Published : 22 Nov 2017 11:24 AM
Last Updated : 22 Nov 2017 11:24 AM
அசோக்குமார் தற்கொலை தொடர்பாக திரையுலக சங்கங்களை அமீர் கடுமையாக சாடியிருக்கிறார்.
திரைப்பட இணை தயாரிப்பாளராகவும், கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியாகவும் பணிபுரிந்து வந்த அசோக் குமார் நேற்று (செவ்வாய்க்கிழமை) தற்கொலை செய்து கொண்டார். கடன் கொடுத்த பிரபல பைனான்சியர் ஒருவர் மிரட்டியதன் காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார். அசோக்குமார் தற்கொலை திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
அசோக்குமார் தற்கொலை குறித்து இயக்குநர் அமீர் கூறியிருப்பதாவது:
பைனான்சியர் அன்பு தான் மிரட்டினார் என்று அசோக்குமார் கடிதம் எழுதிவைத்துவிட்டு இறந்திருக்கிறார். இது தொடர்பாக புகார் கொடுத்தோம், காவல்துறையும் அன்புச்செழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக சட்டப்பிரிவு 306-ன் கீழ் வழக்கு போட்டுவிட்டார்கள். 'கொடி வீரன்' படத்துக்கு ரெட் போட்டு வெளியிட முடியாத சூழலுக்கு உள்ளாகியுள்ளார். வட்டிக்கு மேல் வட்டி என விதித்துக் கொண்டே இருந்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு என அனைவரும் ஒன்றிணைந்து அவர் மீது 302-பிரிவில் (கொலை முயற்சி) வழக்கு பதியக் கூற வேண்டும். ஆனால், 306- விதியின் கீழ் வழக்கு பதிந்தமைக்கு காவல்துறைக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
திரைத்துறை தற்போதும் சரி செய்யவில்லை என்றால், திரையுலகை இழுத்து மூடிவிட்டு போய்விடுங்கள்.
சினிமாவில் தான் அனைவரும் வீர வசனம் பேசுகிறார்கள். எவன் பாதிக்கப்பட்டதை வெளியே சொல்கிறான். ஒவ்வொரு முறை பட வெளியீட்டை நிறுத்தினால் என்ன செய்வான் ஒருத்தன். படத்தை வெளியிட்டால் தானே பணம் வரும்.
திரையுலகில் இத்தனை சங்கங்கள் ஏன் இருக்கின்றன. தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் என அனைவரும் ஒன்றிணைந்து இப்பிரச்சினைக் குறித்து பேசாவிட்டால், உங்கள் யாருக்குமே நிர்வாகியாக இருக்க தகுதியே கிடையாது.
இவ்வாறு அமீர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT