Last Updated : 11 Dec, 2017 07:33 PM

 

Published : 11 Dec 2017 07:33 PM
Last Updated : 11 Dec 2017 07:33 PM

துணைத்தலைவர் பதவியிலிருந்து விலகியது ஏன்? - நடிகர் சங்கத் தலைவருக்கு பொன்வண்ணன் கடிதம்

துணைத்தலைவர் பதவியிலிருந்து விலகியது ஏன் என்று நடிகர் சங்கத் தலைவர் நாசருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பொன்வண்ணன் வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகர் சங்கச் செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என இரண்டு பதவிகளை வகித்து வருகிறார் விஷால். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்தது திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலரும் அவருடைய செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியிலிருந்து பொன்வண்ணன் விலகியுள்ளார். அவர் நடிகர் சங்கத் தலைவர் நாசருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அன்பிற்கினிய சகோதரர், தலைவர் திரு. நாசர் அவர்களுக்கு வணக்கங்களுடன் உங்கள் பொன்வண்ணன்.

2015 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தலில், நாம் ஒன்றிணைந்து செயலாற்றிய போது, நமக்குள் சில பொதுக் கொள்கைகளை வகுத்துக் கொண்டோம். அதில் முக்கியமானது தலைமை பொறுப்பில் இருப்பவர்கள், இக்காலகட்டங்களில் 'அரசியல் சார்பற்று' செயல்பட வேண்டும் என்பது!

அத்துடன் நாம் பொறுப்புக்கு வந்ததும் ’முதல்வர்’ ஜெயலலிதா அவர்களிடம் வாழ்த்து பெற சென்ற போது, அவரும் இதையே வலியுறுத்தி பாராட்டினார்.  அதனது தொடர்ச்சியாகவே கலைஞர்,“சோ”ராமசாமி, விஜயகாந்த் என அனைவரையும் அரசியல் சார்பற்று சந்தித்தோம். அதன் தொடர்ச்சியாக,பல காலகட்டங்களில் நம்மீது அரசியல் சாயம்பூச பலர் முற்பட்டபோது, அதைமறுத்து, அரசியலற்று தான் செயல்படுகிறோம் என ஊடகங்களில் பலமுறை நாம் பேட்டி கொடுத்ததை நீங்கள் மறுக்கமாட்டீர்கள்.

கடந்த காலங்களிலிருந்து மாறுபட்டு அரசியலற்ற தலைமையின் கீழ் நடிகர் சங்கம் செயல்படுகிறது என, நம் நடிகர்களும், பொதுவாழ்வில் உள்ளவர்களும் நம்மை பாராட்டி வருகிற சூழ்நிலையில்  தற்போது நமது 'செயலாளர்' இன்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு விண்ணப்பித்திருப்பதை தொலைக்காட்சியில் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.

வாக்களிக்கும் உரிமையுள்ளவர்கள் அனைவரும், தேர்தலில் நிற்க தகுதி படைத்தவர்கள் தான். அரசியலில் ஈடுபடுவது அவரின் தனிப்பட்ட முடிவு தான் என்றாலும், இது ஏற்கனவே நாம் பேசிவந்ததிற்கு முரண் இல்லையா? கடந்த கால நிர்வாகிகளை இதை காரணம் காட்டி, குறைசொல்லி, பொறுப்புக்கு வந்த நாம், அதே தவறை செய்வது சரியா..?

இதையே பதவிக்காலம் முடிந்து  இம்முடிவை எடுத்திருந்தால், நட்புரீதியாக நான் வரவேற்றிருப்பேன். ஆனால் நடிகர்சங்க பொறுப்பையும், அனைவரும் உழைத்து, அதனால் வரும் புகழையும், தலைமை பொறுப்பில் உள்ளவர்கள், பதவிக்காலத்தில் தன் அரசியல் தலைமைக்கான தகுதியாக பயன்படுத்தி கொள்வதில் உடன்பட முடியவில்லை.  அவர் எடுத்திருக்கிற அரசியல் முடிவுகள் இனி வரும் நம் அனைத்து செயல்பாடுகளையும் கேள்வி குறியாக்குகின்றன.

இதனால் எதிர்காலத்தில் அரசியலற்ற 'நடிகர் சங்கதலைமை' என்ற நம்பிக்கையே அடிபட்டு போகிறது. இதுவரை சுயநலமற்ற தன்மையுடன் செயல்பட்டு வந்த சேவை மனப்பான்மையே நம் பலமாகவும்,தனித்தன்மையாகவும் இருந்தது. இதற்கு பின் அந்த தனிபெயரை நாம் பெற முடியுமா..?

அத்தோடு, வருகிற ஐனவரி 7-ம் தேதி மலேசியாவில் நடக்கிற கலை நிகழ்ச்சிக்கு 200க்கு மேற்பட்ட நடிகர்களை அழைத்து போக வேண்டியுள்ளது. நிகழ்ச்சிபற்றி பல விவாதங்கள் செய்ய வேண்டியுள்ளது.

இதற்காக பல செயற்குழு உறுப்பினர்கள், பி.ஆர்.ஓ,மேனேஐர்கள் உங்க(தலைவர்) மேற்பார்வையில் உழைத்து கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் உடனிருந்து திட்டமிடுவதை விட்டு, தேர்தல் களத்திற்கு சென்று விட்டால், இங்கே பொதுச்செயலாளர் வேலையை,முடிவை யார் எடுப்பார்கள்?. அது எதிர்காலத்தில் பல சட்ட பிரச்சனையை உருவாக்காதா?

இந்த அரசியல் நிகழ்வுக்கு பின் அவர் பேசும் கருத்துக்களினால் வரும் விமர்சனங்கள் அனைத்தும்,  நடிகர் சங்கத்தையும்,அதில் பொறுப்பில் உள்ள நம்மையும் இணைத்தே வரும்!

இதில் நேரடியாக சம்பந்தப்படாத நாம், விமர்சனத்தை ஏற்கவும் முடியாமல், பதிலும் சொல்லமுடியாமல், இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுவோம். அதனால் நடிகர்சங்க பொறுப்பில் நாம் ஒன்றிணைந்து செயல்படுவதலயே, அவரின் தனிப்பட்ட அரசியல் செயல்பாடுகள் என் மேல் படர்வதையும்,  அதனால் எதிர்காலத்தில் (நான் சம்பந்தப்படாமலே) வரும் தேவையற்ற விமர்சனங்களுக்கு பதிலளிப்பதையும் விரும்பவில்லை. எனவே, இதற்குபின் இப்பொறுப்பில் (உப தலைவராக) இருந்தால்,

எதிர்காலத்தில் என் தனித்தன்மையை இழப்பதுடன்,முரண்பாடான மனநிலையிலும் செயல்படவேண்டி வரலாம். அது தற்போதைய நிர்வாக செயல்பாட்டிற்கு தடையாக மாறும். உடன்பாடில்லாத விஷயங்களில் மவுனம் காப்பது, அல்லது வீண் விவாதங்களில் ஈடுபடுவது இரண்டுமே ஆரோக்கியமானதல்ல.

எனவே இன்றிலிருந்து (4 டிசம்பர் 2017) 'துணைத் தலைவர்' பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன். தர்மசங்கடமான இச்சூழலில் இந்த முடிவுதான் சரி என எம்மனசு சொல்கிறது. எதிர்காலங்களில் நமக்கான நட்புடன் பயணிப்போம். இதுவரை என்னுடன் இணைந்து பயணித்த உங்கள் அனைவரும் என் அன்பு வணக்கங்கள்.

மற்றபடி சங்கத்தின் “வாழ்நாள் உறுப்பினரான”நான் மலேசிய கலை நிகழ்விற்கும், உங்களின் அனைத்து சங்க மேம்பாட்டிற்கான நற்செயலுக்கும், நீங்கள் அழைத்தால், வெளியிலிருந்து எனது ஆதரவையும், உழைப்பையும் எப்போதும் தர தயாராக இருக்கிறேன்.

நான் ஏற்றுக்கொண்ட பதவிக்காலத்தை முடிக்காமல் விலகுவதில் எனக்கு வருத்தமிருந்தாலும், இந்நிலைக்கு நான் தள்ளப்பட்டதிற்கான என் உணர்வுகளை புரிந்துகொண்டு இக்கடிதத்தை மறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன். இதுபோன்ற நிலையில் நடிகர் சங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை, வருகிற செயற்குழுவில் விவாதித்து,எனக்கு கடிதம் மூலமாக தெரியப்படுத்த வேண்டுகிறேன்.

இவ்வாறு பொன்வண்ணன் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x