Published : 27 Nov 2017 12:56 PM
Last Updated : 27 Nov 2017 12:56 PM
அசோக்குமார் மரணத்துக்கு காரணமானவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என்று கார்த்தி கூறினார்.
வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், போஸ் வெங்கட், அபிமன்யு சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'. விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, படக்குழு பத்திரிகையாளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தது. இச்சந்திப்பில் கார்த்தி பேசியதாவது:
திரையரங்கிற்கு வந்து படம் பார்த்து, பாராட்டிய அனைவருக்கும் நன்றி. இக்கதை அதுவாக என்னைத் தேடி வந்தது. கடுமையாக உழைத்த ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் கிடைத்த வெற்றியாக இதைப் பார்க்கிறேன்.
இது நிஜ சம்பவம் அடிப்படையிலான கதை. போலீஸ் டிஜிபி ஜாங்கிட் நேரடியாக ராஜஸ்தான் சென்று குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்தார். அது வெளியில் தெரியாமலிருந்தது. இப்படம் மூலம் தெரியவந்திருக்கிறது. இப்படத்தைப் பார்த்து இந்த வழக்கு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் தொலைபேசி வாயிலாக நெகிழ்ச்சியுடன் பேசினார்கள். அவர்களுக்கான மரியாதையை இப்படம் மூலம் கொடுத்ததில் மிகவும் மகிழ்ச்சி.
"நீ பேசாமல் உழைத்துக் கொண்டே இரு. சேமிப்பு கணக்கு மாதிரி உழைப்பு உட்காந்து கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில் அந்த கணக்கிலிருந்து உனக்கு வரும்" என்று அண்ணன் (சூர்யா) சொல்லிக் கொண்டே இருப்பார். எனது ஒவ்வொரு படத்தையும் 'பருத்தி வீரன்' படத்தோடு ஒப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். முதல் முறையாக உங்களுடைய படங்களிலேயே 'தீரன்' ரொம்ப பிடித்த படம் எனவும் சொல்லியுள்ளார்கள். 'பருத்தி வீரன்' மாதிரியான ஒரு படம், முதல் படமாக கிடைத்தது சாதாரண விஷயமல்ல. ஆனால், அதைத் தாண்டி அடுத்தடுத்து போவது கடினமாக இருக்கிறது.
'தீரன்' படத்துக்கு மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறீர்கள் என்கிறார்கள். ஆனால், 'காற்று வெளியிடை' படத்துக்கு தான் மிகவும் கஷ்டப்பட்டேன். தோல்விகளையும், அவமானங்களையும் தாண்டி வரும் போது தான், மனம் இன்னும் வலுவாகிறது என நினைக்கிறேன். இதை தற்போதுள்ள குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். ஏனென்றால் சின்ன விஷயம் என்றால் கூட, உடனே ரொம்ப சோகமாகி விடுகிறார்கள். தோல்வி வாழ்க்கையில் ஓர் அங்கம் என சொல்லிக் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு கார்த்தி பேசினார்.
பிறகு கார்த்தியிடம், ‘கந்துவட்டிக் கேட்டு தயாரிப்பாளர் அசோக்குமாரை அன்புச்செழியன் கொடுமை செய்ததில் அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு "தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டதை அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். என்னை முதன்முதலாக ஷூட்டிங்கிற்கு அழைத்து சென்றவரே அவர்தான். அவர் மிகவும் அமைதியானவர். அவரே தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு நிலைமை சென்றிருக்கிறது என்றால் நிச்சயம் ஏதோ நடந்திருக்கிறது. அவரது மரணத்துக்கு காரணமானவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும். இறந்த அசோக்குமாருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். இனி அவர்களின் கதி என்னவாகும்? அன்புச்செழியன் உள்ளிட்ட யாரிடமும் நான் கடன் வாங்கவில்லை" என்று பதிலளித்தார் கார்த்தி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT