Published : 27 Nov 2017 03:21 PM
Last Updated : 27 Nov 2017 03:21 PM
சிம்புவுக்கு தயாரிப்பாளர் சங்கம் 'ரெட்' போட்டுள்ளது. இதனால் அவரால் மணிரத்னம் படத்தில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் பெரும் தோல்வியடைந்ததால், சிம்புவின் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் மைக்கேல் ராயப்பன் புகார் அளித்திருக்கிறார். படப்பிடிப்புக்கு சரியாக வரவில்லை, 29 நாட்கள் மட்டுமே வந்தார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.
இப்புகாரின் அடிப்படையில் சிம்புவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தயாரிப்பாளர் சங்கம். மேலும் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஈடுகட்டாத வரை 'ரெட்' போட்டுள்ளார்கள். ('ரெட்' என்றால் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் அவரை வைத்து படம் பண்ண வேண்டாம் என செய்தியை கூறுவது)
தற்போது மணிரத்னம் அடுத்து இயக்கவுள்ள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிம்பு. இதன் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் தொடங்கவுள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தினர் மணிரத்னத்திடம் நிலைமை விளக்கி பேசியுள்ளார்கள். இதனால் சிம்புவை மாற்றவுள்ளாரா அல்லது அவரை வைத்தே படப்பிடிப்பு தொடங்கவுள்ளாரா என்பது விரைவில் தெரியவரும். வேறு எந்த படத்திலும் சிம்பு ஒப்பந்தமாக முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதால், சமூகவலைத்தளத்தில் அவரது ரசிகர்கள் தயாரிப்பாளர் சங்கத்தை கடுமையாக சாடி கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த சர்ச்சைத் தொடர்பாக சிம்பு தரப்பில் விசாரித்தபோது, "’அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் தயாரிப்பாளர் பேசியபடி சம்பளம் தரவில்லை. அவ்வாறு இருக்கையில் படப்பிடிப்புக்கு வரவில்லை என்று கூறுவது தவறு. அவர் கூறிய தேதியில் வெளியிட வேண்டாம் என்று சிம்பு வலியுறுத்தினார். அதையும் அவர் ஏற்கவில்லை.
'வாலு' மற்றும் 'அச்சம் என்பது மடமையடா' என முந்தைய படங்களை எடுத்துக் கொண்டாலும் சிம்புவுக்கு தான் நஷ்டம். எதற்கெடுத்தாலும் சிம்புவே நஷ்டமடைந்து கொண்டிருப்பது எந்தவிதத்தில் நியாயம். ஒவ்வொரு முறையும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டு, இறுதியில் சிம்புவே பணத்தை விட்டுக் கொடுப்பது அல்லது சம்பளத்தைக் குறைத்துக் கொள்வது அல்லது அவரே வெளியீடு என்ற நிலைக்கு தள்ளப்படுவது என தொடர்ச்சியாக நடந்து வருகிறது.இது குறித்த விரிவான விளக்கத்தை அவர் தரப்பில் வெளியிடுவார்" என்று தெரிவித்தார்கள்.
ஆனால், தயாரிப்பாளர் சங்கமோ முறையான விளக்கம் வரும் வரை 'ரெட்' போடப்பட்டதை எடுக்கப் போவதில்லை என்பதில் தெளிவாக இருந்து வருகிறது. அன்புசெழியன் பிரச்சினை முடிவுக்கு வந்தவுடன், சிம்பு, த்ரிஷா மற்றும் வடிவேலு மூவருக்குமான பிரச்சினையை கையில் எடுக்க தீர்மானித்திருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT