Last Updated : 20 Nov, 2017 01:06 PM

 

Published : 20 Nov 2017 01:06 PM
Last Updated : 20 Nov 2017 01:06 PM

உலகின் மிகமிக சுவையான உணவு கருவாடுதான்: இயக்குநர் மிஷ்கின்

உலகின் மிகமிக சுவையான உணவு கருவாடுதான் என்று 'சீமத்துரை' இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் தெரிவித்தார்.

புவன் மீடியா வொர்க்ஸ் தயாரிப்பில் சந்தோஷ் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சீமத்துரை’. இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

கீதன், வர்ஷா பொல்லம்மா, இசையமைப்பாளர் ஜோஸ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட படக்குழுவினரோடு இயக்குநர் மிஷ்கின், வசந்தபாலன், மனோபாலா, தயாரிப்பாளர் சிவா, தனஞ்ஜெயன் என திரையுலகினரும் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

இவ்விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது:

பொதுவாக இசை வெளீயிட்டு விழா என்பது பொய்கள் நிறைந்ததாகவே இருக்கும். இது என் படங்களுக்கும் பொருந்தும். ஆனால் உண்மையிலேயே இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. காரணம் இங்கு வந்திருப்பவர்களின் பொய்யற்ற வெகுளித்தனம்.

விஜி சந்திரசேகர் இந்திய சினிமா குறைத்து மதிப்பிட்டு வைத்திருக்கும் ஒரு நடிகை. நிச்சயம் அவர் வரும் நாளில் கொண்டாடப்படுவார். அவர் தோழமையோடு கண்டிப்பாக கேட்டுக்கொண்டதின் பெயரிலேயே இங்கிருக்கிறேன். இயக்குநர் சந்தோஷ் என்னை சந்திக்க வந்திருந்த போதுதான் அவரை முதன் முதலாகப் பார்த்தேன். பார்த்த மாத்திரத்திலேயே அவரது நம்பிக்கை மிகுந்த கண்களும், முகமும் எனக்கு மிகவும் பிடித்துப் போனது. அவரது நம்பிக்கையே 'சீமத்துரை' நன்றாக இருக்கும் என உறுதி செய்கிறது. தான் வாழ்ந்த மண் சார்ந்தே தனது முதல் படத்தை எடுத்துள்ள இயக்குநருக்கு வாழ்த்துகள்.

குறிப்பாக தனது முதல் படத்திலேயே இசை வெளியீட்டு விழாவில் படம் உருவான காட்சிகளை ஒளிபரப்பிய நம்பிக்கை எனக்கு பிடித்திருந்தது. இதற்கு முன்னர் நான் மட்டும் தான் 'சித்திரம் பேசுதடி' படம் வந்தபோது இதை செய்தேன். இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் கீதன் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். அவரது முகம் எல்லோருக்குமே எளிதில் பதியும் விதத்தில் இருப்பது அவரது பலம், நிச்சயமாக உயரங்கள் தொடுவார்.

ட்ரெய்லரில் கருவாடு விற்பது போல காட்சிகள் இருந்தன.இந்த உலகின் மிகமிக சுவையான உணவு கருவாடுதான். பழைய சோற்றுக்கும், கருவாட்டுக் குழம்பிற்கும் ஈடு இணையான உணவே கிடையாது. இங்கே மூன்று பாடல்களை ஒளிபரப்பினார்கள், நேரம் கருதி அதைக் குறைத்திருக்கலாம். ஆனால் அத்தனை பாடல்களையும் நம்மை பார்க்க வைத்தது கூட அவர்களது நம்பிக்கையை பிரதிபலித்தது. இப்படத்தின் பாடல்களை பார்க்கும் போது அதில் ஒரு மிகையில்லாத ஒளிப்பதிவு நேர்த்தியைக் காண முடிந்தது. இசையமைப்பாளர் ஜோஸ் ஃப்ரான்க்ளின் அழகான பாடல்களைக் கொடுத்திருக்கிறார். படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

இவ்வாறு மிஷ்கின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x