Published : 20 Nov 2017 05:26 PM
Last Updated : 20 Nov 2017 05:26 PM
'தீரன்' படத்தின் வெற்றி அனைத்து கஷ்டங்களையும் மறக்கடித்துள்ளது என்று அபிமன்யு சிங் தெரிவித்திருக்கிறார்.
வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், போஸ் வெங்கட், அபிமன்யு சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'. விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தில் ஓமா என்ற ஓம்கார் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அபிமன்யு சிங் கூறியிருப்பதாவது:
'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் கதையை என்னிடம் சொல்லும்போது, உண்மைச் சம்பவத்தை மையமாக கொண்டது என்ற விஷயம் மிகவும் பிடித்தது. இப்படத்தில் அறிவுப்பூர்வமான விஷயங்கள் இருந்தன.
கார்த்தி தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை மிக தெளிவாகவும், கவனத்தோடும் செய்யக்கூடியவர். காட்சிக்கு காட்சி தன்னுடைய கதாபாத்திரத்தை மெருகேற்றிக்கொண்டே இருப்பார். அது சரியாக வரும் வரை தொடர்ந்து வேலை செய்துகொண்டே இருப்பார். தன்னுடைய பங்களிப்பால் ஒட்டுமொத்த காட்சியும் சிறப்பாக வரவேண்டும் என சிரத்தை எடுத்து வேலை செய்வார். கார்த்தி கடின உழைப்பாளி, அனைவரிடமும் எளிமையாகப் பழகுபவர்.
இயக்குநர் வினோத் தன்னுடைய நடிகர்களை அதிகம் நேசிப்பார். எப்போதும் எதையும் அமைதியாக கையாளுவார். எப்போதும் மிகச் சிறந்த வேலையை எதிர்பார்ப்பார். காட்சிகள் சிறப்பாக வரும் வரை கடுமையாக உழைப்பார். அதிக கவனம் , தூய்மையான மனம் போன்றவை வினோத்திடம் மிகவும் பிடித்தவை.
நாங்கள் வெயில் மற்றும் குளிர் அதிகமாக இருக்கும் காலநிலையில் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருந்தது. படப்பிடிப்பு முடிந்து ஒரு நாளைக்கு 15 முறையாவது முகத்தை கழுவ வேண்டும். அந்தளவுக்கு தூசி படலம் இருக்கும். தற்போது படத்தின் வெற்றி அனைத்து கஷ்டங்களையும் மறக்கடித்துள்ளது.
இவ்வாறு அபிமன்யு சிங் தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT