Published : 26 Dec 2017 10:03 AM
Last Updated : 26 Dec 2017 10:03 AM
இன்று தொடங்கி 31-ம் தேதி வரை ரசிகர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியில்., அரசியல் நிலைப்பாடு குறித்து 31-ம் தேதி சொல்கிறேன் என்று ரஜினிகாந்த் பேசினார்.
கடந்த மே மாதம் ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினி. அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். அப்போது பேசும்போது, போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று அவர் பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.
இரண்டாம் கட்டமாக, ரஜினிகாந்த், தன் ரசிகர்களைச் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி, இன்று சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தொடங்கியது. இன்று முதல் வருகிற 31-ம் தேதி வரை, ரசிகர்களைச் சந்திக்கிறார் ரஜினி.
இந்த விழாவில், தயாரிப்பாளரும் கதாசிரியருமான கலைஞானம், இயக்குநர் மகேந்திரன் முதலானோர் கலந்து கொண்டு பேசினார்கள். அவர்களை அடுத்து, ரஜினிகாந்த் பேசினார்.
''சினிமாவில் என்னை அறிமுகப்படுத்தியவர் கே.பாலசந்தர். நடிக்கவேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். கதாநாயகனாக நடிக்கவேண்டும் என்றெல்லாம் நினைத்ததே இல்லை. ஆனால் கலைஞானம் சார்தான், என்னை கதாநாயகனாக்கினார்.
அதன்பிறகு மகேந்திரன் சார், எனக்கு அறிமுகமானது 'ஆடுபுலி' ஆட்டம் படத்தில். அதில் அவர் வசனகர்த்தா. அவர், படப்பிடிப்பில் என்னைக் கூர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தார். அந்தப் படத்தில் கேரக்டருக்கே ரஜினி என்று பெயர் வைக்கச் சொன்னார். அதுமட்டும் அல்ல... ரஜினி ஸ்டைல் என்பதை உருவாக்கியவரே மகேந்திரன்தான். அந்தப் படத்தில் அவர் ரஜினி ஸ்டைல் என்றே டயலாக் வைத்து, சொல்ல வைத்தார்.
'நான் படம் எடுக்கும் போது நீதான் ஹீரோ' என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அதேபோல் 'முள்ளும் மலரும்' படத்தில் நடிக்க அழைத்தார். அவரும் பாலுமகேந்திராவும் படம் பற்றி நிறையவே பேசிக்கொள்வார்கள். நமக்கு முன்னால் பேசுவது கூட கேட்காது. ஆனால் பின்னால் பேசுவதுதான் கேட்கும். அதைத்தான் கவனமாகக் கேட்போம். அந்த காளி, இப்படி நடப்பான், அப்படிப் பேசுவான், அதுக்குக் கோபப்படுவான் என்று அந்தக் கேரக்டர் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் கேட்டுக் கேட்டு, அந்த கேரக்டர் எனக்குள்ளே பதிந்து போனது. 'கெட்டபய சார் இந்தக் காளி' எனும் வசனம் ஹிட்டானது. அதற்கு மகேந்திரன் சார்தான் காரணம்.
இந்தப் படம் பார்த்துவிட்டு, பாலசந்தர் சார் எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், 'உன்னை அறிமுகப்படுத்தியதில் பெருமைப்படுகிறேன்' என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோல், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 'எக்ஸலண்ட் பெர்பார்மன்ஸ்' என்று எழுதி பூங்கொத்து அனுப்பி இருந்தார்.
கடந்த 28 - 30 வருடங்களாகவே, பிறந்தநாளன்று யாரையும் பார்ப்பதில்லை. வீட்டிலும் இருப்பதில்லை. அந்த நாளில், தனியே, தனிமையில் இருப்பதையே விரும்புபவன் நான். அப்படித்தான் இருக்கிறேன். வழக்கத்துக்கும் அதிகமாக இந்த முறை ஏராளமான ரசிகர்கள், வீட்டுக்கு வந்திருப்பதை அறிந்தேன். ரொம்ப வருத்தப்பட்டேன். மன்னிக்க வேண்டும். எல்லோரையும் திருப்திப்படுத்திவிட முடியாது. இந்த ஆறுநாட்கள், நாம் சந்திப்போம். புகைப்படங்கள் எடுத்துக் கொள்வோம்.
எல்லோரும் அரசியல் முடிவு என்ன என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். மக்கள் விரும்புகிறார்களோ இல்லையோ... ஊடகங்கள் ரொம்பவே விரும்புகின்றன. நான் அரசியலுக்கு வருவேனா வரமாட்டேனா என்று. நான் அரசியலுக்கு எப்போதோ வந்துவிட்டேன். 1996லேயே வந்துவிட்டேன்.
போர் வரும் என்றாரே. எப்போது வரும் என்கிறார்கள். போர்தான் தேர்தல். யுத்தத்துக்குள் இறங்கினால் ஜெயிக்கவேண்டும். அதற்கு வீரம் மட்டும் போதாது. வியூகமும் வேண்டும். ஆழம் பார்க்கவேண்டும். கஷ்டநஷ்டங்கள் பார்க்கவேண்டும். எல்லாம் பார்த்த பிறகுதான், தெரிந்து கொண்ட பிறகுதான் எதுவுமே சொல்லமுடியும்.
31-ம் தேதி என் அரசியல் நிலைப்பாட்டைச் சொல்கிறேன். கட்டுப்பாடு, ஒழுக்கம் இந்த இரண்டும் ரொம்பவே முக்கியம். அதை என்றைக்கும் விட்டுவிடாதீர்கள். எப்போதும் சொல்வது போல இப்போதும் சொல்கிறேன். குடும்பம் முக்கியம். குழந்தைகள், அப்பா அம்மா, மனைவி, வீடு
முக்கியம். குழந்தைகளை நன்றாகப் படிக்க வையுங்கள். அதேபோல், இன்றைக்கு நெகட்டிவ் செய்திகள் அதிகம் வரத்தொடங்கிவிட்டன. சமூக வலைதளங்கள் அதிகரித்துவிட்டன. அதில் நல்ல செய்திகளை விட, கெட்ட செய்திகளே, நெகட்டிவ் செய்திகளே அதிகம் வந்துகொண்டிருக்கின்றன.. அந்த செய்திகளையெல்லாம் மனதில் ஏற்றிக் கொள்ளாதீர்கள். தியானம் முதலான விஷயத்தில் மனதைச் செலுத்துங்கள்.
என்னுடைய அரசியல் நிலைப்பாட்டை, 31-ம் தேதி சொல்கிறேன் என்றுதான் சொல்லியிருக்கிறேன். அரசியலுக்கு வருவேன், வரமாட்டேன் என்றெல்லாம் சொல்லவில்லை'' என்று பேசினார் ரஜினிகாந்த்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT