Published : 12 Aug 2023 04:15 PM
Last Updated : 12 Aug 2023 04:15 PM
சென்னை: நடிகர் கமல்ஹாசன் திரைத்துறையில் 64-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், வாழ்த்தியவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடைய எதிர்கால வாழ்க்கையை அரசியலை நோக்கி என்பதையும் சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “64 ஆண்டுகள் ஒருவன் வாழ்க, என்று வாழ்த்தினாலே அது பெரிய ஆசிதான். அது என் உடலுக்கான வாழ்த்தாக இல்லாமல் என் கலை வாழ்வுக்கான ஆசியாக இருப்பது என்னைவிட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம். வாழ்த்தும் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றி. எஞ்சி உள நாட்கள், என் மக்களுக்காக. உங்கள் நான்” என தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தனது 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான குடியரசு தலைவர் விருதைப் பெற்றார். இந்தப் படம் வெளியாகி இன்றோடு 63 வருடங்கள் முடிந்து 64 வது வருடம் தொடங்குகிறது. இதன் மூலம் இந்திய திரையுலகில் கமல் 64-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
64 ஆண்டுகள் ஒருவன் வாழ்க, என்று வாழ்த்தினாலே அது பெரிய ஆசிதான். அது என் உடலுக்கான வாழ்த்தாக இல்லாமல் என் கலை வாழ்வுக்கான ஆசியாக இருப்பது என்னைவிட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம். வாழ்த்தும் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றி. எஞ்சி உள நாட்கள் என் மக்களுக்காக.…
— Kamal Haasan (@ikamalhaasan) August 12, 2023
தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல், இப்போது முழுமையான இந்திய நடிகர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உட்பட6 மொழிகளில் 232 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். மலையாளத்தில் 40 படங்களில் நடித்துள்ள கமல்ஹாசன், தெலுங்கு, இந்தியிலும் சூப்பர் ஹிட் நடிகராக வலம் வருகிறார். தெலுங்கில் அவர் நடித்த,‘மரோ சரித்ரா’, ‘சாகர சங்கமம்’, ‘சுவாதி முத்யம்’ ஆகிய படங்கள் அவரை அங்கு முக்கியநடிகராக உயர்த்தின. ‘ஏக் துஜே கே லியே’, ‘சத்மா’, ‘சாகர்’ போன்ற படங்களின் வெற்றிக்குப் பிறகு பாலிவுட்டிலும் முக்கியத்துவம் பெற்றார். கன்னடம் மற்றும் பெங்காலி படங்களிலும் நடித்துள்ளார்.
பத்மபூஷன், 4 தேசிய விருதுகள் உட்படபல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள கமல்ஹாசன், தமிழ்த் திரைத்துறையில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். ‘குருதிப்புனலில்’ டால்பி ஸ்டீரியோ சவுண்ட் தொழில்நுட்பம், ‘மும்பை எக்ஸ்பிரஸில் டிஜிட்டல் வடிவம், ‘விஸ்வரூபம்’ படத்தில் அதிநவீன ஆரோ 3டி ஒலி தொழில்நுட்பம் உட்பட பலவற்றை தனது படங்களில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
நடிப்பிலும் பல்வேறு உச்சத்தைத் தொட்டுள்ள கமல்ஹாசன் திரைத்துறையில், 64 வது வருடத்தைத் தொடங்கி இருக்கும் நிலையில் அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். ‘இந்தியன் 2’படத்தை முடித்துள்ள கமல் அடுத்து ‘கல்கி 2898ஏடி’ படத்தில் நடிக்க இருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT