வின் தாத்தா' காட்சிகள் 20 நிமிடங்கள்தான். ஆனால் அதை ஒருமணி நேரமாக இழுத்து, படமாக வெளியிட்டு இருக்கிறோம்.
முதலில் 2 பாகம் என்ற எண்ணத்திலேயே இல்லை. எப்படியாவது இப்படத்தை முழுமையாக முடிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே, அனைத்துப் பேட்டியிலும் அவரைப் பற்றி நல்லவிதமாக பேசத் தொடங்கினேன். ஆனால், பணி ரீதியில் பிரச்சினை கொடுத்திருக்கிறார் சிம்பு. அது தயாரிப்பாளருக்கே தெரியும். இவ்வளவு பெரிய தோல்விக்குப் பிறகு இருவரும் ஒரே மேடையில் அமர்ந்து பேசுகிறோம் என்றால், பிரச்சினை எங்கள் கையில் இல்லை என்றுதானே அர்த்தம்.
சிம்புவால் நானும் பாதிக்கப்பட்டேன். முதல் படம் கேவலமான படம்தான். ஆனால், அது ஓடிவிட்டது. ஒடுகிற படம் இயக்கக்கூடியவன் என்ற பெயர்தான் வாங்கியிருக்கிறேன். அதைவிட்டு வெளியே வந்து ஒரு கமர்ஷியல் படம் எடுக்கலாம் என்ற ஆசையில் இருந்தேன். அது நடக்கவில்லை. பெரிய தோல்வியடைந்தது. புகார் அளிக்கலாம் என்ற எண்ணமெல்லாம் வந்தது.
என்னை நம்பு. 'பார்ட் 1, பார்ட் 2' சரியாகப் போகவில்லை என்றால், மறுபடியும் நாம் இணைந்து படம் பண்ணுவோம் என்று சிம்பு கூறினார். இதையேதான் தயாரிப்பாளரிடமும் சொன்னார். அவர் சரியான முறையில் படப்பிடிப்புக்கு வந்து முடித்திருந்தால் பிரச்சினையே இல்லை. சுமார் என்ற ரிசல்ட் வந்தாலே போதும் என்ற நினைப்பில்தான் வெளியிட்டோம். ஆனால், இந்த அளவுக்கு தோல்வியடையும் என்று எதிர்பார்க்கவில்லை. கண்டிப்பாக அவரோடு இணைந்து மீண்டும் படம் பண்ணுவேன்.''
இவ்வாறு ஆதிக் ரவிச்சந்திரன் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT