Published : 11 Aug 2023 08:10 AM
Last Updated : 11 Aug 2023 08:10 AM
சென்னை: 20 ஆண்டுகளுக்கு முன்பே நடிகர் கமல்ஹாசன் ஹாலிவுட்டு சென்றிருக்க வேண்டும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஆஸ்கர் மியூசியத்தில் கமல்ஹாசனும், ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து ‘காட்ஃபாதர்’ படத்தை கண்டு ரசித்தனர். அவர்களது இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. அந்த சந்திப்பின்போது கமல்ஹாசனிடம் ஒரு ஹாலிவுட் திரைப்படம் நீங்கள் எடுக்க வேண்டும் என்று தான் கூறியதாக ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
‘தி இந்து’ நாளிதழுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
சைனீஸ் தியேட்டரில் நாங்கள் ‘ஓப்பன்ஹெய்மர் படத்தைப் பார்த்தோம். நான் அவரை மதிய உணவுக்கு அழைத்திருந்தேன். கடந்த ஆறு தசாப்தங்களாக திரைப்படத் துறையில் இருப்பவர் கமல்ஹாசன். அவர் பேசுவதையும், அவர் சொல்லும் கதைகளைக் கேட்பதும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இப்போதும் அவர் பல படங்கள் பார்க்கிறார். அவற்றிலிருந்து காட்சிகளையும், வசனங்களையும் நினைவு கூர்கிறார். அதுகுறித்த பல தகவல்களையும் எனக்கு சொல்வார். அவரைப் போல எல்லா படங்களையும் முழுமையாக பார்க்கும் பொறுமை எனக்கு இல்லை.
பல ஆண்டுகளாக அவர் இங்கேயே சிக்கிக் கொண்டுவிட்டாரோ என்று எனக்கு தோன்றுகிறது. அது நமக்கு நல்ல விஷயம்தான். ஆனால் அவருக்கு... எனக்கு தெரியவில்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பு, அவரிடம் பணம் இருந்தபோதே, அவர் ஹாலிவுட்டுக்கு சென்று அங்கு ஒரு படம் எடுத்திருக்க வேண்டும்.
வெற்றி தோல்வி குறித்து கவலைப்படாமல் ஒரு பரிசோதனை முயற்சி செய்திருக்க வேண்டும். இப்போதும் அவரால் அதை செய்ய முடியும். அதைத்தான் நான் அவரிடம் சொன்னேன். எதைப் பற்றியும் யோசிக்காமல் ஒரு ஆங்கிலப் படம் எடுங்கள் என்றேன்” என்று ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT