Last Updated : 22 Nov, 2017 07:50 PM

 

Published : 22 Nov 2017 07:50 PM
Last Updated : 22 Nov 2017 07:50 PM

திரைப்படத் துறை சுய ஆய்வு செய்து கொள்வதற்கான ஒரு அபாய எச்சரிக்கை அசோக்கின் மறைவு: நடிகர் சங்கம்

திரைப்படத் துறை தன்னை சுய ஆய்வு செய்து கொள்வதற்கான ஒரு அபாய எச்சரிக்கையாகவே அசோக்கின் மறைவு மணியடித்திருக்கிறது என்று நடிகர் சங்கம் தெரிவித்திருக்கிறது.

கடன் கொடுத்த பிரபல பைனான்சியர் அன்புசெழியன் மிரட்டியதன் காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டர் அசோக்குமார். அவரது தற்கொலை திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அசோக்குமார் தற்கொலை தொடர்பாக நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அமரர் அசோக்கை (கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் அலுவலக நிர்வாகி) இழந்து ஆற்றமுடியா துயரில் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர் சசிகுமாருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஒரு பக்கம் சர்வதேச விருதுகள், மறுபக்கம் மன அழுத்தத்தால் மரணம் நாம் எங்கிருக்கிறோம். எதை நோக்கி பயணிக்கிறோம்? இலக்கு என்ன எதை மறைத்து எதை வெளிப்படுத்துகிறோம். யாருக்காக படைப்புகள் எது படைப்பு. படைப்பில் பணம் எப்படி பந்தயமாகிறது? பந்தயத்தில் பலன் பெறுவோர் யார்? பலியாவது யார்? என இன்னமும் பல கேள்விகள் தொடர் சங்கிலியாய் நீண்டு போகிறது.

மரத்துப் போன நம் மனதை உலுக்கியெழுப்பி மறைந்த அசோக்கின் பொருட்டு, மறைவாகவும், இலைமறை காயாகவும் இருக்கும் வியாபார வழக்கங்களை விட்டொழிப்போம். அசோக்கின் முடிவு திரைப்படத்துறைக்கு கேள்வியை வித்திட்டுச் சென்றிருக்கிறது. திரைப்படத்துறை தன்னை சுய ஆய்வு செய்து கொள்வதற்கான ஒரு அபாய எச்சரிக்கையாகவே அசோக்கின் மறைவு மணியடித்திருக்கிறது.

வெற்றிகளையும், லாபங்களையும் மட்டுமே கணக்கிலெடுத்துக் கொள்ளும் இத்துறை இனி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் தீர கலந்தாலோசித்து முன்னேற வேண்டியதாயிருக்கிறது. கலைஞர்களாகட்டும், தொழில் நுட்பங்களாகட்டும், முதலீட்டார்களாகட்டும் ஒருவரைச் சார்ந்து ஒருவர் இருக்கிறோம் என்பதை இத்தருணத்தில் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

கழுத்தை இறுக்குவது தவிர்த்து, கைகோத்து இணைவது இன்னும் வலுப்பெறும். எந்த ஒரு வியாபாரத்திலும் வெற்றியும், லாபமும் முக்கியமென்றாலும் மனிதாபிமானத்தை கைவிட்டு அணுகுவது அசோக்கின் முடிவிற்குத்தான் இட்டுச் செல்லும்.

தவறிழைத்தோரை சட்டம் தீவிரமான தண்டனை பெறச் செய்யட்டும். அது இனி அதீத வட்டி வாங்குவோர்க்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும். நாம் நமக்காக புதுக்கடமைகளை வகுத்தெடுப்போம். வெளிப்படையான கணக்கு வழக்குகள் போன்ற வழக்கங்களை நடைமுறைக்குக் கொண்டு வருவோம். விஞ்ஞானம் ஓங்கி நிற்கும் இக்காலகட்டத்தில் கற்கால கட்டப் பஞ்சாயத்துகளையும், அதீத வட்டிமுறைகளையும் தீக்கிரையாக்குவோம்.

நெறிப்படுத்தப்பட்ட யாருக்கும் அழுத்தம் தாரா, பயனுறும் பொருளாதார திட்டங்களை வகுப்போம். யாராவது மரணிக்கும் போது மட்டும், கண்ணீர்விட்டு, காதுகிழிய கத்தியும் உணர்வுகளை வடித்துவிட்டு மீண்டும் பழைய தண்டவாளத்திற்கே ஏறாமல், அறிவுரீதியாய் அணுகி, நடைமுறை மாற்றுவோம். ஒன்றுகூடி தேரிழுப்போம், ஒன்றாய் வளர்வோம், ஒரு குடும்பமாய் மகழ்வோம்.

இந்த சூழலில் திரைப்படத்துறையின் நல்ல எதிர்காலத்திற்காக, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் எடுக்கும் முடிவுகளுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தோள் கொடுத்து நிற்கும்.

இவ்வாறு நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x