Published : 21 Dec 2017 01:46 PM
Last Updated : 21 Dec 2017 01:46 PM
'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தில் விமல் புகார் அளித்திருப்பதால், வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.
சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அமலா பால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. ஹர்சினி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதன் தணிக்கைப் பணிகள் முடிவடைந்து, ஜனவரி வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.
தற்போது இப்படத்தின் வெளியீட்டிற்கு எதிராக நடிகர் விமல், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் தயாரிப்பாளர் முருகனின் ஹேமந்த் மூவிஸ் தயாரிப்பில் 'ஜன்னல் ஓரம்' என்ற படத்தில் நடித்திருந்தேன். இந்த பட வெளியீட்டு சமயத்தில் நிதி நெருக்கடியில் தயாரிப்பாளர் சிக்கியிருந்த காரணத்தால் திட்டமிட்ட தேதியில் படத்தைக் கொண்டு வர முடியாமல் சிரமப்பட்டார். அப்போது என்னை அணுகி பட வெளியீட்டிற்காக நிதியுதவி செய்யும்படியும், படம் வெளியான பிறகு ஒரே வாரத்தில் பணத்தை திருப்பித் தருவதாகவும் உத்தரவாதம் அளித்ததை அடுத்து, கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியனிடமிருந்து 25 லட்சமும், லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திடமிருந்து 65 லட்சமும் கடனாக பெற்று முருகனிடம் கொடுத்தேன்.
நான்கு வருடங்கள் முடிவடைந்த நிலையில் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரிடமிருந்து ஒரு ரூபாய் கூட எனக்கு திரும்பி வரவில்லை. ஆனால் நிதியுதவி செய்தவர்களுக்கு வட்டியோடு திருப்பித் தர வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு நான் உள்ளாகி, தொழில் கவனம் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் முருகன், அவருடைய மனைவி பெயரில் தயாரித்து திரைக்கு வரவிருக்கும் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' பட வெளியீட்டிற்கு முன் என்னுடைய பணத்தைப் பெற்றுத் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு விமல் தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT