Published : 27 Nov 2017 05:46 PM
Last Updated : 27 Nov 2017 05:46 PM
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தின் இசையமைப்பாளர் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
'ஸ்பைடர்' படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கவுள்ளது.
ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, படப்பிடிப்புக்கான இடங்களின் தேர்வும் நடைபெற்று வருகிறது. தற்போது விஜய்யோடு நடிக்கவுள்ள நடிகர் - நடிகைகள் தேர்வு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், 'மெர்சல்' பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
6 மாதத்தில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் முடிவு செய்துள்ளதால் அதற்குள் பாடல்கள் கிடைத்துவிடுமா போன்ற விஷயங்களை ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு.
ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் 'கஜினி' இந்தி ரீமேக்கில் இணைந்து பணிபுரிந்திருக்கிறார்கள். தமிழில் இருவரும் இணைந்து பணிபுரிந்ததில்லை. இப்படத்தின் மூலம் இக்கூட்டணி இணைய வாய்ப்புகள் அதிகம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்தின் படக்குழு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை புத்தாண்டு அன்று வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. ஏற்கனவே ’துப்பாக்கி’ மற்றும் ’கத்தி’ படங்களை மாதிரி இல்லாமல் விஜய்யை வேறொரு கோணத்தில் காட்டவுள்ளதாக ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT