Published : 04 Nov 2017 04:04 PM
Last Updated : 04 Nov 2017 04:04 PM
தற்போது சந்தானம் நடிப்பில் 'சக்க போடு போடு ராஜா' வெளியீட்டிற்கு திட்டமிடப்பட்டு வருவதால், 'சர்வர் சுந்தரம்' வெளியீடு என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சர்வர் சுந்தரம்'. பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கியிருப்பதால், படத்தின் வெளியீடு திட்டமிடப்பட்டு தள்ளி வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. டிசம்பரில் வெளியிட வேண்டும் என்ற முனைப்பில், பைனான்ஸ் பிரச்சினையை சரி செய்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் நடித்திருக்கும் 'சக்க போடு போடு ராஜா' வெளியீடும் சில நாட்களில் உறுதிசெய்யப்பட இருக்கிறது. இப்படத்தின் பைனான்ஸ் பிரச்சினையும் எதுவுமே இல்லை என்பதால், விரைவில் இசை வெளியீடு முடிந்து டிசம்பர் 1-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
'சக்க போடு போடு ராஜா' படத்தின் வெளியீடு திட்டமிடப்படுவதால், 'சர்வர் சுந்தரம்' படக்குழு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது.
இது குறித்து விநியோகஸ்தர்கள் தரப்பில் விசாரித்த போது, "’சர்வர் சுந்தரம்’ படத்தின் பைனான்ஸ் பிரச்சினையை தீர்க்க, தயாரிப்பாளர் சங்கத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அப்படத்தின் தயாரிப்பாளர் பலரிடமும் பணம் வாங்கியிருப்பதால், அனைவரிடமும் பேச வேண்டியதுள்ளது. மேலும், ’சக்க போடு போடு ராஜா’ படமே முதலில் வரும் என்ற சூழல் இருக்கிறது. தற்போதுள்ள 'சர்வர் சுந்தரம்' பிரச்சினையைப் பார்க்கும் போது, அப்படம் இந்தாண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை" என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT