Published : 20 Aug 2023 12:40 PM
Last Updated : 20 Aug 2023 12:40 PM

“9 ஆண்டு கால நட்பு” - அகிலேஷ் யாதவ் உடன் ரஜினிகாந்த் சந்திப்பு

லக்னோ: உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்.

‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாவதற்கு முந்தைய நாள் நடிகர் ரஜினிகாந்த் இமயமலை சென்றார் . பின்னர், இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய அவர், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனைச் சந்தித்து உரையாடினார். அங்குள்ள சின்னமஸ்தா காளி கோயிலுக்குச் சென்று வழிபட்டதற்கு இடையே ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரம தலைமையகத்தில் துறவிகளைச் சந்தித்தார். பின்னர் உத்தரப் பிரதேசம் சென்ற அவர் அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் படேலை லக்னோவில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

தொடர்ந்து நேற்று மதியம் உ.பி மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியாவுடன் ‘ஜெயிலர்’ படத்தை பார்த்தார். பின்னர், முதல்வர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில், இன்று உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார் ரஜினிகாந்த். அங்கு உ.பி முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “9 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் அகிலேஷ் யாதவை சந்தித்தேன். அன்று முதல் நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம். அவ்வபோது போனில் பேசிக் கொள்வோம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு படப்பிடிப்புக்காக இங்கு வந்தேன். ஆனால் அவரை என்னால் சந்திக்க இயலவில்லை. எனவே இப்போது அவரை சந்திக்கிறேன்” என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x