Published : 12 Aug 2023 06:23 PM
Last Updated : 12 Aug 2023 06:23 PM

“வேங்கை வயல் போல வேடிக்கை பார்க்காமல்...” - நாங்குநேரி சம்பவம் குறித்து அமீர் கருத்து

சென்னை: “வேங்கை வயலைப்‌ போல்‌ வேடிக்கை பார்க்காமல்‌, இனியும்‌ இதுபோன்று, தமிழகத்தில்‌ எங்கும்‌ நடந்திடாமல்‌ காக்கும்‌ பெரும்‌ பொறுப்பு தமிழக அரசின்‌ கைகளில்‌ இருக்கிறது என்று நான்‌ நம்புகிறேன்‌” என நாங்குநேரி சம்பவம் குறித்து இயக்குநர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்டத்தின்‌ நாங்குநேரியில்‌ பள்ளி மாணவனையும்‌ அவனுடைய இளம்‌ தமக்கையையும்‌ வெட்டிச்‌ சாய்த்த அரிவாளின்‌ பின்னணியில்‌ சாதியம்‌ இருக்கிறது என்பதும்‌, ஓடிய ரத்தம்‌ தமிழரின்‌ குருதி என்பதும்‌, இப்‌பாதகச்‌ செயலில்‌ ஈடுபட்டது பள்ளி மாணவர்கள்‌ என்பதும்‌ உண்மையிலேயே என்னை பேரதிர்ச்சி அடையச்‌ செய்திருக்கிறது.

சாதி, மதங்களைக்‌ கடந்து ஒன்றாய்க்‌ கலந்து திரிந்து ஒரு தட்டில்‌ உண்ணும்‌ மாணவச்‌ சமுகத்திலேயே இந்த வன்மம்‌ தலைதூக்கி நிற்பதும்‌, அதன்‌ பின்னணியில்‌ பெற்றோர்களின்‌ வளர்த்தெடுத்தல்‌ அடங்‌கியிருப்பதும்‌, சாதிய தீயை அணைய விடாமல்‌ சில சுயலாப சாதிய அமைப்புகள்‌ நெய்யை ஊற்றி வளர்த்துக்‌ கொண்டிருக்‌கின்றன என்பதெல்லாம்‌ அவமானத்திற்குரியதாக அமைந்திருக்கிறது.

“வேங்கை வயலை” போல்‌ வேடிக்கை பார்க்காமல்‌, இனியும்‌ இதுபோன்று, தமிழகத்தில்‌ எங்கும்‌ நடந்திடாமல்‌ காக்கும்‌ பெரும்‌ பொறுப்பு தமிழக அரசின்‌ கைகளில்‌ இருக்கிறது என்று நான்‌ நம்புகிறேன்‌. மேலும்‌, “சாதிய விழிப்புணர்வு போரை” தமிழகத்தில்‌ தொடங்க வேண்டியது. தமிழர்களாகிய நமது தலையாய கடமையாகும்‌” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x