Published : 17 Aug 2023 05:43 PM
Last Updated : 17 Aug 2023 05:43 PM
சென்னை: ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ரஜினி குறித்து படத்தின் இயக்குநர் நெல்சன் நெகிழ்ந்து பேசினார்.
சென்னையில் ‘ஜெயிலர்’ பட சக்சஸ் மீட் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் நெல்சன், “படம் இவ்வளவு பெரிய ஹிட் ஆக வேண்டும் என்று நினைத்து இயக்கவில்லை. படம் நன்றாக வரவேண்டும் என நினைத்து எடுத்தோம். படத்தின் வெற்றிக்கு காரணம் ரஜினியின் திரை ஆளுமை. அவரது ரசிகர்களுக்கு நன்றி. இந்த வெற்றிக்கு ரஜினிக்கு இந்த ஸ்கிரிப்ட் மீது இருந்த நம்பிக்கைதான் மிக முக்கிய காரணம். ரிலீஸுக்கு 3 நாட்களுக்கு முன்பு படத்தை ரஜினிக்கு போட்டு காட்டினேன். அப்போது அவரிடம், ‘நான் கதை சொல்லும்போது ஒரு விஷுவல் உங்கள் மனதுக்குள் தோன்றியிருக்குமே, அப்படியான ஒரு விஷுவலாக படம் இருக்கிறதா?’ என கேட்டேன்.
அதற்கு அவர், ‘நான் நினைத்ததை விட 10 மடங்கு சிறப்பாகவே வந்திருக்கிறது’ என கூறினார். இன்றைக்கு எனக்கு இருக்கும் நிறைவு அன்றே எனக்கு கிடைத்துவிட்டது. நிறைய பேர் நம்மை சந்தேகத்துடன் பார்க்கும்போது, படம் சரியாக வருமா, இவர் சாத்தியப்படுத்துவாரா என பலரும் யோசித்துக் கொண்டிருந்தபோது, இதற்கு முக்கியப் புள்ளியாக இருக்கும் ஒருவர் நாம் சொல்வதை கேட்டு எங்களின் குழுவுடன் இணைந்து பணியாற்றினார். அவரால்தான் இது சாத்தியமானது. எல்லாவற்றையும் செய்துவிட்டு இமயமலை சென்றுவிட்டார். அவரை நேரில் சந்தித்து இந்த வெற்றிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார் நெல்சன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT