Published : 31 Dec 2013 05:39 PM
Last Updated : 31 Dec 2013 05:39 PM
தமிழ் திரையுலகில் 2013ல் முன்னணி நடிகர்களின் படங்களை விட, புதிய நடிகர்களின் படங்கள் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் பெரும் லாபத்தை சம்பாதித்து கொடுத்து இருக்கிறது.
ரஜினி, விக்ரம்,சிம்பு உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை. கமலின் 'விஸ்வரூபம்', அஜித்தின் 'ஆரம்பம்', சூர்யாவின் 'சிங்கம் 2' ஆகிய படங்கள் வசூலை வாரிக் குவித்தது.
படத்தின் வசூல் அளவில் முதல் இடத்தில் 'விஸ்வரூபம்', 'ஆரம்பம்', 'சிங்கம் 2' ஆகிய மூன்று இடங்களை பிடித்திருக்கிறது.
'ஆரம்பம்' 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்று செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது.ஆனால், திரையரங்கள் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் தரப்போ அந்தளவிற்கு வசூல் செய்ய வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள். பாக்ஸ் ஆபிஸில் ரஜினியின் 'எந்திரன்' படம் மட்டுமே 100 கோடி வசூலைத் தாண்டியது என்றார்கள்.'ஆரம்பம்' தயாரிப்பாளர் வெளிப்படையாக வசூலைத் தெரிவிக்காத வரை, வசூல் 100 கோடி என்ற குழப்பம் தொடரத்தான் செய்யும்.
படத்தயாரிப்பாளருக்கு லாபம், வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு லாபம், திரையிட்ட திரையரங்க உரிமையாளர்களுக்கு லாபம் என்றால் கண்டிப்பாக 'எதிர்நீச்சல்', 'சூது கவ்வும்', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'பாண்டியநாடு', 'ராஜா ராணி', 'தேசிங்குராஜா' எனப்பட்டது.
விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில், "எங்களுக்கு அதிக லாபம் சம்பாதித்து கொடுத்த படங்கள் என்றால், 'எதிர்நீச்சல்', 'வருத்தப்படாத வாலிபம்', 'ராஜா ராணி'. மற்ற படங்களான 'சூது கவ்வும்', 'பாண்டியநாடு', 'தேசிங்குராஜா' ஆகியவை குறைந்த லாபம் சம்பாதித்தது” என்றார்கள்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'எதிர் நீச்சல்', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' ஆகிய இரண்டு படங்களுமே கொடுத்த லாபத்தைப் பார்த்து, அவரது நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் 'மான் கராத்தே' படத்தின் வியாபாரம் சூடு பிடித்திருக்கிறது. சிவகார்த்திகேயன் படங்களின் வியாபாரம் குறைந்த காலத்தில் 20 கோடியைத் தொட்டு இருப்பது பல முன்னணி நடிகர்களை வியப்பில் ஆழ்ந்தியிருக்கிறது.
2013-ம் வருடத்தில் தடதடவென முன்னேறியது சிவகார்த்திகேயன் தான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT