Published : 25 Nov 2017 03:54 PM
Last Updated : 25 Nov 2017 03:54 PM
எனக்கும் கோபிநயினாருக்கும் நடுவில் பிரச்சினையை உண்டுபண்ண பார்க்கிறார்கள். அவங்களுடைய முயற்சி பலிக்காது என்று இயக்குநர் பா.ரஞ்சித் பேசினார்.
தி.நகரில் உள்ள சர்பிட்டி தியாகராய ஹாலில் 'அறம்', 'விழித்திரு' மற்றும் 'ஜோக்கர்' படங்களின் இயக்குநர்களான கோபி நயினார், மீரா கதிரவன் மற்றும் ராஜு முருகன் ஆகியோருக்கு விடுதலை கலை இலக்கிய பேரவை மற்றும் மருதம் கலைக்கூடம் பாராட்டு விழா ஏற்பாடு செய்திருந்தது.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில், பாடலாசிரியர் உமாதேவி, சி.பி.ஐ வீரபாண்டியன் ஆகியோரோடு இயக்குநர் பா.ரஞ்சித்தும் அந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
`அறம்' இயக்குநர் கோபி நயினாருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்த பிறகு இயக்குநர் ரஞ்சித் பேசியதாவது:
'மெட்ராஸ்' படத்துக்கு தணிக்கையில் `ஏ' சான்றிதழ் கொடுத்தார்கள். ஏன் என்று கேட்டதற்கு ரவுடிகளைப் பற்றிய படம் தான் காரணம் என்று சொன்னார்கள்.இதுவரை ஹவுசிங் போர்டு, ஸ்லம் போர்டு, சேரி, மீனவர் குப்பத்தில் வசிக்கின்ற மக்களை ரவுடி என்றே கட்டமைக்கப் பொதுப்புத்திதானே இதுக்கு காரணம்.
'அட்டகத்தி' படம் இயக்கிய போது வாழ்க்கையைப் பதிவு பண்ண ரொம்ப கஷ்டப்பட வேண்டியதிருந்தது. ஆனால் காலம் அப்படியே இல்லை. ஜாதி கூடாது என சேரிலயே பிரச்சாரம் பண்ணுவதை விட்டுட்டு ஊர்த்தெருவில் நின்று இன்னும் வீரியமாக பிரசாரம் செய்தால் தான் மாற்றம் வரும். அப்போது தான் சமத்துவ சமுதாயம் பிறக்கும்.
ராஜுமுருகன் மாதிரியான இயக்குநர்கள் சமூகத்தை நெருக்கமாகப் பார்த்து அவ்ளோ அழகாக எழுதுகிறார்கள், படைப்பாக உருவாக்குகிறார்கள். அவருடைய பார்வையில் இந்த சமூகம் ஏன் சமத்துவமில்லாமல் இருக்கிறது, ஏன் இவ்வளவு பிரிவுகள் என நிறைய கோபம் வரும். அவருக்குள் இருக்கிற கோபங்கள்தான் அவருடைய படைப்பாக வருகிறது.
ஆள்கிறவர்கள் இந்த சமூகம் பிரிந்தே இருக்க வேண்டும். தலித், தலித் அல்லாதவர்கள் என இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் ஜாதி இருக்க வேண்டும் என சொல்கிறவர்கள் ஒரு பக்கமும், கூடாது என சொல்கிறவர்கள் ஒரு பக்கமும் என இச்சமூகம் பிரிந்திருக்கிறது.
இப்பிரிவினை கண்டிப்பா ஒழிய வேண்டும். மீரா கதிரவன் அண்ணன் பல குறியீடுகளோட அற்புதமான படமாக, `விழித்திரு' படத்தை உருவாக்கியிருந்தார். படம் எடுக்கிறது கஷ்டம் என்றால் அதை வெளியிடுவது ரொம்ப கஷ்டம். மிகவும் கஷ்டப்பட்டுதான் அப்படத்தை வெளியே கொண்டு வந்திருக்கார். இப்போது வரைக்கும் அது கொடுத்த துன்பங்களிலிருந்து மீளவில்லை. அவர் அடுத்தடுத்து இன்னும் நிறைய சிறந்த படங்களை கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
அண்ணன் கோபி நயினாருடைய 'அறம்’ பல முக்கியமான பிரச்சினையைத் தொட்டுப் பேசுகிறது. இந்த மாதிரியான படங்கள் சமூகத்துக்கு ரொம்ப அவசியம். பல தயாரிப்பாளர்கள், நடிகர்கள் முன்வராத போது நயன்தாரா இப்படத்தைப் பண்ண முன்வந்தது ரொம்ப பாராட்டப்பட வேண்டிய விஷயம். அதனால்தான் அதில் சொல்லப்பட்ட கருத்துகள் பரவலாக போய் சேர்ந்திருக்கிறது. விவாதமாகியிருக்கிறது. அப்படி விவாதமாவது ரொம்ப முக்கியம். கோபி அண்ணன் இதே மாதிரியான படங்களைத் தொடர்ந்து செய்ய வேண்டும். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.
இது தவிர, ஒரு சின்ன விளக்கம் தர வேண்டியுள்ளது. இப்போது சமூக வலைதளங்களில் நான் கோபி நயினார் அண்ணன் கிட்டே வேலை பார்த்ததாகவும் அவருடைய கதை விவாதத்தில் ஈடுபட்டதாகவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதில் துளியும் உண்மை இல்லை. கோபி அண்ணன் என்னோட கல்லூரி சீனியர். அந்த வகையில்தான் அவரை எனக்குத் தெரியும்.`மெட்ராஸ்' படம் திரைக்கு வருவதற்கு முன்பே `கருப்பர் நகரம்' படம் மாதிரியே இருக்கிறது என்று ஒரு வழக்கு போட்டார்கள். நான் என் படத்தினுடைய டிவிடி, கதை அனைத்தையும் கொடுத்து அப்படம் வேறு, `மெட்ராஸ்' வேற' என நீதிமன்றத்தில் நிரூபித்ததிற்கு பின்பு தான் 'மெட்ராஸ்' வெளியானது.
இதைப் பத்தி அப்போதே கோபி நயினார் அண்ணன்கிட்ட பேசினேன். அப்பிரச்சினை அப்போதே முடிந்துவிட்டது. ஆனால், இப்போது சிலர் வேண்டுமென்றே கதை திருட்டு என ஆதாரமில்லாமல் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். எங்களுக்கு நடுவில் பிரச்சினையை உண்டுப்பண்ண பார்க்கிறார்கள். அவங்களுடைய முயற்சி பலிக்காது.
இங்கே வந்திருக்கும் இயக்குநர்கள், இயக்குநர் பிரம்மா நாங்க எல்லோரும் சேர்ந்து சமூக மாற்றத்துக்கான படைப்புகளைத் தொடர்ந்து கொடுப்போம். என்னுடைய தயாரிப்பில் ‘பரியேறும் பெருமாள்’ என்ற படம் வருகிறது. ரொம்ப முக்கியமான படைப்பா இருக்கும். அந்த படம் வந்தாலும் திட்டுவார்கள். திட்டட்டும் இன்னும் உற்சாகமா வேலை பார்ப்போம்.''
இவ்வாறு பா.இரஞ்சித் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT