Published : 16 Aug 2023 05:26 AM
Last Updated : 16 Aug 2023 05:26 AM
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்' படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி, சுனில் உட்பட பலர் நடித்துள்ளனர். சிவராஜ்குமார், மோகன்லால் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு முன், கடந்த 9-ம் தேதி, தனது நண்பர்களுடன் இமயமலை புறப்பட்டுச் சென்றார் ரஜினி.
தனக்கு ஓய்வு கிடைக்கும் போதுஇமயமலை செல்வதை வாடிக்கையாகக் கொண்டவர் ரஜினிகாந்த். குறிப்பாக தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் அவர் இமயமலை செல்வது வழக்கம். கரோனா காரணமாக அவர் கடந்த 4 ஆண்டுகளாக அங்கு செல்லவில்லை.
இப்போது அங்கு சென்றுள்ள ரஜினி, ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா,பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல திட்டமிட்டு நண்பர்களுடன் சென்றார். முதலில் ரிஷிகேஷில் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்துக்குச் சென்ற அவர், ரிஷிகளைச்சந்தித்து உரையாடினார். பின்னர் உத்தரகண்ட்டில் வியாசர் குகைக்கு சென்று வழிபட்ட அவர், பத்ரிநாத் கோயிலுக்குச் சென்றும் வழிபட்டார்.
இந்நிலையில் 77-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு துவாரஹாத்தில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரமத்தில் தேசிய கொடி ஏந்தி கொண்டாடினார். அங்கிருந்தவர்களும் இந்தக் கொண்டாட்டத்தில் அவருடன் கலந்துகொண்டனர்.
பாபாஜி குகை: பின்னர் துவாரஹட்டில் உள்ள குக்குச்சினா என்ற மலை கிராமத்தில், மகாவதார் பாபாஜி குகைக்குச் சென்றார். கரடுமுரடான பாதையில் கம்பை கையில் ஊன்றியபடி தனது நண்பர்களுடன் ரஜினிகாந்த் சென்றார். போலீஸார் அவர்களுக்குப் பாதுகாப்பாகச் சென்றனர். பின்னர் குகைக்குள் அவரும் அவரது நண்பர்களும் தியானத்தில் ஈடுபட்டனர். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.
இளைஞருக்கு உதவி: இதற்கிடையே 55 நாட்கள் நடந்து பாபாஜி குகைக்கு வந்த சென்னை இளைஞர் ஒருவர் ரஜினியை சந்தித்துள்ளார். அவருக்கு ரஜினி பண உதவி செய்தார். மேலும் கடும் குளிரில் மரத்தடியில் தூங்கிக் கொண்டிருந்த அவரை, இப்போது ஒரு சாமியாருடன் சிறிய இடத்துக்கு மாற்றவும் ரஜினி உதவியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT