Published : 24 Nov 2017 06:14 PM
Last Updated : 24 Nov 2017 06:14 PM
ஒரு பைனான்சியராக அன்புசெழியன் எனக்கு மிகப் பெரிய ஆதரவு தந்திருக்கிறார் என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்திருக்கிறார்.
கடன் கொடுத்த பிரபல பைனான்சியர் அன்புசெழியன் மிரட்டியதன் காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் அசோக்குமார். அவரது தற்கொலை திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
பலரும் அன்புசெழியனுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த நிலையில், அவருக்கு ஆதரவாக இயக்குநர் வெற்றிமாறன் பேசியிருப்பதாவது:
அசோக்குமாரின் மறைவு அவரது குடும்பத்தினருக்கு மிகப்பெரிய இழப்பு. எந்த வகையிலும் ஆறுதல் கூறி தேற்ற முடியாதவொரு இழப்பு. இந்த தருணத்தில் சில விஷயங்கள் தொடர்பாக விவாதிப்பது வருத்தமாகதான் இருக்கிறது.
கையில் எப்போதுமே பணம் இருப்பது போன்றதொரு தொழில் கிடையாது சினிமா. திடீரென்று பணத் தேவைகளும், நெருக்கடிகளும் வரக்கூடிய ஒரு தொழில். பைனான்ஸ் என்பது நீண்ட காலமாக இருக்கக்கூடிய ஒரு பகுதி.
எனக்கு மற்றவர்களைப் பற்றி அவ்வளவாக தெரியாது. எனது இரு படங்களுக்கு அன்பு பைனான்ஸ் செய்திருக்கிறார். எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார், நிறைய உதவிகளும் செய்திருக்கிறார். ஒரு படம் பண்ணலாம் என்றிருக்கிறேன், எனக்கு பைனான்ஸ் செய்வீர்களா என கேட்ட போது 'கண்டிப்பாக செய்கிறேன்' என்று முன்வந்தார். நான்தான் அவரிடம் போய் கேட்டேன், அவர் என்னிடம் வந்து பைனான்ஸ் வாங்கிக் கொள் என கேட்கவில்லை.
எந்தவொரு பைனான்சியரும் தயாரிப்பாளரைத் தேடி சென்று பைனான்ஸ் தருகிறேன் என்று சொல்வதில்லை. பணத்தை எவ்வளவு பாதுகாப்பாக செலவழித்து தொழில் செய்யலாம் என்று அவரோடு நிறைய பேசியிருக்கிறேன். பல சமயங்களில் எனக்கு ஆதரவாக இருந்திருக்கிறார். இச்சமயத்தில் இந்த மாதிரியான குற்றச்சாட்டுகளை பேசுவது சோகமாக இருக்கிறது.
அசோக்குமாரின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இம்மாதிரியான குழப்பங்களும் தீர வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஒரு பைனான்சியராக அன்புசெழியன் எனக்கு மிகப் பெரிய ஆதரவு. முதல் படத்துக்கு பைனான்ஸ் வாங்கி, அதை செட்டில் செய்யும் போது அதற்காக வாங்கிய ஆவணங்கள் அனைத்தையுமே என் மேலாளரிடம் கொடுத்துவிட்டார். மற்றவர்களிடம் எப்படியோ எனக்குத் தெரியவில்லை.
இவ்வாறு வெற்றிமாறன் தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT