Published : 06 Aug 2023 05:15 AM
Last Updated : 06 Aug 2023 05:15 AM

திரை விமர்சனம்: வெப்

ஐ.டி. துறையில் பணியாற்றும் அபி (ஷில்பா மஞ்சுநாத்), மகா (ஷாஸ்வி பாலா), நிஷா (சுபாப்ரியா மலர்) மூவரும் பார்ட்டிக்கு செல்வது, மது அருந்துவது, போதை மருந்து உட்கொள்வது என்று பொழுதைக் கழிக்கிறார்கள். ஐடி பணியில் திறமை மிக்கவர்களாக இருந்தாலும் வேலை அழுத்தம் காரணமாக அலுவலகத்திலேயே போதை மருந்து உட்கொள்ளும் அளவுக்கு அப்பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார்கள். தங்கள் சக ஊழியர்கள் தீபா, விக்ரம் ஆகியோரின் திருமணத்தைக் கொண்டாடுவதற்காக ஒரு நாள், பார்ட்டிக்கு செல்கிறார்கள். மது போதையில் இருக்கும் தீபா உட்பட நான்கு பெண்களும் மர்ம நபரால் (நட்டி என்கிற நட்ராஜ்) கடத்தப்படுகிறார்கள். ஒரு பாழடைந்த வீட்டுக்குள் நாள்கணக்கில் அடைத்துவைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். அங்கு ஏற்கெனவே கடத்தி வைக்கப்பட்டிருக்கும் இன்னொரு பெண், துன்புறுத்தப்படுகிறார். அங்கிருந்து தப்பிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியடைகின்றன. காவல்துறையும் இவர்களை மீட்க முடியாமல் திணறுகிறது. அவர்கள் ஏன் கடத்தப்பட்டார்கள், அவர்களுக்கு இறுதியில் என்ன ஆனது? என்கிற கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதிப் படம்.

அறிமுக இயக்குநர் ஹாரூண் இயக்கியிருக்கும் இந்தப் படம், ஐடி போன்ற அதிக ஊதியம் தரும் பணிகளில் இருப்போர் மது, போதை மருந்து உள்ளிட்ட தீய பழக்கங்களுக்கு அடிமையாவது குறித்த அக்கறையை வெளிப்படுத்தி இருக்கிறது. அதே நேரம் இந்தப் பிரச்சினை குறித்து பார்வையாளர்களிடம் உரிய தாக்கம் செலுத்தும் வகையிலான திரைக்கதை அமைக்கத் தவறியிருக்கிறார்.

ஐடி ஊழியர்கள் என்றாலே பார்ட்டிக்கு செல்வது, நடனம் ஆடுவது, மது அருந்துவது ஆகியவைதான் என்னும் போலியான பிம்பத்தைத் தமிழ் சினிமா தொடர்ந்து கட்டமைத்துவருகிறது. இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல என்றாலும் ஐடி துறை பணி தொடர்பான அழுத்தங்களையும் அந்தப் பணியில் இருப்போர் செலுத்தும் கடின உழைப்பையும் தொடக்கக் காட்சிகளில் பதிவு செய்திருப்பது ஆறுதல் . வாழ்க்கையைத் தன் போக்கில் வாழும் 3 பெண்களும் புதிதாகத் திருமணமான பெண்ணும் திடீரென்று கடத்தப்படும்போது ஏற்படும் பதற்றம் பிறகு வரும் காட்சிகளில் தொய்வடைகிறது. இரண்டாம் பாதியில் சொல்லப்படும் கடத்தல்காரனின் முன்கதையில் பெரிய தாக்கம் இல்லை. இறுதியில் வெளிப்படும் 'ட்விஸ்ட்’ சற்று ஆச்சரியம் தந்தாலும் முழுமையான திரைப்படத்துக்கான நிறைவைத் தரத் தவறுகிறது. மது, போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டவர்களுக்கு இப்படிப்பட்ட ‘சிகிச்சை’ அளிப்பது சட்டப்படி சரியானதா என்கிற கேள்வியும் எழுகிறது.

மேலும் போதை அடிமைகளாக 3 பெண்களை மட்டுமே காண்பித்திருப்பதும் பிரச்சினைக்குரியது. ஆண்கள் இவற்றைச் செய்யவில்லையா என்கிற கேள்வி எழுப்பும்போது “ஆண்கள் தற்கொலை செய்துகொண்டால் நீங்களும் தற்கொலை செய்துகொள்வீர்களா?” என்று எதிர்கேள்வி கேட்பது ஏற்புடையதாக இல்லை. மதுப்பழக்கம், போதை மருந்து ஆகியவை ஆண்கள், பெண்கள் இருவருக்குமே தீங்கு விளைவிப்பவை என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கலாம்.

ஷில்பா மஞ்சுநாத் சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் தன் அம்மாவை நினைத்து கண்ணீர் சிந்தும் காட்சியில் உணர்வுபூர்வமாக பார்வையாளர்களால் ஒன்ற முடிகிறது, ஷாஸ்வி, சுபாப்ரியா ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். சைக்கோத்தனமான வில்லன் கதாபாத்திரம் நட்டிக்குப் பொருந்தவில்லை. இறுதிப் பகுதியில் மட்டுமே அவரை ரசிக்க முடிகிறது. கார்த்திக் ராஜா இசையில் பாடல்கள் சுமார். பின்னணி இசை பரவாயில்லை.

மது, போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வைத் தர முயன்றிருக்கும் ‘வெப்’ பலவீனமான திரைக்கதையால் தன் இலக்கை அடையத் தவறுகிறது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x