Last Updated : 07 Dec, 2017 01:10 PM

 

Published : 07 Dec 2017 01:10 PM
Last Updated : 07 Dec 2017 01:10 PM

திரையரங்க கலாச்சாரமே எவ்வளவு நாள் இருக்கும் என தெரியவில்லை: தனுஷ்

திரையரங்கம் என்ற கலாச்சாரமே எவ்வளவு நாள் இருக்கும் என தெரியவில்லை என்று 'சக்க போடு போடு ராஜா' இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் தெரிவித்தார்.

சேதுராமன் இயக்கத்தில் சந்தானம், வைபவி சாண்டியல்யா, விவேக், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சக்க போடு போடு ராஜா'. இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார் சிம்பு. விடிவி கணேஷ் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். இவ்விழாவில் தனுஷ்  பேசியதாவது:

சந்தானம் மற்றும் படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள். சந்தானம் ஒரு காமெடியனாக அறிமுகமாகி, கதாநாயகனாக தன்னை உயர்த்திக் கொண்டிருக்கிறார். நம்பிக்கையோடு போராடினால், வாழ்க்கையில் எதுவுமே சாத்தியம். அவருடைய உழைப்பு, ட்ரெய்லர் மற்றும் பாடல்களைப் பார்க்கும்போதே தெரிகிறது. தொடர்ந்து அவர் பல வெற்றிகளை தர வேண்டும்.

அவரோடு 'பொல்லாதவன்' மற்றும் 'பரட்டை (எ) அழகுசுந்தரம்' என்ற 2 படங்கள் பணிபுரிந்திருக்கிறேன். 'பொல்லாதவன்' சமயத்தில் நிறைய பேசியிருக்கிறோம். அப்போது வெற்றிமாறனிடம் "இந்தப் பையனை பார்த்துக் கொள்ளுங்கள். தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ரவுண்ட் வருவான்" என்று சொல்லியிருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் சென்னை மொழியை அவ்வளவு அழகாக பேசுவார்.

சிம்புவும் நானும் 2002 வருடத்தில் நாயகனாக அறிமுகமானோம். அப்போதிலிருந்தே இருவரின் பெயரையும் ஒப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். பல வெற்றிகள், தோல்விகள், விமர்சனங்கள் என இருவருக்குமே இருந்து கொண்டு தான் இருக்கிறது. சினிமாவில் முன்பு வாய்ப்பு கிடைப்பது அவ்வளவு கடினம். இப்போதைய டிஜிட்டல் யுகத்தில் வாய்ப்பு கிடைப்பது எளிதாகிவிட்டது. யார் வேண்டுமானாலும் வரலாம், ஜெயிக்கலாம். ஆனால் நிற்பது தான் கடினம். 15 ஆண்டுகள் ஆனாலும் அவர் நின்று கொண்டு தான் இருக்கிறார்.

சினிமாவிலேயே பிறந்து, வளர்ந்து, ஊறின ஆள் நானல்ல. ஆனால் அவர் சினிமாவிலேயே பிறந்து, வளர்ந்து ஊறின ஆள். சினிமாவிலிருந்து நான் கொஞ்சம் தூரமாக இருக்க வேண்டும் என நினைத்தவன் நான். பிடிக்காமல் தான் நடிக்கவே வந்தேன். 'துள்ளுவதோ இளமை' படப்பிடிப்பில் எனக்கு நடனமாடவே வராது. அப்போது சிம்பு மாதிரி ஆடுங்கள் என்று சொல்லுவார்கள். 'சுக்குமாலா' பாடலில் சிம்புவின் நடனத்தைப் பார்த்துவிட்டு, 'இதே போல் எல்லாம் என்னால் ஆட முடியாது. அவர் நடிக்க வந்தவர், நான் பிழைக்க வந்தவன்' என்று நடன இயக்குநர் அசோக்குமாரிடம் தெரிவித்தேன். இப்போதும் சொல்கிறேன், சிம்பு போல் என்னால் நடனமாட முடியாது.

ஜெயிக்கும் போது கூட இருப்பவர்கள், ஜெயிக்க வேண்டும் என கூட இருப்பவர்கள் நண்பர்கள் கிடையாது. நாம் கஷ்டப்படும் போது கூட இருந்தவர்கள் மட்டுமே நண்பர்கள். அவர் என்னிடம் எதையும் எதிர்பார்த்ததில்லை, நானும் அவரிடம் எதையும் எதிர்பார்த்ததில்லை. ஆனால், இருவரும் ஒருவருக்கொருவர் நின்றிருக்கிறோம். எப்போதுமே இருவருக்குள்ளும் பிரச்சினை வராது. இருவருக்குள் நடுவே இருப்பவர்களுக்கு மட்டுமே பிரச்சினை வரும்.

இருவரும் இணைந்து நடிக்கும் படம் கூட நிச்சயமாக வரும். சிம்புவுக்கு நடிகர், இயக்குநர், பாடலாசிரியர் என பல முகங்கள் உண்டு. 21 வயதிலேயே ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். அப்போது அவரை பார்த்து வியந்திருக்கிறேன். தற்போது இசையமைப்பாளராக அறிமுகமாகி இருப்பதிலும் சந்தோஷம். அவருடைய இன்னொரு திறமை இந்த உலகம் காணவுள்ளது.

சிம்பு.. உங்கள் மீது ரசிகர்கள் இவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள், குரல் கொடுக்கிறார்கள். என்னைப் போல் அவர்களும் உங்களிடமிருந்து எதையுமே எதிர்பார்க்கவில்லை. வருஷத்திற்கு 2 படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும். அது உங்கள் கடமை, கண்டிப்பாக செய்ய வேண்டும். அவருடைய படங்களை என் ரசிகர்களும், என் படங்களை அவருடைய ரசிகர்களும் காண வேண்டும். ஏனென்றால் நாங்கள் நடிப்பது அனைவருக்கும் தான். ஒருவர் மீதிருக்கும் அன்பு, இன்னொருவர் மீது வெறுப்பாக மாறக் கூடாது.

திரையுலகம் தேய்ந்து கொண்டிருக்கிறது. திரையரங்கம் என்ற கலாச்சாரமே எவ்வளவு நாள் இருக்கும் என தெரியவில்லை. Amazon, HotStar, NetFlix என்று உலகம் வேறு மாதிரி போய் கொண்டிருக்கிறது. தற்போது உலகம் ரொம்ப மோசமான சூழலை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. யாருக்கு யார் நன்றாக இருந்தாலும் பிடிக்கவில்லை. என்ன விஷயம் என்று தெரியவில்லை. பிடித்தால் கொண்டாடுங்கள்.. பிடிக்கவில்லை என்றால் தள்ளி நில்லுங்கள். வாழுங்கள்.. வாழ விடுங்கள். அன்பை பகிருங்கள். அது மட்டுமே இந்த உலகத்துக்கு ரொம்ப தேவை.

இவ்வாறு தனுஷ் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x